வெள்ளி, 28 மார்ச் 2008 (20:11 IST)
கையிருப்பு ஒன்றேகால் மணி நேரத்துக்கான கதை. அதையே இரண்டரை மணிநேரம் எடுக்கச் சொன்னால் இயக்குனர் என்ன செய்வார்? இடைவேளை வரை இலக்கே இல்லாமல் செல்கிறது படம். அப்புறம்? வட்டியும் முதலுமாக சேர்த்து வைத்து தீப்பொறி கிளப்புகிறார்கள்.
தாத்தாவின் நாடி நரம்பெல்லாம் நடிக்கும் பேரன் சிவாஜிக்கு? ஆட்டத்திலும், அடிதடியிலும்தான் சூடுகிளப்புகிறார். நடிப்பதற்கு வாய்ப்பேயில்லாத ஆக் ஷன் கதை. உட்கார்ந்த இடத்திலிருந்தே அங்கே வா இங்கே வா என ஓட வைக்கும் வில்லனை நினைத்து கோபத்தில் வெடிக்கும் போதும், தங்கையின் வெட்டப்பட்ட கைவிரல் பார்த்து கதறும் போதும் நம்பிக்கை அளிக்கிறார்.
சிவாஜியின் தாய், தங்கை, காதலியை கடத்தி வைத்திருக்கும் வில்லன் யார் என்ற சஸ்பென்ஸை சரியாக நகர்த்தி போவதில் சபாஷ் பெறுகிறார் இயக்குனர். கோயிலில் ஹீரோ குண்டு வைப்பதும், தனியாளாக அவரே அதை எடுப்பதும் எல்லாம் காதுலபூ. குருவி தலையில் பனங்காய் ஓ.கே. அறிமுக நடிகர் சிவாஜியின் கேரக்டரோ பாறாங்கல்!
சோடா கம்பெனி ஓனரின் மகளாக வரும் கவுரி முஞ்சால் பாடல் காட்சிகளில் நுரைக்கிறார். மற்றபடி திரையை நிறைக்கிறார். பாதி படத்துக்கு மேல் வாயில் பிளாஸ்தி ஓட்டி கட்டிப் போடுவதால் நாம் தப்பித்தோம்.
காமெடிக்கும் காமநெடிக்கும் என்ன வித்தியாசம் என்று விவேக்கிற்கு உடனடியாக யாராவது கிளாஸ் எடுப்பது நலம். அவரது லூட்டி பல இடங்களில் நாட்டி. டெசிபலை குறைத்து ரசிகர்களை சிரிக்க வைப்பது எப்படி என அவர் சிந்திக்கும் வேளை வந்து விட்டது.
கனல் கண்ணனின் சண்டையும் ஆர்.டி.ராஜசேகரின் கேமராவும் கைகோர்த்து செய்யும் ஜாலம் படத்தின் பலம். பிரசன்ன சேகரின் இசை சராசரி. ஏண்டா ராட்சதா பாடல் இளமை திருவிழா.
முன்பாதியில் விட்டதை பின்பாதியில் விரட்டி பிடித்திருக்கிறார் ஏ.வெங்கடேஷ். சிங்கக்குட்டி வழக்கமான கமர்ஷியல் உறுமல்!