பள்ளிக்கூடம் - விமர்சனம்

Webdunia

வியாழன், 16 ஆகஸ்ட் 2007 (15:12 IST)
webdunia photoWD
நரேன், சினேகா, தங்கர்பச்சான், ஸ்ரேயா ரெட்டி, சீமான் நடிப்பில் பரத்வாஜ் இசையில் தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம். தயாரிப்பு விஸ்வாஸ் சுந்தர்.

நம் வாழ்க்கையில் பள்ளிப்பருவம் மறக்க முடியாதது. நம் வருங்கால வாழ்வுக்கு அடித்தளமிட்ட அந்தப் பருவத்தைத் திரும்பிப் பார்க்கவோ அந்த நினைவுகளை அசைபோடவோ யாருக்கும் நேரமில்லை.

'பள்ளிக்கூடம்' படம் நம்மை பின்னோக்கி கால வெளியில் இழுத்துச் செல்கிறது. வயதைக் குறைத்து நம்மை மலரும் நினைவுகளில் மூழ்கடிக்கிறது.

ஒரு பள்ளிக்கூடம் வெறும் போதனைக் கூடமாக இல்லாமல் ஆண்டுதோறும் அங்கு படித்த, பழகிய, பகிர்ந்துகொண்ட பல மாணவர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்து கொண்ட மெளன சாட்சியாக விளங்கிக் கொண்டிருக்கும். தனக்குள் ஆயிரமாயிரம் நிகழ்ச்சிகளையும் நெகிழ்ச்சிகளையும் உள்வாங்கிக் கொண்டு எந்த வெளிப்பாடும் காட்டாமல் தன் கடமையை செய்து கொண்டிருக்கிறது காற்றைப் போல. அப்படி ஒரு பள்ளிக்கூடத்திற்குள் பொதிந்துள்ள ஒரு கதையை சுரம் பிரித்து அதைப் படம் பிடித்திருக்கிறார் தங்கர். அதுதான் பள்ளிக்கூடம்.

இது ஒரு நாவலின் திரை வடிவம்.

ஒரு நிதியுதவி பெறும் தனியார் பள்ளிக்கூடம். கவனிப்பாறற்று பழுதடைந்து கிடக்கிறது. அது இருக்கும் இடம் பிரச்சினைக்குள்ளாகி பள்ளிக்கூடத்தைக் காலி செய்யும்படி நீதிமன்றம் ஆணையிடுகிறது. இதனால் பள்ளிக்கூடத்தை இழக்க வேண்டிய நிலை அவ்வூர் மக்களுக்கு. இது அப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. முன்னாள் மாணவர்கள் ஒன்று சேர்கிறார்கள். பள்ளிக்கு இடையூறாக இருந்த தடைகளை உடைக்கிறார்கள். 75-வது ஆண்டுவிழாவை சிறப்பாகக் கொண்டாடி தங்கள் பள்ளியைப் பெருமைப்படுத்துகிறார்கள்.

இதை இப்படியே சொன்னால் போரடிக்கும் என்று அங்கு படித்த நான்கு பேரின் கதையையும் கொஞ்சம் களப்படுத்தியிருக்கிறார்கள். தங்கர் படிப்பு ஏறாத மாணவன் குமாரசாமி. வேறு வழியின்றி உள்ளூரிலேயே விவசாயம் பார்க்கிறார். வெற்றிவேல் தான் நரேன். நன்கு படித்து கலெக்டராகிவிட்டவர். கோகிலாவான சினேகா படித்து அதே பள்ளியில் ஆசிரியை. முத்துவான இயக்குனர் சீமான் பிரபல திரைப்பட இயக்குனராகிவிட்டவர். இவர்களுக்குள் கதை பின்னி பள்ளிக்கூட பெருமையை நிலைநாட்டியிருக்கும் முயற்சி பாராட்டத்தக்கது. 'ஆட்டோகிராப்' பாணி கதை தான் என்றாலும் இதில் பள்ளிக்கூடம் என்பதை ஒரு பாத்திரமாகக் காட்டி வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர்.

