அறிமுக நடிகர் கார்த்தி, ப்ரியாமணி, சரவணன், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு நடிப்பில் ராம்ஜியின் ஒளிப்பதிவில் யுவன் சங்கர் ராஜா இசையில் அமீர் இயக்கியுள்ள படம். தயாரிப்பு ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா.
பொன்வண்ணனின் மைத்துனர் வேறு ஜாதிக்காரப் பெண்ணை விரும்புகிறார். இதை பொன்வண்ணன் எதிர்க்கிறார். தனியே சென்ற மைத்துனர் வேறு ஜாதிப் பெண்ணுடன் குடித்தனம் செய்கிறார். குழந்தையும் பிறக்கிறது. புகையாக வளர்ந்த பகை நெருப்பாகச் சீற தன் மைத்துனரையும் மனைவியையும் கொன்றுவிடுகிறார் பொன்வண்ணன். குழந்தை அனாதையாகிறது. அதை எடுத்து வளர்க்கிறார் சரவணன். அந்தக் குழந்தைதான் பருத்திவீரன் கார்த்தி.
நெஞ்சில் ஈரமின்றி நேச குணமுமின்றி அஞ்சாத ஒருவனாக வளர்கிறான் பருத்திவீரன். அடிதடி வெட்டுக்குத்து அவனுக்கு சாதாரணம். ஆனால் அவனுக்குள் சாதாரணம். இப்படிப் போகிற அவனுக்குள்- வீரம் மட்டுமே கொதிக்கிற அவனுக்குள் ஈரம் விதைக்கிறாள் முத்தழகு. சின்ன வயது சினேகம். இறுதி வரை இணைய விரும்புகிறது. முத்தழகுவின் தந்தைதான் கழுவுச் சேர்வை. தன் குடும்பத்தை கொன்று குவித்தவனின் மகளுடன் காதலும் வாழ்வும் சாத்தியமா என்று பருத்திவீரன் மறுத்து விடவே.. பருத்திக்குள் புகுந்து கொண்ட ஒருத்தி விடுவதாக இல்லை. துரத்துகிறாள் வருத்துகிறாள் உறுத்துகிறாள். காதல் தீயைக் கொளுத்துகிறாள்.. இறுதியில் எதிர்ப்புகளை இவர்கள் காதல் வென்றதா..? வென்றது வீரமா.. ஈரமா? என்பதை சுவையான திருப்பங்களுடனும் பரபரப்பான காட்சிகளுடனும் சொல்லியிருக்கும் படம் தான் "பருத்தி வீரன்".
படத்தின் ஆரம்பமே அமர்க்களம். ஊர்த் திருவிழாவில் தாரை தப்பட்டை முழுங்க ஆட்டம் பாட்டம் என பட்டையைக் கிளப்ப நம்மைக் கொண்டு போய் மதுரை மண்ணில் இறக்கிவிட்டு கதை சொல்ல ஆரம்பிக்கிறார் அமீர்.
ஒவ்வொரு காட்சியையும் திரைப்படத்துக்கு உருவாக்கியதாகத் தோன்றாமல் நிஜவாழ்க்கையை நிகழ்ச்சிகளை பதிவு செய்து படமாக்கிறது போல் இயல்பாகக் காட்டியிருப்பது நேர்த்தி.
அதிகம் பேசாமல் குறைவான வசனங்களின் மூலமும் காட்சி அழுத்தத்தின் மூலமும் காட்டி இருப்பதில் இயக்குநரின் திறமை பளிச்சிடுகிறது. கோயில் திருவிழாவில் குஸ்தி வாத்தியார் என்கிற ஒருவர் குத்தப்படுகிறார். ஒரு போர்க்களத்தில் சிந்த வேண்டிய ரத்தமும் விழவேண்டிய சடலமும் ஏற்படுத்தும் பாதிப்பை அந்த ஒரு காட்சியில் காட்டியிருக்கிறார். என்றால்.. அந்த மூர்க்கத்தனத்தை இவர் அழுத்தமாகச் சித்தரித்துக் காட்டியிருப்பதால் தான் சாத்தியப்பட்டிருக்கிறது. இதுபோல் படம் முழுக்க அழுத்தமான காட்சிகள் பல உள்ளன.
