"கலையை ஒரு நதியென உருவகித்துக் கொண்டால் மேற்பரப்பில் நீந்துகின்ற கலைஞர்களும் உள்ளனர். அதேவேளை அடியாழத்தில் சுழித்தோடும் கலைஞர்களும் உள்ளனர். இந்த ஆழச் சுழித்தோடும் கலைஞர்களின் வரிசையில் இருக்கவே நான் விரும்புகிறேன். ஏனெனில் மனிதாபிமானம், உண்மை, நீதி என்பவற்றில் எப்போதுமே நான் பற்றுறுதி கொண்டுள்ளேன்".
- இயக்குனர் பிரசன்ன விதானகே.
இலங்கையில் போர் எப்போதும் இல்லாத அளவிற்கு தீவிரமடைந்துள்ளது. அரச படைகளுக்கும், புலிகளுக்கும் நடக்கும் மோதலல் சராசரி மக்கள் தங்களது அடிப்படை உரிமைகள், வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்து நிர்கதியாக்கப்படுள்ளனர். அதிகார மையங்களின் ர9த்தமோகத்தின் முதல் பலி அப்பாவிகளின் வாழ்க்கை என்பது இலங்கையில் நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது.
மகிந்த ராஜபக்சேயின் போர் அணுகுமுறைக்கு சிங்கள சராசரி மக்களிடமும், அறிவு ஜீவிகளிடமும் ஆதரவு இல்லை. அவர்கள் போரை வெறுக்கிறார்கள். தனது அரசுக்கு சவாலாக இருக்கும் இந்த எதிர்ப்பை ராஜபக்சே கண்டித்திருக்கிறார். ராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சிங்கள குடிகளுக்கு அவர் எச்சரிக்கை விடுத்த செய்தி இரண்டு நாட்களுக்கு முன்பு பத்திரிக்கைகளில் வெளிவந்தன.
இலங்கை அரசுக்கு எதிரான சிங்கள மக்களின் இந்த மனநிலையை அழுத்தமாக பதிவு செய்த திரைப்படம் பிரசன்ன விதானகேயின் 'பெளர்ணமி இரவில்' (புரஹந்த களுவர).
அடிப்படை வசதிகள் இல்லாத விவசாயிகளும், விறகு வெட்டிகளும் நிறைந்த சிங்கள கிராமம் ஒன்றில் வசிப்பவர் வன்னிஹாமி என்ற கிழவர். முழுதாக பார்வையிழந்தவர். கிழவரின் ஒரே மகன் பண்டாரா ராணுவ வீரனாக யுத்த முனையில் இருக்கிறான்.
ஒரு நாள் கிழவரின் வீட்டிற்கு ராணுவ வாகனம் ஒன்று வருகிறது. அதிலிருந்து இலங்கையின் தேசிய கொடி போர்த்திய சவப்பெட்டி இறக்கப்படுகிறது. கிழவர் வன்னிஹாமின் மூத்த மகள் தனது தம்பியின் முகத்தை ஒருமுறையேனும் பார்க்க வேண்டும் என கெஞ்சுகிறாள். சவப்பெட்டியுடன் வந்த ராணுவ அதிகாரிகள், சவப்பெட்டியை மூடி ராணுவ முத்திரை வைத்திருப்பதால் மூத்த மகளின் கெஞ்சலை நிராகரிக்கின்றனர்.
சடங்குகள் முடிந்து சவப்பெட்டி புதைக்கப்பட்டதற்கு மறுநாள் கிழவருக்கு அவரது மகன் எழுதிய கடிதம் ஒன்று வருகிறது. விரைவில் விடுமுறையில் ஊருக்கு வருவதாகவும், தங்கையின் திருமணத்தை அப்போது முடிப்பதாகவும் அதிலுள்ள செய்தியை அறிந்துகொள்ளும் கிழவர். தனது மகன் இறக்கவில்லை இன்னும் உயிருடன் இருப்பதாக நம்புகிறார். அந்தக் கடிதம் அவரது மகன் இறப்பதற்கு முன்னால் எழுதப்பட்டது என்று அவரது மகள்கள் கூறுவதை கிழவர் ஏற்றுக் கொள்வதாயில்லை.
