மூன்றே படங்கள். மூலை முடுக்கெல்லாம் அவர் பெயர் சொன்னால் அப்படியொரு மரியாதை. இரண்டு வருடமாக எடுத்துக் கொண்டிருந்தாலும் நான் கடவுள் படத்துக்கு மவுசு ஏறுகிறதே தவிர, பழமை தூசு படியவேயில்லை.
ருத்ரனாக நீண்ட தலைமுடி தாடியில் ஆர்யா. கறுப்பு கலவையாக பூஜா அம்சவல்லி எனும் அழுத்தமான கேரக்டரில். இசைக்கு இளையராஜா. இமை மூடி ரசித்தால் இமையோரம் நீர் கசியும் இசைத் தாலாட்டு. ஒவ்வொரு அடிக்கும், இதயம் அதிர்ச்சியில் உறையும் ஸ்டன்ட் சிவாவின் சண்டைப் பயிற்சி. காசியையும், தேனியையும் அதன் யதார்த்தம் குலையாமல் காட்டும் ஆர்தர் வில்சனின் கேமரா.
பிரமிட் சாய்மீராவின் தயாரிப்பில் உருவாகும் நான் கடவுள் காசியில் தொடங்கி தேனியில் முடிய இருக்கிறது.
படம் குறித்து மேலும் சில தகவல்கள்.
* வசனம் எழுதியிருப்பவர் தமிழின் முக்கிய எழுத்தாளரான ஜெயமோகன். நான் கடவுளில் பிச்சையெடுத்து வாழ்பவர்களின் நிலைமை மனிதாபிமானத்துடன் அணுகப்பட்டிருக்கிறது. இதே பின்னணியில் ஏழாம் உலகம் என்ற நாவலை எழுதியுள்ளார் ஜெயமோகன்.
* காசி நிர்வாணச் சாமியார்களும், அகோரி எனப்படும் நரமாமிசம் தின்னும் சாமியார்களும் படத்தில் இடம் பெறுகிறார்கள்.
* விசித்திரமான உருவம் கொண்ட ஒரு டஜன் ஆட்களுடன், அரவாணி ஒருவரும் நடித்துள்ளார்.
* ஆர்யா, பூஜா தவிர அனைவரும் புதுமுகங்கள்.