இயக்குநரின் காட்சிகளுக்கு இயல்பு மீறாத ஒளிப்பதிவும் யதார்த்தமான வசனங்களும் பக்க வாத்தியங்கள் என்றால் கிராமியம் பொங்கும் யுவனின் இசை பக்கா வாத்தியமாக துணை நிற்கிறது. இதுவரை மேற்கத்திய தாக்கத்தில் இசை வழங்கி வந்த யுவன் சங்கர் ராஜா இதில் கிராமத்து வாசனையை நுகர வைத்துள்ளார் வெல்டன் யுவன்! இளையராஜா பாடியுள்ள "அறியாத வயசு" இதயம் வரை நனைக்கிற பாடல். "ஐய்யயோ..." சரியான மனத்துள்ளல். "சரிகமபதநி", "டங்காடுங்கா" கேட்டால் இனிப்பவை. "ஊரோரம் புளிய மரம்" கேட்கும் போது.. புளியம்பூ தலையில் உதிரும் உணர்வு. கிராமிய வரிகளும் தனக்குச் சாத்தியம் என்று நிரூபித்துள்ளார் சினேகன்.
சிவகுமாரின் மைந்தன் கார்த்தி இதில் அறிமுகமாகியிருக்கிறார். கார்த்தி பற்றி அண்ணன் சூர்யா கவலைப்பட வேண்டாம். இவர் இப்போது அண்ணனுக்குப் போட்டியாக முடியாது. "பருத்தி வீரனி"ல் கார்த்திக்கு நடிக்கத் தெரியவில்லை. நடிப்பே வரவில்லை. இதுதான் நிஜம். அந்தப் "பருத்தி வீரனாக" வாழ்ந்திருக்கிறார். கதாபாத்திரமாகவே மாறிவிட்ட பின் நடிப்புக்கு அங்கே என்ன வேலை? ஆக கார்த்தி நடித்து இனிமேல் தான் முதல் படம் வெளியாக வேண்டும். வாழ்த்துக்கள் கார்த்தி!
இளைத்துப் போன ப்ரியாமணியிடம் இவ்வளவு அடர்த்தியான திறமை இருப்பது அமீரின் மூலம்தான் வெளிவந்திருக்கிறது. முத்தழகுவாக ப்ரியாமணி அசத்தியிருக்கிறார் அழகாக. அப்படியென்றால் மற்றவர்கள்.. நடிப்பு எப்படி? ஆவேசமாகத் திரியும் பொன்வண்ணன் மீசையும் கோபமுமாக மிடுக்கு காட்டுகிறார். பருத்திவீரனின் தோழனாக வரும் சித்தப்பா சரவணன் நல்லதொரு குணச்சித்திரம் காட்டுகிறார். நெருக்கடியான சூழல்களிலும் சிரிக்க வைக்கும் கஞ்சா கருப்புவின் நடிப்பிலும் யதார்த்தம் இழைகிறது. ப்ரியாமணியின் அம்மாவாக வரும் சுஜாதா, அப்பத்தாவாக வரும் திருமங்கலம் பஞ்சவர்ணம், மருதுவாக வரும் சம்பத், குட்டிச்சாக்கு விமல்ராஜ், பொணம்தின்னி செவ்வாளை ராஜு, சிறுவயது பருத்திவீரன் ராம்குமார், சிறுவயது முத்தழகு கார்த்திகாதேவி "குறத்தி" அம்முலு என.. எல்லாருமே நினைவில் நிற்கும்படி நடிப்பை வழங்கியுள்ளனர். அதன் பின்னணியில் இருப்பது அமீரின் உழைப்பு.
ப்ளாஷ்பேக் காட்சிகளை நீண்டநேரம் காட்டாமல் அவ்வப்போது இணைத்து இழைத்திருப்பதில் அமீரின் யுக்தி பளிச்சிடுகிறது. ரசிக்கவும் வைக்கிறது.
நிறைய புதிய புதிய முகங்களும் அவர்களின் புதிய குரல்களும் படத்துக்கு யதார்த்தத்தைக் கூட்டுகின்றன. ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன. இது சினிமா என்பதை மறக்க வைக்கும் இம்முயற்சியில் அமீருக்கு வெற்றியே.
வன்முறையும் வன்முறை சார்ந்த எண்ணங்களும் வாழ்க்கையை அழித்துவிடும். மனித இனம் சாகசங்கள் செய்து சரித்திரம் படைக்கும் இந்தக் காலத்தில் சாதீயம் பேசுவதும் சண்டைகள் போடுவதும் தேவையற்றது. ஆழமான காதலுக்கு முன் அனைத்தும் சாதாரணம். இப்படிப்பல கருத்துகளை சொல்லாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர் அமீர். அன்று இதே கருத்தை வலியுறுத்திச் சொன்ன "தேவர் மகன்" ஏற்படுத்திய பாதிப்பை "பருத்தி வீரன்" படமும் ஏற்படுத்துகிறது என்பது நிஜம்.