சில்வர் ஜூப்ளி பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் வி.ரவிச்சந்திரன், ஆர்.எஸ். இணைந்து மிகப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் புதிய படம் - `காத்தவராயன்'. கொக்கி, கருப்பசாமி குத்தகைதாரர், தீ நகர் படங்களைத் தொடர்ந்து கரண் கதாநாயகனாக நடிக்கும் படம் இது.
`காத்தவராயன்' படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் புதுமுக இயக்குனர் சலங்கை துரை. இவர் கே. பாக்யராஜ், சிராஜ், சிவகுமார் போன்ற இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர். தவிர அர்ஜுன் நடித்த `ஆயுதபூஜை' மற்றும் ஷாருக்கான் நடித்த `சாம்ராட் அசோகா' தமிழ்ப் பதிப்புக்கு வசனம் எழுதியவர். விஷ்ணு, ஜெனிலியா நடித்து, தற்போது தெலுங்கில் வெள்ளிவிழாக் கண்ட 'டி' என்ற படத்தின் கதாசிரியரும் இவரே.
`காத்தவராயன்' படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் விதிஷா. இவர் தெலுங்கில் ஐந்து படங்களில் நடித்தவர். அவற்றில் மூன்று படங்கள் சூப்பர் ஹிட்டானதைத் தொடர்ந்து அங்கு முதல்வரிசை நாயகியாய் வலம் வரும் விதிஷா, தற்போது தெலுங்கு, கன்னடத்தில் பிஸியான நாயகி. `காத்தவராயன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
கரண், விதிஷா உடன் வடிவேலு, இளவரசு, பெஞ்சமின், காதல் தண்டபாணி, அம்ஜத்கான் ஆகியோர் நடிக்கிறார்கள். இன்னொரு கதாநாயகி மற்றும் நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.
`காத்தவராயன்' படத்தின் படப்பிடிப்பு ஒகேனக்கல், மேட்டூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் சென்னையிலும் நடைபெறவிருக்கிறது.
கரண் இதுவரை கதாநாயகனாக நடித்த படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தையும், காட்சிகளையும் கொண்ட படமாக உருவாகிறது `காத்தவராயன்'.
மலையூர் மம்பட்டியான் போல் மலைக்கிராமங்களின் பின்னணியை கதைக்களமாகக் கொண்டு உருவாக்கப்படும் இப்படத்தின் கதையைக் கேட்ட கரண், "ஆக்ஷன் ஹீரோவுக்கான அத்தனை விஷயங்களும் இந்தக் கதையில் இருக்கிறது. நிச்சயமாக இந்தப் படம் எனக்கு கமர்ஷியல் பிரேக் தரும்" என்ற நம்பிக்கையோடு கதையைக் கேட்ட அந்த நிமிடமே நடிக்க ஒப்புக் கொண்டார்.
கரண் சொன்னதைப் போல், `காத்தவராயன்' படத்தில் பரபரப்பான ஆக்ஷன் மட்டுமல்ல, படத்தின் கதாநாயகன் பாத்திரமும் பேசப்படும் வகையில் இருக்கும். இதுவரை யாரும் கையாளாத வகையில் கதாநாயகன் பாத்திரம் இப்படத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. படத்துக்குப் படம் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் கரணுக்கு `காத்தவராயன்' படமும் அவரது திரைப்பயணத்துக்கு மேலும் பலம் சேர்க்கும்.
தப்பான தொழில் செய்கிற அனைவருக்குமே, தாம் செய்யும் தொழிலை நியாயப்படுத்தும் காரணங்கள் இருக்கும். அப்படிப்பட்ட ஒருவன்தான் காத்தவராயன்! அவனது வாழ்க்கையைச் சொல்லும் கதையே இப்படம்!
ஒளிப்பதிவு: கார்த்திக்ராஜா, இசை: ஸ்ரீகாந்த்தேவா, பாடல்கள்: பா. விஜய், தாமரை, படத்தொகுப்பு: பீட்டர் பாயியா, கலை: சகு, சண்டைப்பயிற்சி: தளபதி தினேஷ், நடனம்: சிவசங்கர், தயாரிப்பு மேற்பார்வை: ஆண்டனி சேவியர், தயாரிப்பு நிர்வாகம்: கே. சக்திவேல்.
தயாரிப்பு: வி. ராமச்சந்திரன், கதை, திரக்கதை, வசனம், இயக்கம்: சலங்கை துரை.