ஓரம்போ-‌விம‌ர்சன‌ம்

வெள்ளி, 7 டிசம்பர் 2007 (13:13 IST)
webdunia photoWD
ஆர்யா, பூஜா, லால், ஜான் விஜய், அஸ்வினி, நெல்லை சிவா, தம்பி ராமையா நடிப்பில் நீரவ் ஷா ஒளிப்பதிவில் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் புஷ்கர் மற்றும் காயத்ரி இயக்கியுள்ள படம். தயாரிப்பு ஏ.பி. பிலிம் கார்டன்.

சென்னையில் மெக்கானிக் ஷெட் வைத்து கொடிகட்டிப் பறப்பவர்கள் லால் மற்றும் ஜான் விஜய். லாலின் பெயர் பிகிலு, ஜான் விஜய்யின் பெயர் சன் ஆப் கன். இருவருக்குள்ளும் தொழில் முறையில் போட்டி உண்டு. அவ்வப்போது ஆட்டோ ரேஸ் விட்டு இருவர் அணிகளுக்குள் போட்டி - பந்தயம் வைப்பது உண்டு. லாலுக்காக ரேஸில் லுட்டி ஆர்யா ஜெயித்து வருவதும் ஜான் விஜய் கோஷ்டி மண்ணைக் கவ்வுவதும் வழக்கம். ஆனால் ஆர்யா பூஜாவின் காதலில் விழுந்த பிறகு இது இறங்கு முகமாகி விடுகிறது. எல்லாவற்றையும் அடமானம் வைத்து கையிலிருந்த ஆட்டோ, ஷெட் எல்லாம் இழந்து லாலும் ஆர்யாவும் ஒன்றுமில்லாமல் ஆகிவிடுகிறார்கள். இறுதியில்.... ? ஹீரோ ஜெயிக்க வேண்டுமே... ஒரு அதிர்ஷ்டம் அடிக்கிறது. ஆர்யாவும் லாலும் புது ஆட்டோ வாங்குகிறார்கள். ஆர்யா- பூஜாவும் தம்பதி ஆகிறார்கள் சுபம். இதுதான் ஓரம்போ படக்கதை.

ஆட்டோ ஷெட்... மெக்கானிக் வாழ்க்கை இஞ்சின் உதிரிப் பாகங்கள் ஸ்பேனர் என்று நம்மை அந்த சிந்தாதிரிப் பேட்டை ஏரியாவுக்குள் அழைத்துச் சென்று உட்கார வைத்து விடுகிறார்கள். நாமும் ஆயில் கிரீஸ் ஒட்டிக் கொள்ளுமோ என்று பயந்து ஒடுங்கி உட்கார்ந்து வேடிக்கை பார்க்கும் அளவுக்கு ஆட்டோ ஷெட்.... சூழலை உணர வைத்துவிடுகிறார்கள் இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி இருவரும்.

ஆட்டோதான் உலகம் என்றிருக்கும் அவர்களின் கலாச்சாரம் வாழ்க்கை முறையை கண் முன் நிறுத்துகிறார்கள். அப்படி அவர்களுக்குள் ஹீரோயிசத்தை நிரூபிக்க நடைபெறும் ஆட்டோ ரேஸ் காட்சிகள் பரபர... விறுவிறு... ஆனால் 120 கி.மீ.வேகத்தில் ஆட்டோ ஓட்டுவது சாத்தியமா... அனுமதி உண்டா என்பது கேள்விக்குரியது. அது வேறு விஷயம்.ஆனாலும் அந்த ரேஸ் ஏற்படுத்தும் பரபரப்பு விர்ரென்று விறுவிறுப்பாகவே இருக்கிறது. படத்தின் விறுவிறுப்புக்கு நீரஷ்ஷாவின் கேமரா பலமாக உதவியிருக்கிறது.

