பீமா - விமர்சனம்

வியாழன், 24 ஜனவரி 2008 (11:19 IST)
webdunia photoWD
விக்ரம், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், ரகுவரன், ஆசிஷ் வித்யார்த்தி, சம்பத், தலைவாசல் விஜய், பாலா சிங் நடிப்பில் ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் லிங்குசாமி இயக்கியுள்ள படம். தயாரிப்பு ஸ்ரீ சூர்யா மூவிஸ் சார்பில் ஏ.எம். ரத்னம்.

போலிஸ் ஏட்டு பாலா சிங்கின் மகன் விக்ரம். சிறு வயதில் தன் அப்பாவை ரவுடிகள் தாக்குவதைப் பார்க்கிறார். அப்படிப்பட்ட ரவுடிகளையே அடித்து மிரட்டும் தாதாவாக பிரகாஷ்ராஜ் இருப்பதையும் பார்க்கிறார். பி.ராஜ் பெரிய ஹீரோ போலத் தெரிகிறார். அதைக் கண்டு தானும் அவரைப் போல வர கனவு காண்கிறார். வளர்ந்ததும் பிரகாஷ்ராஜிடம் சேர்ந்து அவர் கரத்தை வலுப்படுத்துகிறார்.

இடையில் த்ரிஷா மீது காதல். பிரகாஷ்ராஜின் வலதுகரம் போல இருந்து கொண்டு ரகுவரன் போன்ற எதிரிகளின் ஆட்களை துவம்சம் செய்கிறார். பத்து ஆட்களைக் கூட பீமன் போல பலத்துடன் மோதி வீழ்த்திவிடும் விக்ரம் மீது பிரகாஷ்ராஜுக்குத் தனிப்பாசம். காதலில் விழுந்த பிறகு குறி தப்புகிறது. தயக்கமும் குழப்பமும் விக்ரமுக்குள் புகுந்து கொள்கின்றன. இனி இது சரிபட்டு வராது விலகி செல்ல பிரகாஷ்ராஜிடம் அனுமதி கேட்கிறார். அவரும் ஓகே சொல்ல... விக்ரம் நிம்மதியாக எல்லாவற்றையும் விட்டு பிரியும் நேரம், காதலி த்ரிஷாவை பிரகாஷ்ராஜின் ஆள் ஒருவன் கொன்றுவிட, ஆவேசமாகிறார் விக்ரம்.

அதற்குள் ரகுவரன் ஆட்கள் பிரகாஷ்ராஜைக் குறிவைக்க, விக்ரம் எல்லாரையும் சுட்டு வீழ்த்தி காப்பாற்றுகிறார். கடைசியில் போலிஸ் சுற்றி வளைத்து எல்லாரையும் சுட்டுப் பொசுக்குகிறது. அனைவரும் இறக்கின்றனர்.

வன்முறை கையாள்பவனையே கடைசியில் கொன்றுவிடும் என்ற கருத்துடன் படம் முடிகிறது.

சின்னாவாக நடித்துள்ள பிரகாஷ்ராஜ் வழக்கம் போல அசத்துகிறார். முரட்டுத்தனத்தைக் காட்டுவதும் பத்மா பெயரைச் சொன்னால் உருகுவதும் அழகு. தன் பக்கபலமாக வந்து எதிரிகளைப் பந்தாடும் அழகை ரசிக்கும் விதம் ருசிகரம்.

சேகராக அதாவது பீமாவாக வரும் விக்ரம் தன் உடம்பை எடை கூட்டி கட்டு மஸ்தாக காட்டி கலக்குகிறார். பிரகாஷ்ராஜின் விசுவாசியாக வருகிறார். அணி வகுத்து வரும் எதிர்தரப்பு ஆட்களை அடித்து முறித்துப் போடுவதை நம்புகிறபடி உடல் வலுவைக் காட்டியிருக்கிறார். எதிரிகளுக்கு நெருப்பாக இருப்பவர் த்ரிஷாவைக் கண்ட நாள் முதல் ஐஸாக கரைவது ரசனையான நடிப்பு.

துப்பாக்கி வைத்து படார் படார் என்று சுடப் பயப்படாத துணிவும் காதலுணர்வில் நீர்க்குமிழிகளை உடைத்துப் பார்க்கிற கனிவும் ரசிக்கும்படியான முரண்.

விக்ரமின் ஊழைப்பைக் குறைத்து மதிப்பிட முடியாது. பெரியவராக ரகுவரன் வந்து வில்லத்தனம் செய்கிறார். போலிஸ் கமிஷனராக வரும் ஆசிஷ் வித்யார்த்தி ஏதோ சொல்லப் போகிறார் என்றால் ம்ஹூம். ஒரு பாட்டுக்கு ஷெரின் ஆடிவிட்டுப் போகிறார்.

வழக்கம் போல ரவுடியைக் காதலிக்கும் பெண்ணாக த்ரிஷா. வேறென்ன சொல்ல?

தாதாக்களின் கதைகள் ஆயிரம் பார்த்தாகிவிட்டது. நிழல் உலகைப் படம் பிடிக்கிறேன் என்று பல படங்களில் பார்த்ததையே காட்டி நகல் உலகம் என்று பேச வைத்து விட்டார் இயக்குநர் லிங்குசாமி.

நாட்டில் போலிசே இல்லையா என்று கேட்கிற அளவுக்கு ரவுடிகளின் அட்டகாசத்தைக் காட்டியிருப்பதும் காவல்துறையைக் கிள்ளுக்கீறையாகச் சித்தரித்திருப்பதும் டூமச். பாடல்கள் எல்லாமே இனிமை ரகம். ஆயினும் ஆக்ஷன் படத்திலிருந்து தனிமை பெற்று விடுகின்றன. படத்தின் பெரும்பகுதி மோதல் துரத்தல் சண்டைகள் என இருப்பதால் இயக்குநர் லிங்குசாமியா அ‌ல்லது கனல் கண்ணனா என்று சந்தேகம் வந்து விடுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்