நாளைய பொழுதும் உன்னோடு

Webdunia

புதன், 22 ஆகஸ்ட் 2007 (17:28 IST)
நட்சத்திரங்களை நம்பி படமெடுப்போர் ஒரு ரகம். நல்ல கதைகளை நம்பி படமெடுப்போர் இன்னொரு ரகம். இதில் இரண்டாவது வகையைச் சேர்ந்ததுதான் பி.ஆர்.கே. பிலிம்ஸ் நிறுவனம். சத்தான கதை சாரமுள்ள காட்சிகளை மட்டும் உள்ளடக்கமாக்கி உருவாக்கியுள்ள படம் "நாளைய பொழுதும் உன்னோடு."

பாண்டியராஜனின் மகன் பிருத்வி. கார்த்திகா, ரோகினி, வேலு பிரபாகரன், லிவிங்ஸ்டன், வேணு அரவிந்த், கீதா நடிப்பில் மூர்த்தி கண்ணன் இயக்கியுள்ள படம். தயாரிப்பு பி.ஆர். சுரேஷ்குமார். ஒளிப்பதிவு தினேஷ்ராஜ். இசை ஸ்ரீகாந்த்தேவா. எடிட்டிங் ஆர். செல்வராஜ். பாடல்கள் கபிலன், யுகபாரதி. நடனம் ஸ்ரீதர், ராபர்ட், ஸ்டண்ட் கில்லி சேகர், கலை மயில் கிருஷ்ணன்.

படம் பற்றி தயாரிப்பாளர் கூறுகையில், "எனக்கும் சொந்த ஊர் மயிலாடுதுறை. அங்கு பல தொழில்கள் நடத்தி வருகிறேன். நூறு பேருக்கு வேலை கொடுத்து வருகிறேன். சினிமாத் தொழிலில் இன்னும் பல பேருக்கு வேலை கொடுக்க முடியும் என்று நம்பினேன். இந்தப் படத்தின் மூலம் மட்டும் ஐநூறு பேருக்கு வேலை கொடுக்க முடிந்தது. நான் சினிமாவுக்குப் புதியவன். வரும் முன் பலரும் என்னை பயமுறுத்தினார்கள். இது மோசமான உலகமென்று. எனக்கும் பயம்தான். இருந்தாலும் இந்த யூனிட் தங்கள் சொந்தப்படம் போல எடுத்துக் கொண்டு வேலை பார்த்தது மறக்க முடியாதது. மகிழ்ச்சியான விஷயமும் கூட" என்றார்.

இப்படத்தின் இயக்குனர் கே. மூர்த்தி கண்ணன், பி. வாசுவிடம் சினிமாப் பாடம் பயின்றவர். படம் பற்றி என்ன சொல்கிறார் இயக்குனர்?

"ஒவ்வொருவருக்கும் காதல் உணர்வு வருவதுண்டு. அதில் முதல் காதல் மறக்க முடியாது. அதுதான் உண்மையான காதல். இது 16 முதல் 24 வயது வரை வரும். அப்போது ஒருவனுக்கு வசதி, படிப்பு, வேலை, வருமானம் போன்ற எந்த தகுதியும் அமைந்து விடுவதில்லை. அதனால் அந்தக் காதல் ஜெயிக்க முடிவதில்லை. ஆனால் அந்த நிலையில் வருவதுதான் நிஜமான நேசம். அவள் இல்லையென்றால் அவன் இல்லை என்கிற அளவுக்கு அழுத்தமான ஆழமான காதல் அது. பிறகு வருவதெல்லாம் வருமானம் தகுதி பார்த்து வருவது. அப்படிப்பட்ட ஒரு நிஜமான காதலை இப்படத்தில் பதிவு செய்திருக்கிறோம்" என்கிறார் இயக்குனர். இப்படத்துக்காக மயிலாடுதுறை, கும்பகோணம், திருநள்ளாறு, திருநாகேஸ்வரம் போன்ற நவக்கிரக ஆலயங்கள் உள்ள இடங்களில் படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள். பெங்களூரின் அழகையும் அள்ளிக் கொண்டு வந்திருக்கிறார்களாம்.


ஒளிப்பதிவாளர் தினேஷ்ராஜ், "படத்தில் பல ஒளியமைப்புகளில் புதுமை செய்து படம் பிடித்துள்ளோம். இதில் கதைப்படி உணர்வுகளை வெளிக்காட்ட வேண்டியது அவசியம் என்பதால் அந்தந்த மூடுக்கு ஏற்றபடி லைட்டிங் செய்து கேமரா ஒர்க் செய்திருக்கிறேன்" என்றார்.

தெற்கத்தைச் சீமையில் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கோட்டைப் பிள்ளைமார் என்றொரு சமூகத்தினர் உள்ளனர். அவர்களில் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வரமாட்டார்கள். அதாவது கோட்டையை விட்டு. ஆண்கள் மட்டுமே விவசாயம் பார்க்க வருவார்கள். அவர்கள் வீட்டுப் பெண் இப்போது இருந்தால், அவளுக்கு காதல் வந்தால் எப்படி இருக்கும் என்னாகும் என்பதை கதைக்களமாக்கியிருக்கிறார்களாம்.

ஸ்ரீகாந்த் தேவா தான் இசை. "பொதுவா ஸ்ரீகாந்த் தேவான்னா கமரிஷியல்னு பேரு இருக்கு. 'நாளைய பொழுதும் உன்னோடு' படம் வந்தால் என்னால் மெலடியும் பண்ண முடியும்கிற பேரு வந்திடும். அந்த அளவுக்கு இதுல மெலடி இருக்கு. என்னை புதிய பாதைக்கு அழைச்சிட்டு வந்திருக்கிற படம்" என்கிறார் மகிழ்ச்சியுடன்.

ஐந்து பாடல்களில் ஒரு பாடலை பவதாரணி பாடியிருப்பதை பெருமையுடன் குறிப்பிடுக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா.

நாயகன் பிருத்வி பேசும்போது, கதை பலமே தனக்கு வெற்றி நம்பிக்கை வரவைத்து விட்டது என்றார்.

புதிய மனிதர்கள், திறமைக்கரங்கள், நம்பிக்கை முகங்கள் இவர்களது கூட்டுறவில் உருவாகியிருக்கிறது 'நாளைய பொழுதும் உன்னோடு'.

நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம். இவர்களின் கனவுகள் மெய்படட்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்