முனி ராகவா லாரன்ஸ், வேதிகா, ராஜ்கிரண், வினுசக்ரவர்த்தி, கோவை சரளா, "காதல்" தண்டபாணி, ராகுல்தேவ், "ஹட்ச்" டேவிட் ஆகியோர் நடிப்பில், பரத்வாஜ் இசையில், கே.வி. குகன் ஒளிப்பதிவில் ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ள படம். தயாரிப்பு ஜெமினி புரொடக்ஷன்ஸ் (பி) லிமிட்டெட்.
லாரன்ஸ் ஒரு பயந்தாங்கொள்ளி. வினுசக்ரவர்த்தி-கோவை சரளா தம்பதியின் மகன். மாலை ஆறு மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வரப் பயப்படும் லாரன்ஸக்கு திருமணம் ஆகிறது. ஒரு வீட்டுக்கு குடி போகிறார்கள். அங்கு ஒரு முனி இருக்கிறது. அது ராஜ்கிரண். குப்பத்து நல்ல மனுஷன் ராஜ்கிரண். அவரது கூட்டத்தினரின் ஓட்டுகளை பெற்றுத் தேர்தலில் ஜெயித்த "காதல்" தண்டபானி காரியம் முடிந்ததும் ராஜ்கிரணைக் கொலை செய்து எரித்துவிடுகிறார். வெகுண்டெழுந்த ஆவி, முனியாகி லாரன்ஸ் உடம்புக்குள் புகுந்து எதிரிகளைப் பழிவாங்குவது தான் "முனி"யின் கதை.
இது ஒரு திகில் கதைதான் என்றாலும் நகைச்சுவைக்கும் கலகலப்புக்கும் பஞ்சமில்லை. லாரன்ஸின் பயந்தாங்கொள்ளித் தனத்தை வெளிப்படுத்த அமைக்கப்பட்டுள்ள காட்சிகள் எல்லாமே தௌசன்ட்வாலா சரவெடி.
முன்பாதி நகைச்சுவை கலகலப்பு என்று போகும் கதை பின்பாதியில் முனியின் வருகைக்குப் பின் விறுவிறுப்பு பரபரப்பு என்று ஆடுபிடித்து பறக்கிறது.
பயந்து நடுங்குகிற போதும் முனி புகுந்து காரியங்களைச் செய்கிற போதும் லாரன்சின் நடிப்பு யதார்த்தமாக இருக்கிறது ரசிக்க வைக்கிறது. குப்பத்து ஜனங்களின் நம்பிக்கைக்குரியவராக வரும் ராஜ்கிரண் தன் அப்பாவித்தனத்தாலும் முனியாக மாறி பழி வாங்கும் போது ஆவேசத்தாலும் அள்ளிக் கொண்டு போகிறார். சரியான தேர்வு! நாயகி வேதிகா வழக்கமான தமிழ்ச் சினிமா நாயகி. ரெண்டு பாட்டு நாலு காட்சி என்று நகர்ந்து கொண்டுவிடுகிறார். வினுசக்ரவர்த்தி, கோவை சரளா தம்பதிகள் மட்டுமல்ல டெல்லி கணேஷ்-மீரா கிருஷ்ணா தம்பதிகளும் கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள். கடுமை காட்டும் வில்லன் "காதல்" தண்டபாண்டியும் கர்ஜிக்கிறார். வடிவேலுவை கலங்க வைக்கும் புதுவரவு ஹட்ச் டேவிட் காமடியில் கலக்குகிறார். "சந்திரமுகி"யில் நடித்த வடிவேலுவையே தூக்கிச் சாப்பிட்டு விடுகிறார் காப்பியடித்து அச்சு அசலாக வடிவேலு மொழி பேசும் டேவிட்டிடம் திறமையும் இருக்கிறது. ஒரு சுற்று வரும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றன இவரிடம். "டிப்" அடித்த டேவிட்டு கலக்கிட்டப்பு! "சந்திரமுகி" பாணியில் கதை என்றாலும் "முனி" பரபரப்பை கடைசி வரை கொண்டு போய் காப்பாற்றி படத்தை தூக்கி நிறுத்தி இருக்கும் இயக்குநரின் திரைக்கதையில் திறமை பளிச்சிடுகிறது. யதார்த்தம், குலையாமலும் காட்சிகள் தேங்காமலும் படத்தொகுப்பு செய்திருக்கிறார் சுரேஷ் அர்ஸ்.
படத்தைத் தாங்கி நிற்கும் ஒரு தூணாக ஒளிப்பதிவைக் கூறலாம். ஒளி அமைப்பிலும் கோணங்களிலும் ஆங்கிலப் படத்தைப் போல அசத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கே.வி.குகன். இது மாதிரி பரபரப்பு படத்துக்கான ஒளிப்பதிவின் தோவையை அறிந்து சரியாகச் செய்திருக்கிறார். வெல்டன் குகன்.
வித்தியாசமான இசைக்கு முயன்று வெற்றியும் பெற்றிருக்கிறார் பரத்வாஜ். "சுரு சுரு சுசுரவர்த்தி" 100 சதவீதம் ஜனரஞ்சகம். இந்தப் பாடல் லாரன்ஸ். வரிகளில் "வாளை மீன்" பாதிப்பு. இருந்தாலும் ரசிக்க முடிகிறது. "வர்றாண்டா முனி" பன்ச் பாட்டு. "தலை சுத்துதே மாமா" பக்கா கமல்ஷியல்.
படத்தில் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் பிரமாதப்படுத்துகின்றன. ஒரு பேய்க் கதையை எடுத்துக் கொண்டு அதை தொழில்நுட்ப நேர்த்தியுடன் உருவாக்கி வெற்றி பெற்று இருக்கிறார்கள். "இதனை இவன் முடிக்கும் என்றாய்ந்து" அததை அவரவர் கையில் ஒப்படைத்து முழு வெற்றி பெற்றிருக்கிறது ஜெமினி புரொடக்ஷன்ஸ் நிறுவனம்.
மொத்தத்தில் "முனி"யின் "தொனி" "தனி"யாகவே தெரிகிறது.