வைத்தீஸ்வரன்!

சனி, 22 மார்ச் 2008 (19:11 IST)
மறுபிறவி உண்மையா? உலகம் இதுவரை விடை தெரியாமல் திணறிக் கொண்டிருக்கும் இந்த சுவாரஸ்யமான கேள்விதான் வைத்தீஸ்வரனின் மைய இழை. மறுபிறவி குறித்து சுவாரஸ்யமாக ஏதாவது சொல்லியிருப்பார்கள் என்று நினைத்தால் ஏமாற்றம்!

அதர்மத்தை அழிக்கும் ஹீரோ. அட்டூழியம் மட்டுமே செய்யும் வில்லன். காதலிப்பதற்காகவே வரும் கதாநாயகி. அழுவதற்கென்றே பிறப்பெடுத்த அம்மா. கதை எதுவாக இருந்தாலும் தமிழ் சினிமாவின் மை கதாபாத்திரங்கள் இப்படியேதான் இருக்கும். மாறவே மாறாது. வைத்தீஸ்வரனும் அப்படியே!

மருத்துவராக வரும் சரத்குமாரின் கோபமும், காதலும் வழக்கம் போல. மருத்துவர் என்பதற்குப் பதில் போலீஸ் அதிகாரி என்று காட்டியிருந்தாலும் இப்படியேதான் நடித்திருப்பார்.

மறுபிறவி உண்மையா என்பதை விளக்குவதைவிட, இறந்துபோன சிறுவன் சரவணன், யாராக மறுபிறவி எடுத்திருக்கிறான் என்பதை காட்டுவதில் சிரத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர். ரியாஸ்கானா, மகாநதி சங்கரின் தம்பியா இல்லை, இல்லை சரத்குமாரா என சஸ்பென்ஸ் தாயம் உருட்டும் போது சபாஷ் பெறுகிறார். படத்தை சுவாரஸ்யப்படுத்தும் ஒரே அம்சமும் இதுதான்.

சென்டிமெண்ட் இல்லை என்ற குறையைத் தீர்க்க வினஸ் பிரசாத் கதாபாத்திரம். மகன் மறுபிறவி எடுத்து வருவான் என விஜயகுமாரின் சொல்லை நம்பி மெய்யை வருத்தும் வேடம். தற்கொலைக்கு முயலும் வேளை சரத்குமார் அம்மா என்று அழைப்பதோடு அவரது கதாபாத்திரம் முற்றுப் பெறுகிறது.

ஷாயாஜி ஷிண்டே அடாவடி அரசியல்வாதி. கடைசியில் கோயில் தீர்த்தமே விஷமாக அவரை தீர்த்துக் கட்டுகிறது.

எந்தப் படத்துக்கும் பொருந்தக்கூடிய சண்டை மற்றும் பாடல் காட்சிகள். எஸ். சரவணன், எம்.வி. பன்னீர்செல்வத்தின் கேமரா, உறுத்தாத அழகு. ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார் என்பது தவிர, எடுத்துச் சொல்ல எதுவும் இல்லை.

மேக்னா நாயுடு டி.வி. காம்பியராக இருந்து தேவையேற்படும் போது திடுமென நிருபராகிறார். திரைக்கதையில் இதுபோன்ற லாஜிக் மீறல்கள் நிறைய.

நினைத்துப் பார்க்கவோ, குறித்து வைக்கவோ வைத்தீஸ்வரனில் உதுவும் இல்லாதது, படத்தின் முக்கியமான பலவீனம்.

வெப்துனியாவைப் படிக்கவும்