தோட்டா!

வியாழன், 6 மார்ச் 2008 (15:52 IST)
webdunia photoWD
போலீஸ் அதிகாரி ரவுடியை உருவாக்குகிறார். அந்த ரவுடி ஒரு போலீஸை உருவாக்குகிறான். பிஸ்டல் அளவுக்கு கையடக்க கதை. அதில் காதல், சென்டிமெண்ட், ஆக்சன் கலந்து தோட்டாவாக சீறிவிட முயன்றிருக்கிறார் இயக்குனர் செல்வா.

ஜீவனுக்காகவே உருவாக்கப்பட்டது போல் கச்சிதமாக பொருந்துகிறது தோட்டா எனும் ரவுடி கதாபாத்திரம். போலீஸ் அதிகாரியாக வரும் சம்பத்ராஜ் விரல் நீட்டும் ஆளின் உயிர் எடுக்கும் வேலை ஜீவனுடையது. அலட்டலே இல்லாமல் செய்திருக்கிறார். உணர்ச்சிகளை அதிகம் வெளிப்டுத்தாத ஜீவனின் முகமே தோட்டா கதாபாத்திரத்தின் ஜீவன்.

போலீஸ் அதிகாரி படுக்கைக்கு அழைக்கும் போது பதறுவதும், ஜீவன் ரவுடி என்பது தெரிந்ததும் உள்ளுக்குள்ளே கதறுவதுமாக ப்ரியாமணிக்கு நடிக்க நாலைந்து காட்சிகள். ரசிர்களை கவர்ச்சியில் நனைய வைக்க பாடல் காட்சிகள். இரண்டிலு'ம் ப்ரியாமணிக்கு பாஸ் மார்க்.

ப்ரியாமணி மீது ஆசிட் அடிக்க வந்த இடத்தில் அவர் சிறு வயதில் தனக்கு உதவி செய்தவரின் மகள் என்பது ஜீவனுக்கு தெரிய வந்ததும், திரும்பச் சென்று பணம் கொடுத்து ஆசிட் வீச சொன்னவன் மீதே ஆசிட் வீசுவதும்...

ப்ரியாமணியை போலீஸாக்குவதற்காக கமிஷனர் சம்பத்ராஜை ஜீவன் பகைத்துக் கொள்வதும்...

இறுதிக் காட்சியில் தன்னை சுட்டுக் கொல்லும்படி ஜீவன் ப்ரியாமணியிடம் கதறுவதும்...

திரைக்கதையை சுவாரஸ்யப்படுத்தும் இடங்கள். ஜீவன் பிரியாமணி, சம்பத்ராஜ் கதாபாத்திரங்களில் இயக்குனர் காட்டிய கவனம் பிற கதாபாத்திரங்களில் மிஸ்ஸிங்.

ப்ரியாமணியை போலீஸ் வேலையில் சேர்க்க மத்திய மந்திரியின் உயிரை எடுப்பது போன்ற காதுலப் பூ சமாச்சாரங்கள் நிறைய.

பாலமுருகனின் ஒளிப்பதிவும், ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு பலம்.

சின்ன வயதில் தாயையும், தன்னையும் வீட்டை விட்டு துரத்திய ராஜ்கபூரை தனியாக அழைத்து ஜீவன் விஷம் வைத்துக் கொல்வது அதிர்ச்சி. தோட்டா கதாபாத்திரத்தை உருவாக்கியதில் சபாஷ் பெறும் இயக்குனர், சரண்ராஜ் போன்ற உதிரி கேரக்டர்களில் கோட்டை விடுகிறார்.

திரைக்கதையின் சின்னச் சின்ன ஓட்டைகளை மறந்தால், தோட்டாவை ரசிக்கலாம்!

வெப்துனியாவைப் படிக்கவும்