திரைக்கதைக்காக தேசிய விருது வாங்கிய அகத்தியனின் புதிய படம் நெஞ்சத்தைக் கிள்ளாதே. விக்ராந்த், பாரதி, மணிவண்ணன், சரண்யா, யுகேந்திரன், விக்ரமாதித்யா நடித்துள்ளனர்.
வேண்டுமென்றே பிரச்சனைகளில் மாட்டி, வாழ்க்கையைச் சுவாரஸ்யப்படுத்தும் இளைஞன். அதிகம் அறிமுகம் இல்லாத இளைஞனுடன் காதல் செய்யக்கூடாது என்ற நிபந்தனையுடன் ரிசார்ட்டில் தங்கும் மாடர்ன் யுவதி. சுவாரஸ்யமான இந்த இரு கதாபாத்திரங்களை வைத்து திரைக்கதையைக் கோர்த்திருக்கிறார் அகத்தியன்.
ஹோட்டலில் சாப்பிட்டு பணம் இல்லாமல் காவலர்களிடம் மாட்டிக் கொள்கிறார் விக்ராந்த். அவர், தொழிலதிபர் மணிவண்ணனின் மகன். இப்படி செய்வது அவரது ஹாபி என்று தெரிய வரும்போது சுவாரஸ்யம் துளிர் விடுகிறது.
தங்கையின் காதலை ஆதரிக்கும் போதும், தனது அப்பாவிற்கு வேறொரு குடும்பம் இருப்பதை அறிந்து அதை அனுசரணையாக அணுகும் போதும், நேர்கோட்டில் செல்லும் விக்ராந்தின் கதாபாத்திரம், பாரதியின் காதலைப் புறக்கணிக்கும் போது பிசிறடிக்கிறது.
ஆவணப்பட இயக்குநராக வருகிறார் பாரதி. விக்ராந்த் அவரது காதலைப் புறக்கணித்த பிறகு பாரதியின் நடிப்பில் புது மெருகு. அலட்டாமல் அப்ளாஸ் பெறுகிறார்.
விக்ராந்தின் பேச்சு, நடை, பாவனை அனைத்திலும் விஜய்யின் சாயல். விஜய் போல் நடிக்க விஜய்தான் இருக்கிறாரே!
மணிவண்ணன், யுகேந்திரன், சரண்யா, விக்ரமாதித்யா என அனைவரும் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள்.
காதல் பற்றிய நீள நீளமான வசனங்கள், தொய்வான காட்சிகள், மெதுவாக நகரும் காட்சிகள் என படம் நெஞ்சத்தைக் கிள்ளாமல் போவதற்கான காரணங்கள் நிறைய.
கேரளா ரிசார்ட் காட்சி, விக்ராந்தின் தண்ணீர் ஆணா, பெண்ணா ஆராய்ச்சி என பழைய அகத்தியன் பளீரிடும் சில காட்சிகளும் உண்டு.
கதைக்கேற்ற ஒளிப்பதிவும், கதை பாதிக்காத பிரேம்ஜியின் இசையும் ஆஹா இல்லை என்றாலும் அய்யோ எனக் கஷ்டப்படுத்தவும் இல்லை.
விக்ராந்தின் கதாபாத்திர உருவாக்கத்தில் அகத்தியனின் காதல் கவிதை ஹீரோவின் பாதிப்பு தெரிகிறது.
திரைக்கதைகளின் ஓட்டைகளை செப்பனிட்டிருந்தால் இன்னொரு காதல் கோட்டை கிடைத்திருக்கும்.