கல்லூரி வாழ்க்கையை முடித்துவிட்டு எங்கெங்கோ கலைந்து போனவர்களின் மன உணர்வுகளையும், இந்நாளில் படித்துக் கொண்டிருக்கும் மாணவ-மாணவியர்களின் மனநிலையையும் ஒன்று சேர பிரதிபலிக்கும் விதமாக இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
இயக்குனர் ஷங்கரின் 'S' பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் `கல்லூரி'.
'காதல்' படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பாலாஜி சக்திவேல் மீண்டும் மாறுபட்ட ஒரு படைப்பாக `கல்லூரி' என்ற படத்தை முற்றிலும் புதுமுகங்களை வைத்து இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தைப் பொறுத்தவரை கதாநாயகி தமன்னாவைத் தவிர மற்ற அனைவரும் திரைக்குப் புதியவர்கள். அறிமுக நாயகன் அகில் மற்றும் அவரது நண்பர்களாக அறிமுகமாகும் பாலமுருகன், ஹேமா, ராஜேஸ்வரி, சாய்லதா, மாயாரெட்டி, அருண்குமார், அலெக்ஸ் மற்றும் பிரகாஷ் என்று அனைவரும் புது வரவுகள்.
'கல்லூரி' படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சிவகங்கையிலும் அதை சுற்றி உள்ள பகுதிகளிலும் நடந்து முடிந்தது.
இப்படத்தின் ஒளிப்பதிவாளர் செழியன் தமிழ் சினிமாவிற்கு ஒரு புது வரவு. ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமின் உதவியாளரான செழியன் இப்படத்தில் ஒளிப்பதிவிற்கு புதியதொரு பரிமாணத்தைக் கொடுத்திருக்கிறார்.
இந்தப் படத்தின் மற்றுமொரு அறிமுகம் கலை இயக்குனர் 'மயில்' கிருஷ்ணன் படப்பிடிப்புக்கென்று தனியாக செட் போன்று எதையும் அமைக்காமல் காட்சிகளுக்கேற்ப அந்தந்த பகுதியில் சிறு சிறு மாற்றங்களை ஏற்படுத்தி மிக எளிமையாக வடிவமைத்து காட்சிகளுக்கு பலம் சேர்த்துள்ளார்.
படத்தின் இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் பாடல்களில் எந்தவித ஆர்ப்பாட்ட இசையுமின்றி கதைக்கும் காட்சிகளுக்கும் ஏற்ற வண்ணம் மிகச் சிறப்பாக இசையமைத்துள்ளார்.
கவிஞர் நா.முத்துக்குமார் நட்பையும் காதலையும் தனது பாடல் வரிகள் மூலம் மிக எளிமையாகவும் அதே சமயத்தில் உள்ளத்தில் நுழைந்து உணர்வுகளை வருடும் வகையில் வெகு இயல்பாக அமைத்துள்ளார்.
கல்லூரியில் தற்சமயம் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், படித்து முடித்தவர்களுக்கும், கல்லூரியை எட்ட முடியாதவர்களுக்கும், ஒரு உண்மையான கல்லூரி வாழ்க்கையினை படச்சுருள்களுக்குள் பதிவு செய்திருக்கின்றது `கல்லூரி' படக்குழு.
webdunia photo
WD
கல்லூரி முதலாமாண்டில் இருந்து வளர்ந்து இறுதியாண்டை எட்டிக் கொண்டிருக்கிறது. விரைவில் வெள்ளித்திரையில் திறக்கப்பட உள்ளது.
தொழில்நுட்பக் கலைஞர்கள்:
ஒளிப்பதிவு - செழியன் கலை - மயில் கிருஷ்ணன் பாடல்கள் - நா.முத்துக்குமார் இசை - ஜோஷ்வா ஸ்ரீதர் நடனம் - கந்தாஸ் சண்டைப்பயிற்சி - பிரபு படத்தொகுப்பு - ஜி. சசிகுமார் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - பாலாஜி சக்திவேல் தயாரிப்பு - இயக்குனர் ஷங்கர்