இந்நிலையில், பண்டாராவின் உடன் பணிபுரிந்த சக வீரர்கள் சிலர் தங்களுக்குள் சேகரித்த சிறு தொகையுடன் கிழவரை காண வருகிறார்கள். பண்டாராவின் மூன்றாவது மாத நினைவு நாள் செலவிற்கு கொடுப்பதற்கே அந்தத் தொகையை கொண்டு வருகிறார்கள்.
webdunia photo
FILE
இந்தச் சம்பவம், மகன் இறக்கவில்லை என்ற கிழவரின் நம்பிக்கையை அசைத்து விடுகிறது. அவர் ஒரு முடிவுடன் மண்வெட்டியால் மகன் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டத் தொடங்குகிறார். யார் தடுத்தும் கிழவரின் வேகம் மட்டுப்படவில்லை. ஒருகட்டத்தில் கிழவரின் இளைய மகளின் காதலன் கிழவரிடமிருந்து மண்வெட்டியை வாங்கி தானே சவக்குழியை தோண்டுகிறான்.
ராணுவ முத்திரையை உடைத்து, சவப்பெட்டியை திறக்கும் முன் குழந்தைகளை விலகிப் போகச் சொல்கிறார்கள். பெட்டி திறக்கப்படுகிறது. உள்ளே ஒரு கல்லும் இரண்டு காய்ந்த வாழைத் தண்டுகளும் இருக்கின்றன.
'யுத்தத்தில் இறந்த ராணுவ வீரனின் சவப்பெட்டியை அவனது ஊரார் திறந்து பார்த்தபோது அதில் வாழைத் தண்டும் மாட்டு இறைச்சியுமே இருந்தது' என்ற பத்திரி¨ செய்தியின் அடிப்படையில் 'பெளர்ணமி இரவில்' படத்தை இயக்கியிருந்தார் வீதானகே.
யுத்தமானது சராசரி மக்களின் மீது 'திணிக்கப்பட்ட' ஒன்று என்பதை எந்த பிரச்சார அலங்காரமும் இன்றி இப்படம் பதிவு செய்கிறது. போர்முனையில் நிறுத்தப்படுகிற ஒவ்வொரு சிங்களனும் ஏழை விவசாயிகளும், தொழிலாளிகளுமே என்பதை இப்படம் தெளிவுற நிறுவுகிறது.
படத்தில் கிழவரின் இளைய மகளின் காதலன், பண்டாராவின் மரணம் நிகழ்ந்த சில நாட்களிலேயே ராணுவத்தில் சேர ஆயத்தமாமகிறான். காரணம் தேசபக்தியோ வேறு எதுவோ அல்ல, வறுமை! இந்த காட்சியில் அரசியல்வாதிகள் பேசும் தேசபக்தி விதானகேயால் கட்டுடைக்கப்படுகிறது.
படத்தில் வரும் கிராமத்து புத்த பிட்சு நீங்கலாக யாரும் போர் மீதுஐ ஆர்வமாகவோ, ராணுவத்தின் மீது மரியாதையாகவோ இருப்பதாக காட்டப்படவில்லை. சிங்கள ராணுவம் தனது குடிகளை எவ்வாறு ஏமாற்றுகிறது, போர் சராசரி மக்களின் வாழ்வை எப்படி குலைத்துப் போடுகிறது என்பதை கலை அமைதியுடன் வெளிப்படுத்திய இப்படம் இலங்கை அரசால் தடை செய்யப்பட்டது. (இந்தியாவில் ராணுவத்தை விமர்சிக்கும் இப்படியொரு கதையை எண்ணிப் பார்க்கக்கூட முடியாது என்பது கவனிக்கத்தக்கது).
இதனிடையில் உலகத் திரைப்பட விழாக்களில் 'பெளர்ணமி இரவில்' பல விருதுகளை வென்றது. ஒரு வருடம் விதானகே நீதிமன்ற படிகள் ஏறிய பிறகு படத்திற்கான தடை இலங்கையில் விலக்கப்பட்டது.
மேலும், இலங்கையின் ஐந்து தேசிய விருதுகளையும் நான்கு'சரசவிய' விருதுகளையும் வென்றது.
போர் என்பது வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல. அது இருபக்கமும் கூரான வாள். இரு தரப்பிற்குள்ளும் ஆழ ஊடுருவி மாறாத வடுக்களை ஏற்படுத்தக் கூடியது. சராசரி ஏழை மக்களிடம் போருக்கான முனைப்பு ஏதுமில்லை. அவர்கள் போருக்கான சிந்தனையிலிருந்து வெகு தொலைவில் வாழ்கிறார்கள். அதே நேரம், அதிகார மையங்கள் முன்னெடுத்துச் செல்லும் போரால் பாதிக்கப்படும் முதற் ஆளாய் அப்பாவி மக்களே இருக்கிறார்கள்.