மரணம் எந்தக் காதலையும் பிரிப்பதில்லை என்ற ஒருவரிக்கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம்.
அட்லாண்டிக் சினிமாஸ் என்ற புதிய பட நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் வித்தியாசமான படைப்பாக உருவாக்கும் படம் 'காதலில் விழுந்தேன்'.
பாய்ஸ் படத்தில் அறிமுகமான நகுலன் - தெலுங்கு நட்சத்திரமான சுனேனா நடிக்கும் இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் புதுமுக இயக்குனரான பி.வி.பிரசாத்.
இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் நகுலன் நடிகை தேவயானியின் தம்பி. நகுலனுக்கு ஆக்ஷன், டான்ஸ், டயலாக் டெலிவரி, மேனரிஸம், பாடி லாங்வேஜ் என எல்லா விஷயங்களிலும் பயிற்சிக் கொடுத்து, அவரை பட்டை தீட்டியிருக்கிறார் இயக்குனர்.
சென்னையில் உள்ள அண்ணாசாலை சுரங்கப்பாதையில் சண்டைக்காட்சி எடுக்கப்பட்டபோது, டூப் போடாமல் தானே ரிஸ்க்கான சண்டைக்காட்சியில் நடிக்க முயன்றபோது விபத்தில் சிக்கிய நகுலன் சில நாட்களிலேயே படப்பிடிப்பில் கலந்துகொண்டது அவரது ஆர்வத்துக்கும் இந்தப் படத்தின் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் உதாரணம்...
`காதலில் விழுந்தேன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் சுனேனா, ஆந்திர தேசத்திலிருந்து வந்திருக்கிறார். இவர் தமிழுக்கு புதுமுகம்!
webdunia photo
WD
நகுலன்-சுனேனா இடையில் நல்ல கெமிஸ்ட்ரி வொர்க்கவுட்டாகி படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது.
நகுலன், சுனேனா தவிர லிவிங்ஸ்டன், ஹரிராஜ், சம்பத், பசி சத்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இவர்களில் ஹரிராஜ் இப்படத்தில் வித்தியாசமான வில்லன் வேடத்தில் கலக்கியிருக்கிறார்.
மரணம் எந்தக் காதலையும் பிரிப்பதில்லை என்பதுதான் இப்படத்தின் ஒருவரிக்கதை. அதன் அர்த்தம்? படத்தில் பதில் இருக்கிறது என்கிறார் இயக்குனர்.
அதள பாதாளத்தை நோக்கி செல்லும் வின்ச்சில் நகுலனுக்கும், சம்பத்துக்கும் இடையில் நடக்கும் சண்டைக்காட்சியை இடுப்பில் கயிற்றைக் கட்டிக்கொண்டு படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன். ஸ்டண்ட் மாஸ்டர் ஆக்ஷன் பிரகாஷ் அமைத்த இந்த சண்டைக்காட்சி ஆறு நாட்கள் அங்கே படமாக்கப்பட்டிருக்கிறது. இந்த சண்டைக்காட்சி ஆங்கிலப்படங்களை மிஞ்சும் அளவுக்கு அமைந்திருக்கிறது.
குன்னூர் - ஊட்டி செல்லும் ரயிலில் `உனக்கு என நான் எனக்கு என நீ...' என்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. ஸ்ரீதர் நடனம் அமைத்த இந்தப் பாடல் காட்சி விசேஷ கேமராக்களைக் கொண்டு பிரமிப்பூட்டும் வகையில் படமாக்கப்பட்டிருக்கிறது.
ஆந்திராவின் அடர்ந்த வனப்பகுதியான தலக்கோணத்தில் `கடவுள் படைத்த கடைசி அழகியே...' என்ற பாடல் காட்சியும், க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியும் படமாக்கப்பட்டது.
`காதலில் விழுந்தேன்' காதல் கலந்த ஒரு ஆக்ஷன் படம். அதே நேரம் யதார்த்தமான படமாகவும் இருக்கும் வகையில் பல காட்சிகளை மக்கள் கூட்டத்தின் இடையில் படமாக்கப்பட்டிருக்கிறது.
'அட்டட்ரா நாக்க முக்க...' என்ற பாடலின் பி.ஜி.எம்.மில் கிடாரைக் கொண்டு ஃபாஸ்ட்பீட்டில் மிரட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டணி.
தாமரையின் பாடல்களோடு, இயக்குனர் பி.வி.பிரசாத்தும் `கடவுள் படைத்த கடைசி அழகியே...', `தோழியா காதலியா...', `அட்டட்ரா நாக்க முக்க...', `என்ன சொன்னேன்...' ஆகிய பாடல்களை எழுதியிருக்கிறார்.
`காதலில் விழுந்தேன்' விரைவில் வெள்ளித்திரையில்...
தொழில்நுட்பக் கலைஞர்கள்:
ஒளிப்பதிவு - விஜய்மில்டன் இசை - விஜய் ஆண்டணி படத்தொகுப்பு - வி.டி.விஜயன் கலை - சகு சண்டைப்பயிற்சி - ஆக்ஷன் பிரகாஷ், சுப்ரீம் சுந்தர் நடனம் - ஸ்ரீதர், யாசீன் பாடல்கள் - தாமரை, பி.வி.பிரசாத், நெப்போலியன், ப்ரியன் இணை இயக்கம் - கே.ஆர. ரமணி ஷங்கர் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - பி.வி. பிரசாத் தயாரிப்பு - எஸ். உமாபதி