பிருத்திவிராஜ், பத்மபிரியா, நிதின் சத்யா, நாசர் நடித்துள்ளனர். தினேஷ்குமார் ஒளிப்பதிவில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் வஸந்த் இயக்கியுள்ள படம். தயாரிப்பு சி.சங்கர், ஆர்.எஸ். செந்தில்குமார்.
பத்மபிரியாவைப் பெண் பார்க்க வருகிறார்கள். பிடிக்கவில்லை என்கிறார் மாப்பிள்ளை. காரணம் பெண் அழகாக இருப்பதால்தான் என்கிறார். ஆனால் கூட வந்த நண்பன் நிதின் சத்யாவுக்குப் பிடித்துவிடுகிறது. நண்பனிடம் சொல்லிவிட்டு பத்மபிரியாவிடம் பேசிக் கவர்ந்து பெண் கேட்டுத் திருமணமும் ஆகிவிடுகிறது.
ஆனால் கணவன்-மனைவி இருவருக்குள் எதுவுமில்லை. ஏமாந்து போகும் பத்மபிரியா கணவனை டாக்டரிடம் அழைத்துப் போகிறார். நிதினுக்கு ஆண்மையில்லை. தாம்பத்தியமும் சாத்தியமில்லை என்கிறார் டாக்டர். இதை தெரியாமலா கல்யாணம் செய்து கொண்டீர்கள் என்று கேட்க நிதினோ தனக்கு எதுவுமே தெரியாது என்கிறார்.
ஆனால் நிதின் ஒரு குடிகாரர்... அதிகம் குடித்ததால் ஆண்மை போய்விட்டது என்று பிறகு பத்மபிரியாவுக்குத் தெரிகிறது. நிதின் சந்தேகமும் படுகிறார். மனமுடைந்து போய் கடைசியில் விவாகரத்து பெற்று விடுகிறார். பத்மபிரியாவின் அண்ணனின் நண்பன் பிருத்திவிராஜ்... நட்பாகப் பழகி பத்மபிரியாவின் மனதிற்குள் நுழைந்துவிடுகிறார். திருமணமும் செய்து கொள்கிறார்கள்.
இதை பொறுக்காத நிதின் பத்மபிரியாவைக் கடத்திக் கொண்டு கேரளாவின் கொச்சியில் ஒரு தனியான பங்களாவில் வைத்துப் பூட்டி 'சத்தம் போடாதே' என்று கொடுமைப்படுத்துகிறார். வீட்டுச் சிறையில் உள்ளபோதே பத்மபிரியா இறந்ததுபோல நம்பி விடுகிறார்கள் எல்லாரும். அந்த அளவுக்கு நிதின் செட்அப் செய்து விடுகிறார். கடைசியில் தன் மனைவியை பிருதிவிராஜ் மீட்பதே க்ளைமாக்ஸ்.
இந்தப் படத்தில் முதல்பாதி கவிதை போல நகர்கிறது. மறுபாதி பாதை மாறிப் பயணிக்கிறது. குழந்தைகளை வைத்தே பாடல் காட்சி அமைத்து புத்துணர்ச்சியூட்டுகிறார் வஸந்த். தான் எப்போதும் Poetic ஆகவும் Musical ஆகவும் சிந்திக்கிறவர் என்று நிரூபித்திருக்கிறார். இந்த நல்ல அபிப்ராயத்தை பின் பாதிப் படம் மாற்றிவிடுகிறது.
கடத்தல், நடந்தது யாருக்கும் தெரியாது என்று நம்ப வைப்பதும் மார்ச்சுவரியிலிருந்து ஒரு பிணத்தை எடுத்து பத்மபிரியாவின் வீட்டில் எரிவாயு சிலிண்டரை வெடிக்க வைத்து பத்மபிரியா இறந்துவிட்டதாக நம்பவைப்பதும் நம்பமுடியாதவை. ஒரு தனியறையில் ஆறுமாதமாகப் பூட்டி வைக்கப்பட்ட பெண் தப்பிக்க வழியில்லாமல் கதறுவது பெண்ணை பலவீனமாக்கவே உதவும். அந்த அளவுக்கு பெண்கள் பலவீனமானவர்களும் அல்ல.
கடத்தலுக்குப் பிறகு சுவையான திருப்பங்களும் விரைவான காட்சிகளும் இல்லாமல் திரும்பத் திரும்ப நிதின் - பத்மபிரியாவையே காட்டி கதை சிறை வைக்கப்பட்டுவிடுகிறது. பிருத்திவிராஜ் வந்து பத்மபிரியாவையும் சிக்கிக் கொண்ட கதையையும் மீட்கும் வரை போதும் போதுமென்று ஆகிவிடுகிறது.
படத்தில் நடிப்பை அள்ளிக்கொண்டு போய்விடுகிறவர் பத்மபிரியாதான். நல்ல நடிப்பு மனதில் பதிகிறது. ஒரு கதாநாயகியை கண்ணியமாக காட்டியிருப்பதற்காக வஸந்தை பாராட்டலாம்
அடுத்து துறுதுறுப்புடன், ரவியாகவும் சந்திரனாகவும் 'டபுள் ஆக்ட்' காட்டும் பிருத்விராஜ் பாராட்டு பெறுகிறார்.
முட்டைக்கண்ணை வைத்துக் கொண்டு வரும் நிதின் சத்யாவும் வெறுப்பேற்றி நம்மை விளங்க வைக்கிறார்; வெற்றியும் பெறுகிறார்.
தினேஷ்குமாரின் கேமரா கேரள அழகை அள்ளிக்கொண்டு விருந்து வைக்கிறது.
யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் எல்லாப் பாடல்களும் இனிக்கின்றன. வரிகள் நா. முத்துக்குமார். நிறைய இடங்களில் வரிகளில் பொறிகளை காண முடிகிறது.
முதல் பாதியிலிருந்த அழகையும் கலகலப்பையும் அழுத்தமான காட்சியையும் மறுபாதியிலும் பராமரித்திருந்தால் படம் நின்றிருக்கும்.
ஆபாசத்துக்கு இடமின்றி ஆரோக்கியமான பாதையில் பயணம் செய்திருக்கிறார் இயக்குனர் வஸந்த். குடிக்கு அடிமையானவர்களை குடிநோயாளிகள் என்று சித்தரித்து பரிவுடன் அணுகியிருக்கிறார்.
என்ன இருந்தாலும் படக்கதை பழைய 'அவள் வருவாளா?' அண்மை 'உற்சாகம்' படங்களை நினைவுபடுத்துவதை தவிர்க்க முடியவில்லை. 'சத்தம் போடாதே' என்றால் மனம் கேட்கமாட்டேன் என்கிறது.