பிறப்பு - விமர்சனம்

Webdunia
அறிமுக நாயகன் பிரபா, கார்த்திகா, மயூகா, சுலக்ஷணா, மகாதேவன், கஞ்சா கருப்பு, சரண்யா நடித்துள்ளனர். ஒளிப்பதிவு-ஷங்கி மகேந்திரா, இசை-பரத்வாஜ், இயக்கியிருப்பவர் எல்.வி.இளங்கோவன். தயாரிப்பு எஸ்.ஆர்.எம்.பிலிம் இண்டர்நேஷனல்.

தங்களுக்குப் பிள்ளை இல்லாத மகாதேவன் சரண்யா தம்பதிகள், விஜய்கிருஷ்ணராஜ்-சுலக்ஷனா தம்பதிகளின் மகன் பிரபாவை சுவீகாரப் புத்திரனாக எடுத்துக் கொள்கிறார்கள். இரு தரப்பும் மனமொத்து இது நடக்கிறது. இதை சரண்யாவின் தம்பி சண்முகராஜன் எதிர்க்கிறார். சாதிவிட்டு சாதி போய் வேறு இடத்தில் சுவீகாரம் எடுத்தது அவருக்குப் பிடிக்கவில்லை. இநதப் புகைச்சல் பல வழிகளில் வெளிப்படுகிறது. பிரபா கல்லூரி மாணவி மயூகாவுடன் பழகி காதல் வளர்க்கிறார். ஆனால் பிரபாவை சண்முகராஜனின் மகள் கார்த்திகா விரும்புகிறார். இருவரும் விரும்புவதாக எண்ணி சண்முகராஜன் மாப்பிள்ளை கேட்டு பிரபாவின் வீடு செல்ல, பிரபாவோ தான் கார்த்திகாவை விரும்பவில்லை என்று கூற பகை மேலும் வளர்கிறது. ஒரு கட்டத்தில் மகாதேவன்-சரண்யா தம்பதிகள் சென்ற காரில் குண்டு வைத்துக் கொல்லப்படுகிறார்கள். பின்னணியில் சண்முகராஜன். தன்னை சுவீகாரம் எடுத்த பெற்றோர்களுக்கு கொள்ளி வைக்க பிரபா விரும்ப வேறு சாதியென்று கூறி எதிர்ப்பு வருகிறது. முடிவு என்ன என்பது தான் "பிறப்பு" படத்தின் மீதிக் கதை.

ஒரு வீட்டிலிருந்து பெற்றோரைப் பிரிந்து போய் வேறு ஒரு வீட்டுக்கு சுவீகாரப் பிள்ளையாகப் போகும் ஒருவனின் மனப்போராட்டமே நல்ல கதைக் களம் தான். ஆனால் அதைச் சரியாகப் பயன்படுத்தவில்லை. ஆடுகளத்துக்கேற்ற ஆட்டம் ஆடாமல் திணறியிருக்கிறார் இயக்குநர். டென்னிஸ் ஆடுகளத்தில் கபடி ஆடி குதறி களத்தையும் ஆட்டத்தையும் நாசப்படுத்திவிட்டார்.

சுவீகாரப் பிள்ளையின் மனவலியைச் சொல்வதா, சுவீகாரம் கொடுத்த அல்லது எடுத்த பெற்றோரின் பாசப் போராட்டத்தைச் சொல்வதா அல்லது இடையில் ஒரு முக்கோணக் காதல் கதையை நகர்த்துவதா என்று இயக்குநர் குழம்பியிருக்கிறார். நம்மையும் சேர்த்து குழப்பியிருக்கிறார். விளைவு? மூக்கணாங்கயிறு அறுந்த காளை மாடு போல கதை போக்கிடம் தெரியாமல் தறிகெட்டு ஓடுகிறது. கண்ணனாக வரும் பிரபா பெரும்பாலான காட்சிகளில் முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டே இருக்கிறார். அவரது வருத்தம், சோகம், விரக்தி பற்றிய பின்னணி எதுவும் அழுத்தமாகச் சொல்லப் படவே இல்லை. கார்த்திகா கிராமத்து துடுக்குப் பெண்ணாக வருகிறார். கொஞ்சம் தோற்றத்திலும் நடிப்பிலும் ரத்த சோகை நோயாளி போல் இருக்கிறார். ஐயோ பாவம். நொண்டியடிக்கும் கதையில் கோட்டியாக வரும் கஞ்சா கருப்புவின் லூட்டி சிறு ஆறுதல். வாய்ச் சவடால் பேசி வாங்கிக் கட்டிக் கொள்வது சரியான தமாஷ்வாலா!

பெற்றோரையும் மகிழ்விக்கவில்லை. போற இடத்திலும் நிம்மதி தரவில்லை. காதலியுடனும் சேரவில்லை. விரும்பியவளையும் மண முடிக்கவில்லை. கண்ணன் பாத்திரத்தின் நோக்கு தான் என்ன. யாருக்கும் புரியவில்ல¨.

படத்தில் ஆறுதலான அம்சங்கள் ஒளிப்பதிவும் இசையும் கிராமத்து மண்ணையும் மனிதர்களையும் அழகாக கேமராவுக்குள் சிறைப் பிடித்து நமக்கு தரிசனம் செய்திருக்கிறார் ஷங்கி மகேந்திரா. ஒரு பெரிய நட்சத்திரப் படத்துக்குரிய தகுதியுடன் ஆறு பாடல்களுக்கு அருமையான டியூன் போட்டு அசத்தியிருக்கிறார் பரத்வாஜ். வரிகளும் நன்றாக உள்ளன. பாடல் வரிகளில் சொல்ல வந்த கதையம்சத்தைக் கூட படத்தில் சொல்ல முடியாததுதான் சோகம்.

பொதுக் கூட்ட மேடைகளில் இறுதியாக ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லப் போகிறேன் என்பார்கள். கடைசி வரசொல்லாமல் போய்விடுகிறார்கள். அது போல படத்தில் பல பாத்திரங்களின் மூலம். கதைப் போக்கின் மூலம் எதையோ சொல்ல வருகிறார் இயக்குநர் என்று நினைத்தால், இறுதி வரை எதையுமே சொல்லாமல் போய்விடுகிறார். அதைச் சரியாக சொல்லியிருந்தால் "பிறப்பு" படத்தில் இருந்திருக்கும் "சிறப்பு". ம்ஹீம்.

வெப்துனியாவைப் படிக்கவும்