வீராப்பு - விமர்சனம்

Webdunia

சனி, 28 ஜூலை 2007 (18:30 IST)
சுந்தர்.சி, கோபிகா, பிரகாஷ்ராஜ், சுமித்ரா, தேஜாஸ்ரீ, சந்தானம், ரமேஷ் வைத்யா நடிப்பில் டி. இமான் இசையில் கே.எஸ்.செல்வராஜ் ஒளிப்பதிவில் பத்ரி இயக்கியுள்ள படம். தயாரிப்பு ஹோம் மீடியா பி. லிமிடெட்.

பிரகாஷ்ராஜ் கண்டிப்பான ஆசிரியர். கணக்கில் புலி. இந்த உலகத்தில் நடக்கும் எல்லாமே ஏதோ ஒரு கணக்கில்தான் அடங்கும் என்பது அவரது நம்பிக்கை. மகன் சுந்தர்.சி-யை கணக்கில் பெரிய மேதையாக ஆக்கவேண்டும் என்பது அவர் கனவு. ஆனால் சுந்தர்.சி-க்கோ அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம். தன் எண்ணத்துக்கு மாறாக மகன் இருக்கிறானே என்று மகனை கடுமையாகத் தண்டிக்கிறார். கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்காததற்கு மகனை விளாச, மகனோ தன்னுடன் ஒப்பிட்டு பேசப்படும் இன்னொரு மாணவனை கையில் குத்திவிடுகிறார். இதை அறிந்த பிரகாஷ்ராஜ் தன் மகனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவிட வெளியே வரும் சுந்தர்.சி கெட்டவனாக வருகிறார்.

அடிதடி, அடாவடி, குடி, கூத்து கும்மாளம் என்று ஆளே மாறி விடுகிறார். கணக்கு ஆசிரியரான தன் கணக்கு இப்படி தப்பாகிவிட்டதே என்று நொந்து போகும் பிரகாஷ்ராஜ் மகன் சுந்தர்.சி-யை மிகவும் வெறுக்கிறார். இப்படிப்பட்ட சுந்தர்.சி-யை டீச்சராக அந்த ஊருக்கு வரும் கோபிகா காதலிக்கிறார். சுந்தர்.சி ரவுடி என்பதால் அவரது தங்கை சந்தோஷியின் திருமணம் நின்றுபோகிறது. பிரகாஷ்ராஜ் மீது ஒரு கொலைப் பழியும் விழுகிறது. இரண்டு பிரச்சினைகளையும் சமாளித்து அப்பாவின் மதிப்பில் மகன் உயர்வதுதான் `வீராப்பு' கதை.

படம் ஆரம்பித்ததுமே சுந்தர்.சி அடிக்கிறார்; உதைக்கிறார்;
நொறுக்குகிறார்; எலும்புகளை முறிக்கிறார்; சுழற்றி வீசுகிறார்; உருட்டி புரட்டுகிறார், அப்பப்பா... ஆரம்பமே இப்படி அடிதடியாக இருக்கிறதே என்று கவலை வருகிறது. இந்த அடிதடி காட்சியை சுமார் ஒரு ரீலுக்கு உருட்டுவது போல் நீளம். முதல் படம் 'தலை நகர'த்திலும் அடியாள் இதிலும் அடிதடி! சுந்தர்.சி... அதற்குள் போரடிக்க ஆரம்பித்து விட்டாரே. சரியா? கதை, கேரக்டர் தேர்வில் கவனம் செலுத்த வேண்டாமா?

அடக் கொடுமையே... படம் ஆயிரத்தொன்றாவது ஆக்‍ஷன் படமாக இருக்கிறதே என்று அதிர்ச்சியுடன் உட்கார்ந்தால் கொஞ்ச நேரத்தில் நமக்குள் நிம்மதிப் பெருமூச்சு. படம் அப்பா, மகன் செண்டிமெண்ட் பற்றியும் சொல்லப் போகிறது என்கிற அறிகுறிகள் தென்படுகின்றன. மகனை கடுமையாகத் தண்டித்தால் அவன் எதிர்மறையாக மாறிவிடுவான் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனாலும் படம் பார்க்கும்போது 'வெயில்' முதல் அண்மை 'கிரீடம்' வரையில் பல படங்களில் வாசனை வீசுவதை உணர முடிகிறது.

படத்தில் முழு மதிப்பெண்களை அள்ளிக் கொண்டு போகிறவர் பிரகாஷ்ராஜ். அப்பப்பா கண்டிப்பான ஆசிரியர், பொறுப்பான அப்பா, கெளரவமான குடும்பத் தலைவர் என அத்தனை விதங்களிலும் பளிச்சிடுகிறார். சுந்தர்.சி. ஒரு ரவுடி, பொறுக்கி என்பதை ஏற்கவே முடியவில்லை. தோற்றம், பேச்சு எல்லாமே குழந்தை போல இருக்கிறது. பளிச்சென்று ஷேவ் செய்து பவுடர் போட்ட முகம், கூலிங் கிளாஸ்... இப்படி ஹீரோ போல பளிச்சென்று தோன்றுகிறார். வெள்ளை மனசுக்காரராகத் தெரியும் அவருக்கு முரட்டுத்தனம் ஒட்டவே இல்லை. வசன உச்சரிப்பு ஏற்ற இறக்கத்தில் ஆவேசமில்லை. சாரி சுந்தர்.சி! வழக்கம் போல முரட்டுத்தன வாலிபனை நாயகனை பிடிவாதமாகச் சுற்றித்திரிந்து காதலிக்கும் கேரக்டர் கோபிகாவுக்கு. ஐயோ பாவம்!

அவிழ்த்து விடுகிற ஆபாசங்கள், இரட்டை அர்த்த வசனங்களை மன்னித்து விட்டுப் பார்த்தால் விவேக்கின் காமடி டிராக்கை ரசிக்கலாம். அந்தப் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரவாயில்லை. பளிச்சென்று பதிகிறார்.

சுந்தர்.சி அடியாளா, பொறுக்கியா இல்லை தன் தந்தையை வெறுப்பேற்ற மட்டுமே இப்படிச் செய்கிறாரா என்பது புரியவில்லை. இந்தக் குழப்பம் வந்ததால் படம் இடைவேளைக்குப் பிறகு இழுபறியாகிவிடுகிறது. அப்பா, மகன் இருவருக்குள்ளும் 'வீராப்பு' புகுந்து கொண்டு படுத்தி வைப்பதே கதை எனலாம். ஆனால் அதை மனதில் தைக்கும்படி சொல்லவில்லை.

ஒளிப்பதிவு கே.எஸ். செல்வராஜ் அவர் பங்கைச் சரியாகச் செய்துள்ளார். பழைய வாசனை வீசினாலும் பாடல்களை கேட்க வைத்து விடுகிறார் டி. இமான். குறிப்பாக 'போனால் வருவீரோ', 'புலியை கிளி ஜெயிச்சா காதல்' பாடல்கள் ரசிக்கும்படி உள்ளன.

புதிய மொந்தையில் பழைய கள் தான் இந்தப் படம்.

வெப்துனியாவைப் படிக்கவும்