தொலைபேசியின் உபயோகம் பற்றி குடும்பப் பின்னணியுடன் எடுக்கப்பட்டுள்ள படம்தான் தொ(ல்)லைபேசி.
இந்த படத்தில் விக்கிரமாதித்யா, பிரியங்கா, அறிமுகங்கள் ஆர்த்தி, திவ்யா, நிழல்கள் ரவி, கருணாஸ், மதன்பாப், லாவண்யா நடித்துள்ளனர். டி. சங்கர் ஒளிப்பதிவில், எஸ். ஷாந்ததகுமார் இசையில் கதை, திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி கே. பன்னீர்செல்வம் இயங்கியுள்ளார். தயாரிப்ப பளூ வாட்டர்ஸ் மூவி மேக்கர்ஸ்.
விஞ்ஞானத்தின் அரிய சாதனம் தொலைபேசி. அதை முறையாகப் பயன்படுத்தினால் வாழ்வில் உயரலாம். சந்தோஷம் கிட்டும். முறைதவறிப் பயன்படுத்தினால் மகிழ்ச்சி தொலைந்துவிடும். குடும்ப அமைதி குலைந்துவிடும் என்ற கருத்தை சொல்ல எடுக்கப்பட்டிருக்கும் ஒரு படம்தான் தொல்லை பேசி!
அன்றாடம் பத்திரிக்கைகளில் வரும் தொலைபேசி, செல்போன், இண்டர்நெட், எஸ்.எம்.எஸ். பற்றிய வரம்பு மீறல்கள் செய்திகளையும் பட்டியலிட்டு படம் தொடங்குகிறது. தொலைபேசி தொல்லை பேசியாக மாறும் விதத்தை ஒரு குடும்பப் பின்னணியில் கூறியிருக்கிறார்.
கதை என்னமோ கணவன், மனைவி இடையே குறுக்கிடும் ஒரு பெண், அதனைத் தொடர்ந்த சிக்கல்கள் பிரச்சனைகள் கடைசியில் ஒரு முடிவு என்கிற பழைய சமாச்சாரம்தான் என்றாலும், கதையினூடே செல்போன் செய்யும் சில்மிஷங்களும், திருப்பங்களும் சுவையானவை.
படத்தில் இடம்பெறும் பெரும்பாலான காட்சிகள் பல்வேறு படங்களில், டி.வி. தொடர்களில் இடம் பெற்றவை என்கிற போதும், தொலைபேசியை மையப்படுத்தும் போக்கில் கதை சொல்வதால் ரசிக்க முடிகிறது.
webdunia photo
WD
நாயகன் விக்கிரமாதித்யாவிற்கு சரியான அளவில் தைக்கப்பட்ட சட்டையாய் பாத்திரம். இளமையும் குறும்பும் கள்ளத்தனமும் கண்களில் காட்டி கவர்கிறார். தன் மனைவி பிரியங்காவிடம் தன் காதலி பற்றிய குட்டு வெளிப்பட்டுவிடுமோ என்று பயப்படுவதும் பிறகு சமாளிப்பதும் சரியான ரகளை.
பிரியங்காதான் நாயகி. துடைத்து வைத்த குத்துவிளக்கு போல வருகிறார். தன் கணவனின் லீலைகள் அனைத்தையும் பாசிடிவாக எடுத்துக் கொண்டு கடைசியில் பத்ரகாளியாக மாறுவது படுபாந்தம். ஆர்த்தியும், திவ்யாவும் கவர்ச்சிக்கென கடைத்தெடுத்த பாத்திரங்கள். ஆர்த்தி உடலழகால் கவர்ந்தால் திவ்யா விழிகளாலேயே வலை வீசி வீழ்த்துகிறார்.
படத்தில் கருணாஸின் காமடியும் உண்டு. சில அறுவைகளை சகித்துக் கொண்டால் அதை ரசிக்கலாம். நாயகனின் அப்பா நிழல்கள் ரவி, கம்பெனி மேனேஜர் மதன்பாப், கருணாஸின் மனைவி லாவன்யா என இவர்களும் படத்தில் இடம் பெற்றுள்ளார்கள்.
webdunia photo
WD
ஒளிப்பதிவாளர் சங்கர் தன் வட்டத்துக்குள் வேலையை சிறப்பாகச் செய்துள்ளார். இசை ஷாந்தகுமார், பாடல்கள் கேட்கும்படி உள்ளன. என் பகைவன் தானடா, என்ன வேண்டும் சொல்லு, உன் மனதை பாடல்கள் தாளம்போட வைக்கின்றன. யார் இசை? என்று கேட்கும்படியும் உள்ளன. பாடல் வரிகள் இயக்குநர்தானாம். பட வசனங்களைவிட பாடல் வரிகளிடம் தரம் தென்படுகிறது.
படத்தின் முன் பாதியில் கலகலப்பாகப் பயணப்பட்ட கதை மறுபாதியில் செக்குமாட்டைப் போல சுற்றிச் சுழன்று வட்டமடிப்பது ஏன்? இடைவேளைக்குப் பிறகு படத்தின் நீளத்தைக் குறைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
சரி... தொலைபேசி முழுக்க முழுக்க தொல்லைக்கே, கஷ்டத்திற்கே, மன நிம்மதி கெடுப்பதற்கே என்பதை மையப்படுத்தி ஒரு கதை பண்ணியிருப்பது எதிர்மறை சிந்தனையாகத்தான் தோன்றுகிறது. இயக்குநர் பயமுறுத்துகிற அளவிற்கு தொலைபேசி ஆபத்தான சாதனமா?