ஆர்யா லால் சார்பில் ஆட்டோ ஓட்டுவார். ரேஸில் ஜெயிப்பார். வருகிற பணத்தை நண்பர்களுடன் சேர்ந்து குடித்து அழிப்பார். வீட்டிலிருக்கும் அக்கா அஸ்வினிக்கு தினம் 100 அல்லது 200 கொடுத்து உதவாக்கரை என்று திட்டு வாங்குவார். இடையில் பூஜா மீது கண் வைத்து காரியம் ஆனதும் கழற்றிவிடுகிறார். ஏன் என்றால் பெண் என்றால் யூஸ் அன்ட் த்ரோ என்பது அவர் கொள்கை. ஆர்யாவுக்கு பெரிதாக நடிக்க வாய்ப்பில்லை. இருந்த வாய்ப்பையும் கோட்டை விட்டு இருக்கிறார்.

webdunia photoWD
பூஜா பிரியாணிக் கடைக்காரர் மகளாக வருகிறார். மேக்கப் இல்லாமல் அளவோடு வந்து அளவோடு நடித்து மனதில் பதிகிறார்.

லால்... பிகிலுவாக வருகிறார். படுபாந்தமான தேர்வு. நடிப்பு, யதார்த்தம் வெளிப்படுத்தும் ‌வித‌ம் அருமை.

நெல்லை சிவா கூட நெல்லை மொழி பேசி மனதில் நிற்கிறார்.

ஆனால் இத்தனை பேரையும் ஓரம்போ என்று ஓரம்கட்டிவிட்டு தூள் கிளப்புகிற சன் ஆப் கன் ஆக வரும், ஜான் விஜய்யின் நடிப்பு. தூத்துக்குடி மொழி பேசி அவர் செய்யும் அலப்பறை ஆரம்பத்தில் ஓவராகத் தெரிகிறது. போகப்போக நம்முள் புகுந்து கொண்டு விடுகிறார். பிறகு எப்போ வருவார் என்ன பளிச் வசனம் பேசப்போகிறார் என்று எதிர்பார்க்க வைத்துவிடும் அளவுக்குப் போய்விடுகிறார்.

அந்த முட்டைக்கண்களும் கோணல் சிரிப்பும் அங்க சேஷ்ட்டையும்.. அட படம் முடிந்து எழும்போது ஜான் விஜய் மட்டும் மனதை ஆக்கிரமித்து விடுவதை உணர முடிகிறது. அவர் பேச்சில் பச்சைக் நெடி அடித்தாலும் நடிப்பில் பளிச்.

கதையில் எதை முதன்மைப்படுத்துவது என்கிற குழப்பம் இயக்குநருக்கு இருந்து இருக்கிறது. ஆட்டோ மெக்கானிக் வாழ்‌க்கை, ஆடடா ரேஸின் விறுவிறுப்பு, ஆட்டோ டிரைவரின் காதல், காணாமல் போய்விடும் கோலிக்குண்டு (அதற்குள் இருப்பது வைரம்தானே) கண்டு பிடிப்பது... இதில் எதை பிரதானமாக்குவது என்கிற குழப்பம் இருப்பதை உணர முடிகிறது. விளைவு எதையும் முழுமையாகச் சொல்ல முடியவில்லை.

மும்பையிலிருந்து அனுப்பப்பட்டவரின் புதையல் கோலி காணாமல் போவது சகஜம். ஆனால் அது தவறறவிட்ட ஆட்டோவின் டிரைவரும் விஐபி அந்தஸ்து பெற்ற ஆர்யா. ஆனால் அவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை என்பது காதுல பூ.

படத்தின் தரத்தைக் குறைப்பது படம் முழுக்க அள்ளித் தெளித்திருக்கும் ஆபாசமான அருவருப்பான வசனங்கள். கேட்டால் யதார்த்தம் என்பார்கள். யதார்த்தம் என்கிற பெயரில் கெட்ட வார்த்தைகளை மீடியாவில் பயன்படுத்த முடியுமா... வசனங்களில் குறிப்பாக பெண்களை கேவலப்படுத்தி பேசப்படுவது ஆபாச - அருவருப்பின் உச்சம். இதை இயக்கியிருப்பவர்களில் ஒரு பெண்மணியும் இருக்கிறார் என்பது சோகம்.

நம்மை ஓரம்போகச் சொல்லி வேகமெடுக்கும் ஆட்டோ கடைசியில் அது பஞ்சர் ஆகி ஓரமாக ஒதுங்கிவிடுகிறது.