வெள்ளி, 28 மார்ச் 2008 (20:16 IST)
சின்ன வயது காதலால் கம்பிக்குப் பின்னால் போன இன்பாவின் கதை. பால்யத்தில் ஏற்பட்ட பருவ அதிர்ச்சியால் ஷாமிற்கு பெண்கள் என்றாலே அலர்ஜி. அவரை காரணமே இல்லாமல் காதலிக்கிறார் சினேகா.
ஒரு கட்டத்தில் பட்டுப்போன காதல் ஷாமிடம் மொட்டவிழ்கிறது. காதலை வேரறுக்க நினைக்கும் அண்ணன், குறுக்கு வழியில் தாலிகட்ட நினைக்கும் வில்லன் என இடையூறுகளை தாண்டி காதல் ஜோடி ஒன்று சேர்ந்ததா இல்லையா என்பது க்ளைமாக்ஸ்.
பெயரில் இருக்கும் இன்பம் படம் பார்ப்பவர்களுக்கு கிடைக்கவே கூடாது என கங்கணம் கட்டி உழைத்திருக்கிறார் இயக்குனர். கஞ்சா கருப்பின் காமெடி காட்சியிலும் துன்பமே மிஞ்சுகிறது.
படத்தின் எந்த கதாபாத்திரமும் உயிர்ப்புடன் இல்லை. தாடி வைத்தால் வரும் சோகம் தவிர ஷாமிடம் வேறு உணர்ச்சிகள் மிஸ்ஸிங். பாடல் காட்சியிலும் ரேஷன் அளவுக்கே சிரிக்கிறார்.
பாடல் காட்சிகளில் சினேகா ஜிலீர் நயாகரா. அண்ணனிடம் கோபப்படும் அடுத்த கணமே, எழுபது எம்எம் சிரிப்புடன் பேசும்போது சிண்டை பிடித்துக் கொள்ளலாம் போலிருக்கிறது. அந்தளவுக்கு கந்தலான கதாபாத்திர வடிவமைப்பு.
தங்கை சினேகாவிடம் வம்பிழுக்கும் மாணவனை புரட்டி எடுக்கும் வழக்கமான அண்ணன் அருண் பாண்டியன். மாடுலேஷனே இல்லாத குரல். எல்லா உணர்ச்சிகளுக்கும் முகபாவம் என படுத்தி எடுக்கிறார். படத்தில் பூர்ணிதா இடம் பெறும் பிளாஷ்பேக் மட்டும் சின்ன ஆறுதல்.
இசை புதுமுகமாம். அடுத்தப் படத்திலாவது நல்ல இசைக்கு அவர் முயல வேண்டும். கேமரா சைத்ரிலோக். இந்த கதைக்கு இதுபோதும் என்று நினைத்திருப்பார் போல.
யதார்த்தமெனும் ரன்வேயில் மற்றவர்கள் பிளைட் ஒட்டிக் கொண்டிருக்கும் போது இயக்குனர் எஸ்.டி.வேந்தன் கட்டவண்டி ஓட்ட முயன்றிருக்கிறார். அதுவும் கடையாணி கழன்ற கட்டவண்டி. பார்ப்பவர்களின் அச்சு முறிந்து விடுகிறது.