வீரமும் ஈரமும் - விமர்சனம்

Webdunia

சனி, 6 அக்டோபர் 2007 (15:44 IST)
சரவணன், கிருஷ்ணா, சஞ்சய்ராஜ், சோனிகா, தன்யா, அஞ்சுஷா, தீபன் சக்கரவர்த்தி நடித்துள்ளனர். லியோ.டி ஒளிப்பதிவில் யுகேந்திரன் இசையில் சஞ்சய்ராம் இயக்கித் தயாரித்துள்ள படம்.

இரண்டு குடும்பங்களின் பகையால் ஊரே இரண்டு பட்டு அப்பாவி மக்கள் அச்சத்தில் வாழும் ஊர் பற்றிய கதை.

சங்கரன் மீது அந்த ஊருக்குப் பயம். காரணம் மரியாதை. நல்லதை செய்து எதிரிகளை அடக்கி சொந்த பந்தங்களைக் காப்பவர்.

செம்மறி சங்கரனின் விரோதி. அவனைக் கண்டாலும் ஊருக்குப் பயம். காரணம் அவன் மோசமானவன். நாளொரு வெட்டு பொழுதொரு குத்து என்று முறுக்கேறித் திரிகிறவன்.

webdunia photoWD
இந்த இருவருக்குள்ளும் பகை. முந்தைய தலைமுறைப் பகை, அடுத்த தலைமுறைக்கும் தொடர்கிறது. சங்கரன் இந்த வன்முறைப் பாதையை விட விரும்பினாலும் செம்மறி விட விடுவதில்லை. போலீஸ் எவ்வளவோ முயன்றும் இந்த மோதல்கள், உயிர்ப் பலிகள் நின்ற பாடில்லை. ஒரு கட்டத்தில் செம்மறி போலீசாரால் சுட்டுக் கொல்லப்படுக்கிறான். தன்மேல் கொலைப் பழி வந்துவிடும் என்று சங்கரனும் தன்னைத்தானே சுட்டுக் கொள்கிறார். இந்தக் கதையினூடே காதல், குடும்பம், பாசம் என்று கொஞ்சம் ஈரத்தையும் காட்டுகிறார்கள்.

படம் முழுக்க ஏதோ கசாப்புக் கடையில் ஆடு வெட்டுவதைப் போல் மனிதர்களை வெட்டிச் சாய்க்கிறார்கள். இதுதான் வீரம் என்கிறார்களா? கதை முழுதும் சிந்தி தரையை நனைக்கிற இரத்தத்தையே ஈரம் என்கிறார்களா?

சங்கரனாக நடித்திருப்பவர் சரவணன். பெரிய மீசையும் அடித் தொண்டை குரலும் என அச்சு அசலாக அந்தப் பண்ணையார் பாத்திரத்துக்கு பொருந்தியிருக்கிறார். கடைசிவரை அந்த பெரிய மனுஷத்தனம் - கம்பீரம் இவற்றைக் கட்டிக் காத்து... வெளிப்படுத்தியிருக்கிறார்.

செம்மறியாக நடித்திருப்பவர் நல்ல தேர்வு. அந்த பாமரத்தனமான - பிடிவாதமான முரட்டுப் பாத்திரத்தை நன்றாக வெளிக் காட்டியுள்ளார்.

சரவணனின் மனைவியாக நடித்துள்ள சோனிகா, பண்ணையார் மனைவியாக பாந்தமாக வந்து போகிறார்.

டீச்சராக நடித்துள்ள அஞ்சுஷா அடக்கி வாசித்து மனதில் பதிகிறார். குடும்பப்பாங்கான முகம் - நடிப்பு.

முத்தழகுவாக வரும் பட்டாம்பூச்சி தன்யா, சிறிதுநேரம் வந்து சங்கரனின் ஆள் கிருஷ்ணாவுடன் டூயட் பாடிவிட்டு காணாமல் போய்விடுகிறார்.

திருநெல்வேலி, தூத்துக்குடி மண்ணையும் இயற்கையையும் அழகாகப் படம்பிடித்ததுடன், படத்தின் உள்ளார்ந்த வன்முறைக் குணத்தையும் உணர்த்தும்படி ஒளிப்பதிவு செய்திருக்கிறார் லியோ.டி.

யுகேந்திரன் இசையில் எல்லாப் பாடல்களும் தேறிவிடுகின்றன. குறிப்பாக 'புருஷப் பயலே', 'மானே மயிலழகே' இரண்டும் மனதைத் தொடுபவை. பாடல் வரிகள் சஞ்சய்ராம்.

வன்முறைப் படம்தான். வெட்டு குத்து ரகம்தான். இருப்பினும் வழக்கமான சினிமா மசாலாக்களை தவிர்த்துவிட்டு மண் வாசனையுடன் படம் தர முயன்றிருக்கிறார் இயக்குனர். அடிதடி, வெட்டு, ரத்த வாசனை அளவுக்கு வீரத்தை வெளிப்படுத்தியவர் பாசம், அன்பு என்று ஈரத்தை சம அளவு தரத் தவறிவிட்டார்.