பாலாவின் நான்காவது படம். பாலா படத்துக்கேயுரிய நுணுக்கம், ஆளுமை அனைத்தும் கூடி வந்திருக்கும் படம்.
காசி சாமியார்களின் வாழ்க்கையும், பிச்சையெடுப்பவர்களின் அவலத்தையும் பிரதிபலிக்கிறது நான் கடவுள். ருத்ரன் என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் ஆர்யா. கண் தெரியாத பிச்சைக்காரர் வேடம் பூஜாவுக்கு. இவர்களைத் தவிர ஏராளமான அங்ககீனர்கள், மூளை வளர்ச்சி குறைந்தவர்கள் நடித்துள்ளனர்.
webdunia photo
WD
அகோரி என்ற நரமாமிசம் சாப்பிடும் சாமியாராக ஆர்யாவுக்கு வித்தியாசமான வேடம். இதற்காக மூன்று வருடங்கள் தாடி, மீசை வளர்த்து அந்த கேரக்டராகவே மாறியிருக்கிறார். காசி மற்றும் தேனிப் பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். மலைக்கோயில் ஒன்றை தத்ரூபமாக அமைத்துள்ளார், கலை இயக்குனர் பி. கிருஷ்ணமூர்த்தி.
படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை பல நாட்கள் எடுத்திருக்கிறார்கள். இரண்டு மாதங்கள் என்கிறார் படத்தின் ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ. வில்சன். சண்டைப் பயிற்சி சூப்பர் சுப்பராயன். கவிஞர் விக்ரமாதித்யன் முதல் முறையாக இந்தப் படத்தில் நடித்துள்ளார்.
படத்தின் முக்கியமான அம்சம் இசை. இந்தப் படத்துக்கு இசையமைக்க பிரத்யேக மனநிலை தேவைப்பட்டதாக தெரிவித்துள்ளார் இளையராஜா. பாடல்கள் அனைத்தும் வெளியான அன்றே ஹிட்டாகியிருப்பது படத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
சுரேஷ் அர்ஸ் எடிட்டிங், வாசன்ஸ் விஷுவல் வென்சர்ஸ் சார்பில் படத்தை கே.எஸ். சீனிவாசன் தயாரித்துள்ளார். இந்திய திரையுலகில் ஒரு மைல் கல்லாக நான் கடவுள் இருக்கும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.