ராஜ்கபூர் படம் இயக்கி நிறைய நாட்களாகிறது. பத்து படத்துக்கான கதையை பதினான்கு ரீலில் வம்பாக திணித்திருப்பதிலேயே இது தெரிந்து விடுகிறது.அடிதடி பார்ட்டியான உதய்கிரணுக்கு தியா மீது காதல். சொல்லி வைத்தாற் போல தியாவின் அண்ணன் ராஜ்கபூர் ஒரு போலீஸ் அதிகாரி. இந்த முட்டலும் மோதலும்தான் கதையா என சலித்து உட்காரும் போது இனிய சர்ப்ரைஸாக, உதய் கிரணின் அப்பா அவர் நினைப்பதுபோல் லிவிங்ஸ்டன் அல்ல, அவரிடம் பைத்தியத்துக்கு சிகிச்சை பெறும் சத்யராஜ் என திரைக்கதையில் திடீர் ட்டுவிஸ்ட்.
இதற்குப் பிறகான கதையை சத்யராஜ் கவனித்துக் கொள்கிறார். தேர்தல் அதிகாரியாக ஆளும்கட்சி விஜயனை எதிர்த்து அவர் போடும் திட்டங்கள் ஜோர். தோற்றால் புடவை கட்டிக் கொள்வேன் என்ற விஜயனின் சபதத்தை கிளைமாக்ஸில் சரியாக பயன்படுத்தியது இயக்குனரின் திறமை.
தேர்தல் அதிகாரியாகவும், மனநோயாளியாகவும் ஒரே படத்தில் இரண்டு வித நடிப்பை வெளிப்படுத்த சத்யராஜுக்கு வாய்ப்பு. தேர்தல் அதிகாரியின் மிடுக்கை, நான் யார் நீ யார் பாட்டுப்பாடும் மனநோயாளியின் துடுக்கு ஓவர் டேக் செய்கிறது.
சத்யராஜின் மனநோயை குணமாக்க செல்லும் இடத்தில் சரியாக விஜயனும் மனநோய் சிகிச்சைக்காக வருவதும், சத்யராஜின் மகன் உதய் கிரணும், விஜயனின் மகன் ரியாஸ்கானும் பரஸ்பரம் மோதிக் கொள்வதும் அமெச்சூர் நாடகம்.
தியாவின் எல்லை கவர்ச்சியோடு முடிந்து விடுகிறது. இதுவரை சமத்து பையனாக நடித்து வந்த உதய் கிரணின் ஆக்ரோஷ நடிப்பு ஆவரேஜ் ரகம்.
டி.இமானின் இசையில் இரைச்சலே அதிகம். சண்டைக் காட்சிகளை ஜவ்வாக இழுத்திருப்பது போர். பிரபல தேர்தல் அதிகாரியை லிவிங்ஸ்டனுக்கு தெரியாமலிருப்பது, அரசு தேர்தல் அதிகாரி குறித்து விசாரிக்காமலிருப்பது போன்ற திரைக்கதையின் ஓசோன் ஓட்டைகள் படம் பார்க்கும் போதே சுளீரென்று சுடுகிறது.
காதல், சென்டிமெண்ட், காமெடி, ஆக்சன் என்று அறுசுவை விருந்துதான் ராஜ்கபூரின் நோக்கம். அளவு அதிகமாகி அஜீரணம் ஆனதுதான் சோகம்!