வாசன் கார்த்திக், மிதுனா, வடிவேல், டெல்லி கனேஷ், சீதா, கருணாஸ், நிழல்கள் ரவி, கோட்டைக் குமார் நடிப்பில் ஏ. கார்த்திக் ராஜா ஒளிப்பதிவில், கார்த்திக் ராஜா இசையில், கே.கே. கிருஷ்ணன் இயக்கியுள்ள படம். தயாரிப்பு தமிழ்நாடு தியேட்டர்ஸ்.
மதுரை ஜங்ஷனில் போர்ட்டராக இருப்பவர் வாசன் கார்த்திக். ரயிலிலிருந்து இறங்கிய மிதுனா தன் செல்போனைத் தவறவிட்டு விடுகிறார். அது வாசன் கார்த்திக் கையில் கிடைக்கிறது. திருப்பி ஒப்படைக்கிறார். அந்த நேர்மை மிதுனாவுக்குப் பிடித்துவிடவே காதல் அரும்புகிறது. இது மிதுனாவின் அண்ணனான அரசியல்வாதி கோட்டைக் குமாருக்குப் பிடிக்கவில்லை. இந்நிலையில் தான் ஒரு கூலி என்றும் அனாதை என்றும் உண்மையைக் கூறி இந்தக் காதல் நிறைவேறாது என்று விலகி விடுகிறார் கார்த்திக்.
பிறகு சீதாதான் கார்த்திக்கின் தாய் என்று தெரிகிறது. சீதா பெரிய தொழிலதிபர். அம்மா கிடைத்த மகிழ்ச்சியில் கார்த்திக். தன் காதலன் ஒரு கூலியல்ல அந்தஸ்துள்ள குடும்பத்துப் பையன் என்பது மிதுனாவுக்குப் புரிகிறது. இறுதியில் அம்மாவுடன் சேர்ந்தாரா... காதல் என்னாகும்... என்றால் ஒரு திடீர் திருப்பத்துடன் முடிகிறது `மாமதுரை' கதை. தான் தன் அம்மாவுடன் சேர்ந்தால் பலருக்கும் பாதிப்பு வரும் என்று கார்த்திக் ஒரு முடிவு எடுக்கிறார்... அதுதான் க்ளைமாக்ஸ்.
படத்தின் நாயகன் வாசன் கார்த்திக் புது முகமாம். பேரழகன் இல்லை என்றாலும் பார்க்கும் படியான தோற்றம். நடிப்பில் அனுபவப்பட்டவரைப் போல தெரிகிறார். சண்டைக் காட்சிகளில் பின்னிப் பெடலெடுக்கிறார். அதனால் அவரையும் ஏற்றுக்கொள்ள வைத்துவிடுகிறார். இந்த வாசன் கார்த்திக் வேறு யாருமல்ல காமடி நடிகர் சிங்கமுத்துவின் மகன்தான். நாயகி மிதுனா மிகச் சுமாரான முகம். சுமாரான நடிப்பு. தயாரிப்பாளர் கோட்டைக் குமார் `ஒன்வே குமார்' பெயரில் அரசியல்வாதியாக வருகிறார். தெலுங்கு வில்லன்களை நினைவுபடுத்துகிறார்.
படம் முற்பாதியில் ஒரு கூலிக்கும், வசதியான நாயகிக்குமான காதலைச் சொல்கிறது. பின்பாதி நாயகன் அனாதையல்ல ஒரு அம்மாவின் பிள்ளை என்று நிரூபிக்க முயல்கிறது. சந்தர்ப்பவசத்தால் பிரிந்தவர்களைச் சேர்த்து வைக்க நகர்கிறது. சீதாவும், வாசன் கார்த்திக்கும் சந்தித்து அடையாளம் காணும்படி வருகிற சந்தர்ப்பங்களை எல்லாம் தவறவிடுவது இழுவையாக இருக்கிறது. சஸ்பென்ஸைக் காட்டுவதாக நினைத்து `சவசவ'க்க வைத்துவிடுகிறார்கள். இந்த இழுவைக்கெல்லாம் பரிகாரமாக ஈடுசெய்வது வடிவேலின் நகைச்சுவை. அவர் அப்பாவித்தனமாகச் செய்யப் போய் ஏதாவது வம்பில் சிக்கி அடிவாங்கும் காட்சிகள் அதிரடி சிரிப்பு வெடிகள்.
படத்தில் குறிப்பிடப்பட வேண்டியவர்கள் இரண்டு கார்த்திக் ராஜாக்கள். ஒருவர் ஒளிப்பதிவாளர். இன்னொருவர் இசையமைப்பாளர். கொடைக்கானல் குளுமையையும், மதுரை மாநகர அழகையும் கண்களுக்கு விருந்தாக்கி இருக்கிறார் ஒருவர் என்றால், ரசிக்கும்படி டியூன் போட்டு காது வழியே நமக்குள் புகுந்துவிடுகிறார் இன்னொருவர்.
புதுமுக நாயகன், நாயகியை வைத்து பி. வாசு பாணியில் ஒரு மசாலா தந்திருக்கிறார் அவர் சீடர் இயக்குநர் கிருஷ்ணன்.