சபரி - விமர்சனம்

விஜயகாந்த், ஜோதிர்மயி, மாளவிகா, பிரதாப் ராவத், பிதாமகன் மகாதேவன், டெல்லி கணேஷ், ஆர்யன், கருத்தம்மா ராஜஸ்ரீ, ரீனா ஆகியோர் நடிப்பில் மணிஷர்மா இசையில் ஒய்.என்.முரளியின் ஒளிப்பதிவில் சுரேஷ் இயக்கியுள்ள படம். தயாரிப்பு ஸ்ரீ சரவணா கிரியேஷன்ஸசேலம்.ஏ.சந்திரசேகரன்.

அரசு மருத்துவமனையில் இதய அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் சபரிவாசன் தான் விஜயகாந்த். தானுண்டு தன் கடமை உண்டு என்றிருக்கிற அவர். அநியாயத்துக்கு பொறுப்புணர்ச்சியுடனும் நேர்மையுடனும் இருப்பவர். ஒரு நாள் போலீசின் தேடுதல் வேட்டையில் பிடிபட்டு குண்டடி பட்டு தப்பித்து வரும் ரவுடிக்கு அவசர சிகிச்சை செய்கிறார். அவனைப் போலீசிலும் ஒப்படைத்து விடுகிறார். அவனது கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த ரவுடியின் மாமா தான் தாதா பிரதாப் ராவத். தன் வலது கை போல இருந்த "மச்சான்" தூக்குக்குத் துடிக்கிறார். ஜெயிலில் இருந்து பெயிலில் வந்து விஜயகாந்தைப் பல வகையிலும் தொல்லை கொடுத்து பழி தீர்க்க முயல்கிறார். விஜயகாந்த் குடும்பத்தினர் மீதும் கொலை வெறித் தாக்குதல் நடத்துகிறார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த விஜயகாந்த் பொங்கி எழுந்து எதிரியைப் போட்டுத் தள்ளுவதுதான் "சபரி"யின் கதை. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.

பொறுப்பான டாக்டராக அடக்கமாக வரும் விஜயகாந்த் பாதிப்படம் வரை அடக்கியே வாசிக்கிறார். முழுக்க முழுக்க டாக்டர், ஆஸ்பத்திரி பின்னணியிலேயே படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ். இதுவே படத்திற்கு தனியொரு நிறமாக-தரமாக இருக்கிறது. ஆனால் அதே போல புதிய காட்சிகளை சேர்க்க புத்திசாலித்தனமாக உழைத்து இருந்தால் படம் எங்கேயோ போயிருக்கும்.

ஆரம்பத்தில் பொறுமையாக இருந்து இறுதியில் பொங்கி எழும் ஹீரோ, இருட்டடிப்பாக ஹீரோ குடும்பம். அசாத்திய பலம் கொண்ட வில்லன் கோஷ்டி, தொட்டுக் கொள்ள ஊறுகாயாய் ஒரு நாயகி, கவர்ச்சித் தாளிப்புக்கு கறிவேப்பிலையாய் இன்னொரு நாயகி, ரத்தம், சதைக் கூட்டணி என்று பார்த்துச் சலித்த பல படங்களின் "உபரி"களின் தொகுப்பாக "சபரி" தோன்றுவதை தவிர்க்க முடியவில்லையே ஏன்?

விஜயகாந்த் பொறுப்பான டாக்டர் என்று தெரியாமல் கலாட்டா செய்யும் ஜோதிர்மயி, அதையே தொடர்வது எரிச்சலுட்டுகிறது. அந்த "எட்டு" போகும் காட்சி சிரிப்பு மூட்ட முயல்கிறது. மாளவிகாவை இதைவிட இருட்டடிப்பு செய்ய முடியாது. ரெண்டு பாட்டு நாலு சீன்.. அவ்வளவு தான் ஆள் அம்பேல். பயமுறுத்த வேண்டும் என்பதற்காக வில்லன் கோஷ்டி செய்யும் அநியாயங்களை இவ்வளவு விஸ்தாரமாகக் காட்ட வேண்டுமா? டூ மச்!

பசுவாக இருக்கும் விஜயகாந்த் இறுதியில் பாயும் புலியாகச் சீறுறார். கோபப்படும் விஜயகாந்த் பக்கம் பக்கமாக வசனங்களை அள்ளி வீசாமல் அளவாகப் பேசியே அழகாக நடிப்பை வெளிப்படுத்தியிருப்பது நல்ல ஆறுதல். நோயாளி வேஷம் போட்டுக் கொண்டு ஆஸ்பத்திரியை ஆக்கிரமித்துள்ளவர்களை வெளியேற்றுவது ரத்தத்தை வெளியே எடுத்து விட்டேன் என்று ரவுடியை உண்மையை கக்க வைப்பது, தன்னைக் கொல்ல வரும் அடியாளின் கைகளை ஊசி போட்டு முடக்குவது போன்றவை விஜயகாந்த் நடித்துள்ள சுவையான காட்சிகள். இந்தக் காட்சிகளில் பளிச்சிட்ட இயக்குனர் நாட்டில் போலீஸ், மீடியா என்று எதுவுமே இல்லாத மாதிரி வில்லன்களை அநியாய ஆட்டம் போட வைக்கும் காட்சிகளில் சறுக்கி இருக்கிறார்.

சபரிவாசன், வஜ்ரவேல் இருவரும் மோதிக் கொள்ளும் இறுதிக்கட்ட க்ளைமாக்ஸை இந்த இழுப்பு இழுத்திருக்கக் கூடாது. சுறுசுறுப்பான படத்துக்கு இவை வேகத்தடைகள்.

படத்தில் அடக்கமாக இருந்து கொண்டே தன் இருப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர். பொதுவாக இப்படிப்பட்ட ஆக்ஷன் படங்களில் ஹீரோக்கள் அநியாயத்துக்கு ஆவேச வசனம் பேசி நம்மைக் கொல்வார்கள். "சபரி"யில் அந்த விபத்து நடந்திடாமல் காப்பாற்றியுள்ளார் பிரபாகர். எளிமையான அளவான வசனங்கள். குறிப்பாக "உயிர்" பற்றிய வசனம் உயர்வானது.

ஒய்.என்.முரளியின் ஒளிப்பதிவு உழைப்பின் பதிவு. மணிஷர்மா இசை சுமார் ரகம். பாடல்கள் சராசரி ரகம். பின்னணி இசையில் கவனம் தேவை. குறிப்பாக உச்சக் கட்ட காட்சியில் காது ஜவ்வு கிழிகிறது.

இது முழுக்க முழுக்க விஜயகாந்தை முன்னிலைப்படுத்தியுள்ள படம். அந்த வகையில் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் சற்றும் தொய்வில்லாத விறுவிறுப்பான படத்தைக் கொடுத்த வகையில் இயக்குநர் சுரேஷீக்கு இது வெற்றிப்படம் தான்.

வெப்துனியாவைப் படிக்கவும்