அருண் விஜய், அறிமுகங்கள் வந்தனா, அர்பிதா, வடிவேலு, ஜனகராஜ், வெ.ஆ.மூர்த்தி, வாசு விக்ரம், கலைராணி நடிப்பில் ரவியின் ஒளிப்பதிவில் டி. இமான் இசையில் ஷக்தி பரமேஷ் இயக்கியுள்ள படம். தயாரிப்பு ஸ்ரீராம் பிலிம்ஸ் (பி) லிட்.
அருண் விஜய்க்கு பொருளாதார பிரச்சினை. வெளிநாட்டு மோசடியில் பல லட்சம் இழப்பு. படிப்புக்கு ஏற்ற வேலையில்லை. இறந்து போவதே ஒரே வழியென்று முடிவெடுக்கிறார். மலையுச்சிக்குச் சென்று குதிக்கலாம் என்று பார்த்தால் அங்கு ஒரு பெண்... இதே முடிவுடன் நிற்கிறார். அது வந்தனா. பெற்றோரை இழந்து மாமன் கொடுமை தாங்காமல் சாக வந்திருப்பதாகக் கூறுகிறார்.
மலையிலிருந்து குதிக்கலாம் என்று முடிவெடுக்க - உயரத்தை எண்ணி இருவருக்குள்ளும் பயம். இருவருக்குள்ளும் விவாதம். என்ன வழியென்று யோசிக்க தூக்க மாத்திரையே சுகமான சாவு என்று முடிவு எடுக்கிறார்கள்.
அருண் விஜய்யின் ரூமுக்குச் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டு இருவரும் மாத்திரைகள் போட்டுக் கொண்டு மயங்கிய நிலையில் கிடக்க, கதவைத் தட்டிக் கொண்டு வருகிறது ஒரு கடிதம். அது கெளரவமான வேலைக்கான அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்.
பதறிய அருண் விஜய் தான் பிழைக்க வேண்டும் என்று கதறுகிறார். கதவைப் பூட்டி சாவியை வேறு வெளியில் வீசிவிடுகிறார். எனவே உதவிக்கு கூப்பிட்டால்... பக்கத்தில் யாருமில்லை. மயங்கிக்கிடந்த நிலையில், ஒரு வழியாக காப்பாற்றப்படுகிறார்கள். கூட மயங்கிய நிலையில் படுத்திருந்த பெண்ணைக் காணோம். அந்த வந்தனாவைத் தேடி அருண் கண்டுபிடித்து ஒன்று சேர்வதுதான் கதை.
இப்படிக் காணாமல் போய்விட்ட காதலியைத் தேடி கண்டுபிடித்து கைபிடிப்பதையே சுவாரஸ்யப்படுத்தியிருந்தால் 'காதல் கோட்டை' மாதிரி நேர்த்தியான படம் கிடைத்திருக்கும்.
ஆனால் வந்தனாவின் மாமன் வில்லன்கள் வந்தனாவுக்கு தாலி கட்டி மூன்றாவது மனைவியாக்கத் துடிப்பது, அருணை முதலாளியின் மகள் அர்பிதா காதலிப்பதாகக் காட்டி நீரோட்டம் போன்ற கதையை முக்கோணக் காதல் கதையாக்கி இருப்பது போன்ற சினிமாத்தனங்களைச் சேர்த்து சிறுமைப்படுத்திவிட்டார்கள். விளைவு வழக்கமான சினிமாவாக வசவசவென இழுவையாகிவிட்டது.
நாயகன் நாயகி இருவரும் சந்திக்க நிறைய வழிகள் வாய்ப்புகள் இருந்தும் இருவரையும் சந்திக்கவிடாமல் இயக்குனர் இழுத்தடிப்பது சலிப்பூட்டுகிறது. இருவர் சம்பந்தப்பட்ட கதையில் அர்பிதா காதல் எபிசோட் எரிச்சலூட்டும் திணிப்பு. சென்னையிலிருந்து கூப்பிடும் தூரத்தில் குற்றாலம் போல மலை, அருவி இருப்பதாகக் காட்டுகிறார்கள்.
படத்தில் அருண் விஜய் யதார்த்தமாக நடித்துள்ளார். நாயகி வந்தனா பக்கத்து வீட்டுப் பெண் போல பாந்தமாக வருகிறார். பரவாயில்லை. இன்னொரு நாயகி அர்பிதா சுமார் ரகம்.
நல்ல கதையை இப்படி வெறுப்படிக்கிறார்களே என்கிற நம் கவலையைப் போக்குகிறவர் வடிவேலுதான். விதவிதமாக யோசித்து திருட்டுத் தொழிலை செய்யும் வடிவேலு ஒவ்வொரு முறையும் சிக்கிக் கொள்வது விலா நோக வைக்கும் வெடிச்சிரிப்பு ரகம். காதல் கதை போரடிக்கும் போது படத்தை கரை சேர்ப்பதே காமடிதான்.
உண்மையைச் சொன்னால் படத்தில் உட்கார வைப்பதே வடிவேலுவின் காமடிதான். பீச்சில் திருடிவிட்டு குதிரையில் ஏறித் தப்பிக்க முயல... நீண்டதூரம் சென்ற குதிரை மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்து வடிவேலுவை மாட்டிவிடுவது சரியான வெடிச்சிரிப்பு.
டாக்டர் வீட்டில் திருடப் போக எலிக்கு வைத்த பலகாரத்தை தின்றுவிட்டு அவதிப்படுவது ஒரு ரகச் சிரிப்பு.
பிணத்தை குறைந்த செலவில் எடுத்துச் செல்ல உதவுவதாகக் கூறி குடிகாரனைப் போல பஸ்ஸில் கொண்டு செல்வதும் குட்டு உடைபடுவதும் சரியான சிரிப்பு. ஏற்கனவே பார்த்த அதே தளத்தில் வெவ்வேறு காட்சிகளை அமைத்து களேபரம் செய்கிறார்கள்.
டி. இமானின் இசை பாஸ்மார்க் வாங்கிவிடுகிறது. பின்னணி இசையில் முன்னேறி இருக்கிறார். பாடல் வரிகள் சுமார் ரகம். தபு சங்கர் எழுதியிருக்கிறார். கவிதை எழுதுவது வேறு பாடல்கள் எழுதுவது வேறு என்று புரிந்து கொண்டிருப்பார்.
தடம் மாறாமல் கதையை அதற்குரிய பாதையில் நகர்த்தியிருந்தால் 'தவம்' படத்திற்குப் பலம் கூடியிருக்கும்.