பள்ளிக்கூடத்துனூடே நரேன் - சினேகா பள்ளியில் காதல் வளர்த்ததையும் அந்தஸ்துப் பிரச்சினையால் நரேன் அவமானப்படுத்தப்பட்டு துரத்தப்பட்டதையும் ஒருவர் நினைவில் ஒருவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதையும் கூறியிருக்கிறார்கள். பள்ளிக்கு விமோசனம் பிறக்கும்போது தான் அவர்களின் காதலுக்கும் வழி பிறக்கிறது. இது ஒரு கதை. இப்படியே இயக்குனர் சீமானுக்கு ஒரு கதையும் வந்து போகிறது. அவ்வூருக்கு வரும் டாக்டர் ஸ்ரேயா ரெட்டிக்கு முத்து மீது அனுதாபம். இதை ஊர் தவறாகப் பேசுகிறது. அவமானப்படுத்தி ஸ்ரேயாவைத் துரத்துகிறது. ஸ்ரேயாவால் படிக்க வைக்கப்பட்ட முத்து அதாவது சீமான் பெரிய இயக்குனராக வளர்வது ஒரு கதை. இப்படி... உணர்ச்சிகரமான கதைகள். அதிலும் நரேன் - சினேகா காதல், காத்திருப்பு உணர்வுகளை அழுத்தமாக கூறி அசத்தியிருக்கிறார் இயக்குனர்.

நடிப்பை எடுத்துக் கொண்டால் கலெக்டராக வரும் நரேன் நன்றாகப் பொருந்தியிருக்கிறார். கலெக்டராக பொறுப்பைக் காட்டுவதிலும் சினேகா மேல் கோபத்தில் வெறுப்பைக் காட்டுவதிலும் பளிச்சிடுகிறார். சுத்தப்பாமரனாக ஐயோடி குமாரசாமியாக வரும் தங்கர்பச்சான் தனக்குச் சரியான சட்டையைத் தேர்ந்தெடுத்து அணிந்திருக்கிறார். அச்சு அசலான பொருத்தம். இயக்குனர் சீமான் படத்திலும் ஒரு இயக்குனராகவே வருகிறார். சினேகா கோகிலாவாக வாழ்ந்திருக்கிறார் - அதிகம் பேசாமலேயே அசத்தியிருக்கிறார். காதலின் வலியையும் காத்திருத்தலின் இறுக்கத்தையும் தனக்குள் புதைத்து வைத்துக் கொண்டு முகபாவங்களிலேயே பீறிட வைத்திருக்கிறார். சபாஷ் சினேகா. ஸ்ரேயா ரெட்டியும் பளீரென்று மனதில் நிற்கிறார்.

பாடல்கள் பரவாயில்லை ரகம். 'மீண்டும் பள்ளிக்கு' அழைக்கும் பாடல் தேன் சொட்டு. பொதுவாக இதுமாதிரி கதைகளில் பின்னியெடுக்கும் பரத்வாஜ் இதில் சற்று பின்தங்கிவிட்டது ஏனோ? அந்த வகையில் ஏமாற்றம்தான். சுகமான வரிகள் இனிய இசை இருந்தும் 'நரேன் - சினேகா' சம்பந்தப்பட்ட பாடலை படுக்கையறைக் காட்சிகளாக நிரப்பி படத்திற்குக் கரும்புள்ளி குத்திவிட்டார் தங்கர்.

பொதுவான திரைக்கதை சூத்திரங்களுக்கு உட்படாத வகையில் சொல்லப்பட்டிருக்கும் கதை. யதார்த்தமான காட்சிகள், நல்ல கருத்து என்று பல வகையிலும் பாராட்டு பெறும் தங்கர் இன்னும் சில செய் நேர்த்தியைக் கையாண்டிருந்தால் படம் காவியமாகியிருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்