சேரன், சினேகா, மெளலி, ஜெயராம், எம்.எஸ். பாஸ்கர். கஞ்சா கருப்பு, வினோதினி, மகாதேவன், டி.கே. கலா, சூப்பர் குட் லட்சுமணன், இளவரசு, மீசை முருகேசன், எஸ்.என். லட்சுமி நடிப்பில் எம்.எஸ். பிரபு ஒளிப்பதிவில் வித்யாசாகர் இசையில் கரு. பழனியப்பன் இயக்கியுள்ள படம். தயாரிப்பு ஞானம் பிலிம்ஸ்.
தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, சித்தப்பா, மாமா, மாமி, குழந்தைகள் என கலகலப்பான களையான குடும்பம் சேரனுடையது. கூட்டுக் குடும்பத்தின் முகவரியாக குதூகலத்தின் அடையாளமாக இருக்கும் குடும்பம் இது. வசதியான பாசமான குடும்பத்தின் ஒரே மகள் சினேகா. பிற மனிதர்களின் சகவாசமே சுகவாசம் என்று நினைக்கும் சினேகா அன்புக்கு ஏங்குபவர்.
கூடப் பிறந்தவர்கள் யாருமில்லை என்று தோழிகளை அழைத்து கூடவே வைத்துக் கொள்பவர். சினேகாவுக்கு சேரனை மாப்பிள்ளை பார்க்கிறார்கள். அந்த குடும்பத்து கலகலப்பில் லயித்தப் போன சினேகா, அந்த கூட்டுக் கிளிகளில் தானும் ஒருவராக விரும்புகிறார்.
இருபுறமும் பரஸ்பர சம்மதம், சந்தோஷம், சேரனைக் கைப்பிடித்த பூரிப்பு கூட்டுக் குடும்ப அன்பின் அரவணைப்பில் பெருமிதம் என்று சினேகா ஆனந்தத்தில் திளைத்துக் கொண்டிருக்கும்போது மின் வாரியத்தில் வேலை பார்த்துவரும் சேரனுக்கு பதவி உயர்வு கிடைக்கிறது. உடனே சினேகாவை அழைத்துக் கொண்டு அட்டகட்டிக்குப் போய் விடுகிறார்.
webdunia photo
WD
கூட்டுக் குடும்ப குதூகலம் கைவிட்டுப் போன வருத்தத்தில் சினேகா. அவரை தனிமை மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கிறது. மனித சஞ்சாரமற்ற ஏகாந்தம் அவரை பழைய நினைவுகளில் ஏக்கத்தில் தள்ளுகிறது. தூக்கம் தொலைகிறது. மெல்ல மனநோய்க்கு ஆளாகிறார். தன் ஜாலி சந்தோஷத்திற்கு குடும்பத்தின் கூட்டமே இடையூறாக இருக்கும் என்று நினைத்தவர் சேரன். தனிமை, சுதந்திரம் மகிழ்ச்சி தரும் என எண்ணி அட்டகட்டி வந்தவருக்கு மனைவி சினேகாவின் போக்கு அதிர்ச்சி தருகிறது. முடிவு என்ன என்பதே க்ளைமாக்ஸ்.
இப்படி ஒரு அழகான குடும்பத்தை ஆனந்தம் விளையாடும் வீடாக வடிவமைத்து பார்ப்பவர் கண்களில் ஏக்கம் பொங்க வைத்திருக்கும் கரு. பழனியப்பனுக்கு முதலில் கை குலுக்கலாம். அந்த செட்டிநாட்டு குடும்பம், பழக்கங்கள், திருமண ஏற்பாடுகள் எல்லாவற்றையும் அச்சு அசலாக காட்டி ஆவணப் படுத்தியிருக்கும் நேர்த்தி அழகு.
இவ்வளவு கதாபாத்திரங்களைக் காட்டி அத்தனையும் மனதில் நிற்க வைத்திருக்கிற இயக்குநரின் திறமை பளிச். சேரனையும் சினேகாவையும் அழகாகப் பயன்படுத்தியுள்ளார். குறிப்பாக சினேகா எல்லாரையும் தன் யதார்த்தமான நடிப்பால் காந்தமாகக் கவர்ந்துவிடுகிறார்.
webdunia photo
WD
முதல் பாதியில் கூட்டுக் குடும்ப கலகலப்பை பதிய வைத்த இயக்குநர் மறுபாதியில் சினேகாவின் தனிமை சோகத்தை புரிய வைத்துள்ள விதம் மிக நன்று.
ஓர் இயக்குநருக்குத் திறமையிருப்பின் எந்த நல்ல கருத்தையும் தன் படைப்பில் காட்ட முடியும் என்பதற்கு எம்.எஸ். பாஸ்கர், சூப்பர் குட் லட்சுமணன் உரையாடலில் திருப்புகழையும் இரட்டைப்புலவர் பாடலையும் இடம்பெற வைத்துள்ளதே சாட்சி.
கவிதை போல கதை சொல்ல முயன்று முழு வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர். பின் பாதியில் அட்டகட்டி மலையழகையும் அற்புதமாக பதிவு செய்து குளிர்ச்சியையும் சினேகாவின் தனிமையால் அவரது மனத் தளர்ச்சியையும் காட்டியுள்ள நேர்த்தி பாராட்டத்தக்கது.
சேரன், இளவரசு, கஞ்சா கருப்பு கூட்டணிக் காட்சிகள் யதார்த்தமான கலகலப்பு. குறிப்பாக கஞ்சா கருப்பு மணமகள் தேவை விளம்பரத்திற்கு சொல்லும் தகவல்கள் நாகரீகமான நகைச்சுவை.
டாக்டராக வரும் ஜெயராம் நல்ல டாக்டர். நினைவில் நிற்கிறார்.
படமே கவிதையாக இருக்கும்போது பாடல்கள் வேறு இனிமையாக கருத்தாக அமைந்து அழகுக்கு அழகு சேர்க்கின்றன. எம்.எஸ். பிரபுவின் கேமரா எதையும் அழகாகவே படம் பிடித்துள்ளது.
எல்லாரையும் நல்லவர்களாகப் படைத்து கத்தியின்றி ரத்தமின்றி காதல் விவகாரம் இன்றி அருவருப்பின்றி ஆபாசமின்றி ஓர் அருமையான படத்தை வழங்கி ரசிகர்களைக் கெளரவப்படுத்தியிருக்கிற இயக்குநர் கரு. பழனியப்பனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
webdunia photo
WD
கைவசமிருக்கும் பாராட்டுப் பூக்களை அவர் மீது பஞ்சமின்றி தூவலாம். காரணம் அவற்றைப் பயன்படுத்த பாராட்டும்படியான படங்கள் எப்போதாவதுதான் வருகின்றன.