துள்ளல் - விமர்சனம்

Webdunia

சனி, 30 ஜூன் 2007 (17:48 IST)
webdunia
பிரவீன் காந்த், குர்லின் சோப்ரா, சோனிகா, விவேக், இளவரசு, மனோபாலா, மாணிக்க விநாயகம், உமா பத்மநாபன், ராஜீவ் நடிப்பில் சுரேஷ் தேவன் ஒளிப்பதிவில் தினா இசையில் பிரவீன் காந்த் இயக்கியுள்ள படம். தயாரிப்பு கிருதேவ் ஆர்ட்ஸ்.

பார்க்கிற பெண்களையெல்லாம் படுக்கயறை வரை அழைத்து கற்பனை செய்கிறவன் சீனு. புதுப்புது தந்திரங்கள் செய்து அப்பாவிப் பெண்களை காதலிப்பது போல் நடித்து உடல் சுகம் கண்டு உதறி விட்டு விடுவது காமவெறியன் சீனுவின் பொழுதுபோக்கு.

அப்படி இவனால் வசியம் செய்யப்பட்டு `பொட்டலம்' கட்டப்பட்டவள் ஸ்ருதிகா. அபார்ஷன் செய்வதையே தொழிலாகக் கொண்ட கிளினிக்கில் வேலை பார்ப்பவள் காயத்ரி. திருட்டுக் காதல் ஜோடிகள் கருக் கலைப்புகளைப் பார்த்து ஆண்கள் மீதும் காதல் மீதும் வெறுப்புடன் இருப்பவள் காயத்ரி.

ஸ்ருதிகா விஷயம் காயத்ரிக்குத் தெரியவே, போலீசில் சொல்லி அந்தக் காமுகனை கம்பி எண்ண வைத்து விடலாம் என்கிறாள். நிஜமாகவே சீனுவைக் காதலித்த ஸ்ருதிகா மனம் மாறி மறுத்து விடுகிறாள். ஆண்களையும் காதலையும் வெறுத்து இருக்கும் காயத்ரியையே `பொட்டலம்' கட்ட திட்டமிடுகிறான் சீனு.

இதை ஒரு சவாலாக எடுத்து தந்திரங்கள் செய்து மனதில் இடம் பிடித்து விடுகிறான். திருமணமும் ஆகிறது. ஆனால் தான் விரும்பும்வரை தன்னைத் தொடக்கூடாது என்கிறாள். ஊட்டிக்கு ஹனிமூன் போகும்படி ஆகிறது. அங்கே டூரிஸ்ட் கைடாக ஸ்ருதிகாவைச் சந்திக்கிறார்கள் சீனுவும் காயத்ரியும். பழைய உண்மைகள் வெளியாகின்றன. முடிவு என்ன என்பதுதான் 'துள்ளல்' படத்தின் மீதிக்கதை.

இயக்குனர் பிரவீன் காந்த் தான் நாயகன். தன் உருவத்துக்கும் தோற்றத்துக்கும் ஏற்றமாதிரி கேரக்டரை தேர்வு செய்திருக்கிறார். சீனு என்கிற சட்டை அவருக்குப் பொருத்தமாக இருக்கிறது.

பார்க்கிற பெண்களை 'பலான' கற்பனைக்குள் இழுத்து அனுபவிக்கும் சீனுவின் பாத்திரம் வக்கிரம்தான். இருந்தாலும் சுவாரஸ்யமான காட்சிகளை வைத்து இருக்கிறார்.

அறிமுக நாயகிகள் குர்லின் சோப்ரா ஸ்ருதிகாவாக வருகிறார். நன்றாக நடித்துள்ளார். காயத்ரியாக வரும் சோனிகாவும் சோடை போகவில்லை. கவர்ச்சியிலும் இருவரும் சளைக்கவில்லை.

முன்பாதிப் படம் விறுவிறுப்பாக நகர்கிறது. ஊட்டிக்குச் சென்றதும் படத்தில் வேகத்தடை விழுந்து விடுகிறது. பிறகு ஒருவழியாகச் சமாளித்து நகர்கிறது. படத்தின் கதையும் போக்குமே கலகலப்பும் விறுவிறுப்பும் கலந்த மாதிரி இருப்பதால் விவேக்கின் காமெடி ஓவர்டோஸ். நீளமான காமெடி ட்ராக் ஆங்காங்கே சிரிக்க வைப்பதற்குப் பதில் எரிச்சலூட்டுகிறது. மாத்ருபூதத்தை எரிச்சல் மூட்டும் காமெடி படுபோர். விவேக்கை மந்திரவாதி திசைமாற்றுவதை மட்டும் ஓரளவு ரசிக்கலாம். மற்றவை எல்லாம் இரட்டை அர்த்த ஆபாசத் தோரணங்கள்.

தினாவின் இசையில் எல்லாப் பாடல்களும் பரவாயில்லை. ஆறு பாடல்கள். அதிகம் போலத் தோன்றுகிறது.

சிம்புவின் 'மன்மதன்' ரகக் கதை, ஆங்காங்கே தென்படும் இரட்டை அர்த்த வசனங்கள், சில காட்சிகளைத் தவிர்த்திருந்தால் படத்துக்கு இன்னும் தரம் கூடியிருக்கும். தனக்கேற்ற பாத்திரம் படைத்து உட்கார வைக்கும்படி கதை சொல்லியதில் பிரவீன்காந்த் வெற்றி பெற்று விட்டார் என்றே சொல்லவேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்