என் உயிரினும் மேலான - விமர்சனம்

Webdunia

வியாழன், 16 ஆகஸ்ட் 2007 (15:11 IST)
webdunia photoWD
அஜீத் சந்தர், ராதிகா மேனன், எஸ்.பி.பாலசுப்ரமணியம், பாத்திமாபாபு, கருணாஸ், காக்கா ராதாகிருஷ்ணன், சாப்ளின் பாலு, சிங்கமுத்து நடிப்பில் செல்வா.ஆர் ஒளிப்பதிவில் தேவா இசையமைப்பில் கே.ஆர்.ஜெயா இயக்கியுள்ள படம்.

தொழிலதிபர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் - பாத்திமா பாபு தம்பதிகளின் ஒரே மகன் அஜீத் சந்தர். தன் செல்ல மகனுக்கு திருமணம் செய்து வைத்து பொறுப்பை கொடுக்க எஸ்.பி.பி.க்கு ஆசை. கல்யாண ஆசையோ காதலோ தன் மகனுக்கு வராதா என்று ஏங்குகிறார். ஒரு வழியாக காதலில் விழுகிறார் அஜீத். கண்டதும் காதல் கொள்ள வைக்கிற அந்த நாயகி ராதிகா மேனன்.

இந்த காதல் ராதிகா வீட்டில் தெரியவே எதிர்ப்பு. வெளிநாட்டிலிருக்கும் தாய்மாமன் ரஞ்சித்தை அவசரமாக அழைத்து திருமண ஏற்பாடு நடக்கிறது. காதலர்களின் காதலின் ஆழத்தை அறிந்து கொண்ட ரஞ்சித் விட்டுக் கொடுக்கிறார். முடிவு காதலர்கள் கணவன் - மனைவியாகிறார்கள். சுபம். இதுதான் 'என் உயிரினும் மேலான' படம்.

ஒரு ஹைதர்காலத்துக் கதை என்றால் கூட பரவாயில்லை. சிந்து சமவெளி நாகரிக காலத்து கதையை எடுத்துக் கொண்டு ப்ளாக் அண்ட் ஒயிட் காலத்து பாணியில் திரைக்கதை பண்ணி இந்த இன்டர்நெட் யுகத்தில் படத்தை வெளியிடும் துணிச்சல் இயக்குநர் கே.ஆர். ஜெயாவைத் தவிர யாருக்கும் வராது. அப்படிப்பட்ட துணிச்சலை பாராட்ட வேண்டும்(!)

தான் ஒரு துணிச்சல்காரர் என்பதை படம் முழுக்க பிரகடனப்படுத்திக் கொண்டே போகிறார் இயக்குனர்.

துறுதுறுப்பான இளைஞர் அஜீத் சந்தரை நாயகனாகவும் கிளுகிளுப்பான இளைஞி ராதிகா மேனனை நாயகியாகவும் தேர்ந்தெடுத்து இருவரையும் நடிப்புக்கு வாய்ப்பு தராமல் வீணடித்திருக்கிறார்.

ஒரு ஜென்டில்மேன் கேரக்டரான தொழிலதிபர் எஸ்.பி.பி. கப்பலெல்லாம் வாங்குவாராம். தன் மகனுக்கு பெண் ஆசை வரவில்லை என்று ஏங்குவாராம். பாத்திர முரண்பாடு பச்சையாகத் தெரிகிறது.

கதாநாயகி அறிமுகமே 'பிட் படம்' போல வருகிறது. பாடல் காட்சிகளிலும் படுக்கையறை சமாச்சாரங்கள்தான். பெரும்பாலும் கதாநாயகி உரித்த கோழியாகவே வருகிறார்.

எஸ்.பி.பி.யும் அவரது அப்பா காக்கா ராதாகிருஷ்ணன் தோன்றும் காட்சிகள் எல்லாவற்றிலுமே பாட்டிலும் கிளாஸுமாகவே இருக்கிறார்கள். அப்பா - பிள்ளை சம்பந்தப்பட்ட அனைத்துக் காட்சிகளும் 'தண்ணியடிக்கும்' காட்சிகளாகவே இருப்பது ஒரு புதுமை(!)

பேரனுக்கு பெண்ணை சேர்த்து வைக்க தாத்தாவும், மகனுக்கு கல்யாணம் செய்து வைக்க அப்பாவும் அலைகிற அலைச்சல் உறவுகளைக் கடந்த மலிவான கற்பனை.

இருவரும் நல்ல வசதியானவர்கள் என்கிறபோது சம அந்தஸ்தில் காதலுக்கு எந்தவிதப் பிரச்சினையும் இல்லை. இப்படியெல்லாம் கற்பனை செய்ய இயக்குனருக்கு முடிந்திருக்கிறது.

அம்மி கொத்த சிற்பி தேவையில்லை. ஆனால் சிற்பியை வைத்து அம்மி கொத்த வைத்திருக்கிறார் இயக்குனர். ஒரு வரி கூட உருப்படியான வசனம் இல்லை. பாலகுமாரன் எதற்கு?

தேவா ஒரு படத்துக்குப் பல ட்யூன்கள் போட்டு அவற்றிலிருந்து சிலவற்றை தேர்வு செய்து இயக்குனர்கள் எடுத்துக் கொள்வதுண்டு. மற்றவை தள்ளுபடியாகும். அப்படி தள்ளுபடியான ட்யூன்களை மட்டும் எடுத்துக் கொண்டு இப்படத்திற்காக செல்லுபடியாக்கியிருக்கிறார்கள்.

ஒரு காட்சியில் கூட புதுமை சுவாரஸ்யமில்லாமல் கடைசிவரை கதையை நகர்த்தி பார்ப்பவர் முகத்தில் கரியைப் பூசியிருக்கிறார்கள்.

இவ்வளவையும் ஒரு தனி மனிதர் நிறைவேற்றியிருக்கிறார் என்றால் அந்த துணிச்சல்மிக்க இயக்குனரைப் பாராட்டத்தானே வேண்டும்.

படத்தில் வேறு நல்ல விஷயங்களே இல்லையா...? ஊட்டி எழிலை கண்ணுக்குள் நிறைத்திருக்கும் செல்வாவின் ஒளிப்பதிவு, சிங்கமுத்துவின் சிரிப்பு வெடிகள் ஓர் ஆறுதல். ஆனால் அதுவே ஒரு படத்துக்குப் போதுமா? 'என் உயிரினும் மேலான' சராசரிக்கும் கீழான படம்.

வெப்துனியாவைப் படிக்கவும்