அறிமுக நாயகன் ராஜா, ஷீலா, பிரகாஷ்ராஜ், சீதா, லிவிங்ஸ்டன், சோனா நாயர் நடிப்பில் தாஜ்மல் ஒளிப்பதிவில் ரஞ்சித் பரோட் இசையில் ஆனந்த் இயக்கியுள்ள படம். தயாரிப்பு காஸ்மிக் பிலிம்.
ஷீலா பள்ளி மாணவி. கோவையில் பத்தாம் வகுப்பு படிக்கிறார். தொழிலதிபர் பிரகாஷ்ராஜ் அன்பான அப்பா. சீதா பாசமான அம்மா. பள்ளி சார்பில் ஊட்டிக்கு சுற்றுலா செல்கிறார்கள். அங்கு பூவிற்கும் இளைஞன் ராஜா. இவர்களுக்கு பூக்கள் பற்றிய விவரங்கள் தந்து உதவுகிறான். துறுதுறுப்பும் உற்சாகமும் கொண்ட ராஜா அனைவரையும் கவர்கிறார். ஷீலா ராஜாவை வெறுப்பது போல் இருந்தாலும் மனம் முழுக்க ராஜா நிறைகிறார். ஊர் திரும்பியவர் தவிக்கிறார்.
ரகசிய காதலன் ராஜாவைத் தேடி ஊட்டிக்குப் போகிறாள். கோவை டூ ஊட்டி டூவிலரில் போகிறாள். வண்டி பழுதாகி விடுகிறது. லாரியில் லிப்ட் கேட்டு ஊட்டி போகிறார். அங்கு ராஜாவைக் கண்டு பிடிக்க முடியாமல் தவிக்கிறார். இருட்டி விடுகிறது. சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கின்றன.
இங்கே வீட்டில் காலையில் பள்ளிக்குப் போன மகளைக் காணவில்லை என்று குடும்பமே தவிக்கிறது. நீண்ட தேடலுக்குப் பின் சில கசப்புகளுக்குப் பின் ராஜாவைப் பார்க்கிறாள் ஷீலா. அப்போதுதான் அவளுக்குப் புரிகிறது, தன் மன உணர்வின் பெயர் காதலல்ல. பருவக் கவர்ச்சிதான் என்று. புறப்பட்டு வீடு வந்து சேர்கிறாள். பொழுது மட்டுமல்ல மனமும் தெளிவாகிறது. குடும்பம் திரும்பி வந்த மகளை எப்படி எதிர்கொள்கிறது என்பது க்ளைமாக்ஸ்.
நாயகன் ராஜா அந்த ஊட்டிக்கார பூக்கார இளைஞனாக பொருந்தியிருக்கிறார். நாயகி ஷீலாவுக்கு பாடல்களில் கவர்ச்சி காட்டவும் காட்சிகளில் நடிப்பைக் காட்டவும் வாய்ப்புகள். அன்பான அம்மா சீதா அழகான அம்மா. பாசக்கார அப்பாவாக வரும் பிரகாஷ்ராஜ், ஆர்ப்பாட்டம் இல்லாமல் அசத்தியிருக்கிறார். அதிகம் பேசாமலேயே முகபாவனைகளிலேயே கவர்கிறார். பாசத்தைப் பொழிவதிலிருந்து காணாமல்போன மகளை நினைத்து பரிதவிப்பது வரை பின்னியிருக்கிறார் பிரகாஷ்ராஜ், நடிப்பில் அவர் பிரகாசராஜாகச் ஜொலிக்கிறார்.
பெண் தன்மையுடன் வரும் விலிங்ஸ்டன் ஆசிரியர் ஆசீர்வாதமாக வந்து சிரிக்க வைக்கிறார். டீச்சர் சோனா நாயருடன் அவர் வழிவதும், பின் ராஜாவின் துணையுடன் புது மிடுக்குடன் மறு அவதாரம் எடுத்து கலக்குவதும் கலகலப்பு.
பருவக் கவர்ச்சியை காதலென்று தவறாகப் புரிந்து கொண்டு நடக்கும் இன்றைய இளைய தலைமுறைகளுக்கு சரியான பாடம் இப்படம். இது மாதிரி கதைகள் மிகவும் அரிதாகவே படமாகியுள்ளன. ஆனாலும் அவற்றிலிருந்து கண்ணா கதை வேறுபட்டுக் கண்ணியமாகப் படமாக்கப்பட்டுள்ளது.
முதல் பாதியில் அழகு, குளுமையான லொக்கேஷன்கள் இயல்பான கலகலப்பான காட்சிகள் என்று போகிறது படம். நகைச்சுவை காட்சிகள் என்று போகிறது படம். நகைச்சுவை காட்சிகளில் பாசில் வாசம் வீசுகிறது.
பின்பாதியில் ஷீலா ராஜாவைத் தேடிப் போகும் காட்சியின் நீளம்தான்... படத்தின் வேகத்தைக் குறைக்கிறது.
ரஞ்சித் பரோட்டின் பாடல்கள் ரசிக்க வைக்கிறது என்றாலும் இடம் மாறி இடம்பெற்று சலிப்பூட்டுகிறது. தாஜ்மல்லின் ஒளிப்பதிவு கண்ணுக்கு குளுமை.
டீன் ஏஜ் பிரச்சினையை எடுத்துக் கொண்டு ஒரு பெற்றோரின் பார்வையில் கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஆனந்த். துளிக்கூட ஆபாசம் கலவாது படம் தந்திருக்கும் அவரை பாராட்டலாம்.