ஆரியா - விமர்சனம்

Webdunia

திங்கள், 20 ஆகஸ்ட் 2007 (11:48 IST)
மாதவன், பாவனா, பிரகாஷ்ராஜ், வடிவேலு, கவிதா, தேவன், அலெக்ஸ் நடிப்பில் கே.வி.குகன் ஒளிப்பதிவில் மணிசர்மா இசையில் பாலசேகரன் இயக்கியுள்ள படம். தயாரிப்பு ரேகா கம்பைன்ஸ்.

சென்னையைச் சேர்ந்த கலக்கும் தாதா `காசி' பிரகாஷ்ராஜ். அவரது செல்லத்தங்கை தீபிகா தான் பாவனா. தன் தங்கை எது கேட்டாலும் வாங்கித் தருவார் பிரகாஷ்ராஜ். கல்லூரியில் படிக்க விரும்பினால் கல்லூரியையே கட்டிக் கொடுத்து விடுகிற பாசக்கார அண்ணன்.

மெடிக்கல் காலேஜில் படிக்கும் பாவனா தன் அண்ணனின் தைரியத்தில் ஆட்டம் போடுகிறார். இந்த மிரட்டல் உருட்டல்களுக்கெல்லாம் அஞ்சாத மாணவன் ஆரியா அதாவது மாதவன். தன்னை மதிக்காத மாதவனை பழிவாங்க எண்ணி தோற்று அவமானப்படுகிறார். மாதவனின் துணிச்சல் பாவனாவுக்கு அவர் மேல் காதல் தீ மூட்டுகிறது.

இந்தக் காதலை நிராகரிக்கிற மாதவனை ரவுடியாக மாற்றியாவது அடைந்தே தீருவேன் என்று சவால் விடுகிறார் பாவனா. மாதவன் ரவுடியானாரா பாவனாவின் காதலை ஏற்றாரா என்பதுதான் 'ஆரியா' பட க்ளைமாக்ஸ்.

webdunia photoWD
பொதுவாக வில்லன் தாதாவாக இருந்தால் தன் தங்கையின் காதலை ஏற்க மாட்டான். காதலனை போட்டுத் தள்ளத் துடிப்பான். இதில் தன் தங்கை காதலிக்கிறார் அவளுக்குப் பிடித்துவிட்டது என்பதற்காக தாதா, நாயகனிடம் குழைகிறான்; கெஞ்சுகிறான்... இப்படி தாதா முரட்டுத்தனத்தைவிட்டு பொறுமையாக இறங்கி விடுவது வித்தியாசம்.

பொதுவாக முரட்டு வில்லனின் தங்கை நல்லவளாக இருப்பதாகக் காட்டுவார்கள். இதில் அவளும் முரட்டுப் பெண்ணாகவே இருக்கிறாள். ரவுடி நல்லவனாக மாறினால் நாயகிக்குப் பிடிக்கும். ஆனால் இதில் நாயகன் நல்லவனாக இருப்பவனை ரவுடியாக மாற்றி மணம் செய்வேன் என்று கூறுகிறாள் நாயகி.

இப்படி பல உல்டாக்களை வித்தியாசம் என்ற பெயரில் அரங்கேற்றியிருக்கிறார் இயக்குனர். அந்த 'உட்டாலக்கடி' திரைக்கதை உத்தியே விறுவிறுப்பும் கூட்டுகிறது. சில இடங்களில் விரக்தியும் ஊட்டுகிறது.

மயிலிறகால் வருடுகிற மாதிரி மென்மையான காதல் கதைகளைத் தந்த பாலசேகரன், ஆக்‌ஷன், தாதா என்று வழக்கமான மலிவான மசாலா வியாபாரத்தில் இறங்கிவிட்டாரே என்று கவலையுடன் உட்கார்ந்தால் வழக்கத்தை விட விலகி நின்று சிந்திப்பவர் என்று சிறிது நேரத்திலேயே நிரூபித்து விடுகிறார்.

தாதா, தங்கை, காதலன் என்று மூன்று வழக்கமான பாத்திரங்களை வைத்து அவர்களது போக்குகளை வேறுபடுத்தியது ஆறுதல். ஆபாசக் கலப்பின்றி கதை சொல்லியிருப்பது இன்னொரு நிம்மதி.

தாதா காசியாக வரும் பிரகாஷ்ராஜ் கதையைத் தூக்கி நிறுத்தும் மூன்று தூண்களில் ஒருவர். மனிதர் பிரித்து மேய்ந்திருக்கிறார். முரட்டுத்தனத்திலும் பாசத்திலும் பரிதவிப்பதிலும் பிரகாசராஜாவாக ஒளிவிடுகிறார்.

கொஞ்சம் கூட சிரிக்காமல் கடுகடு முகத்துடனேயே ஒரு அழகான கதாநாயகியைக் காட்ட இயக்குனருக்குத் துணிவு வேண்டும். நடிகைக்கும் துணிவு வேண்டும். பாவனா தன்னை மெய்ப்பித்து இருக்கிறார் - நடிக்கத் தெரிந்த நடிகையென்று.

ஆரியாவாக வரும் மாதவன் தன் பங்கை அனாயசமாக செய்திருக்கிறார்.

பிச்சைக்காரன் டு கவுன்சிலராக ப்ரமோஷன் ஆகும் வடிவேலு செய்யும் காமெடி ரவுசு, புது தினுசு. இதுவே படத்தின் கலகலப்புக்கு கூட்டுது மவுசு. 'ஸ்நேக்' பாபுவாக வருகிறார். எல்லாரது கவனத்தையும் கொத்திக் கொண்டு போய்விடுகிறார்.

மாதவன் தனி மனிதனாக மந்திரிகளையே பாக்கெட்டுக்குள் வைத்திருக்கும் பிரகாஷ்ராஜை ஏகத்துக்கு வெறுப்பேற்றுவதும் எதிர்த்து வெற்றி பெறுவதும் காதுல பூ.

ஒளிப்பதிவு, மணிசர்மாவின் இசை, திரைக்கதை இயக்கம் எல்லாவற்றிலும் ஆந்திர வாசம் வீசுகிறது. ஏற்கனவே தெலுங்கில் படங்கள் இயக்கியதால் பாலசேகரனுக்கு இந்த பாதிப்போ? மொத்தத்தில் தாதாயிசம் கதையிலும் மாறுபட்டு தன்னை வெளிப்படுத்த முயன்றிருக்கிற இயக்குனருக்கு வெற்றிதான்.