முழுக்க முழுக்க அமெரிக்காவிலேயே ஒரு தமிழ்ப்படம் வளர்ந்து வருகிறது. இதை டிரிம்ஸ் ஆன் பிரேம்ஸ் என்ற நிறுவனம் "மெய்ப்பொருள்" என்ற பெயரில் தயாரிக்கிறது!
அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகருக்கருகே பேஏரியா, சிலிக்கான்வேலி ஆகிய இடங்களில் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர்கள், என்ஜினியர்கள், தொழில்நுட்ப அதிபர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் உள்ளடக்கிய குழு ஒன்று தமிழ்ப்படம் தயாரிக்க திட்டமிட்டு செயலில் இறங்கியது. இதற்காக அங்கேயே வீடு, படப்பிடிப்பு இடங்களை தேர்வு செய்தனர். அங்கு நடிப்பதற்கு ஆர்வம் உள்ளவர்களை தேர்வு செய்து அதிலும் சிறப்பாக நடிப்பவர்களை ஒப்பந்தம் செய்தனர்.
பின்னர் கதையை தேர்வு செய்ய முடிவெடுத்தனர். திடுக்கிடும் திருப்பங்களோடு மிரட்டலாய் இருக்கும் வண்ணம் கதை சொன்ன நட்டிகுமாரின் கதை அனைவருக்கும் பிடித்தது. அவரையே வசனமும் எழுதச் சொன்னார்கள் நண்பர்கள். அமெரிக்க திரைப்படக் கல்லூரியில் பயின்றவர் தான் நட்டிகுமார் எனத் தெரிந்ததும் எல்லோருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி.
கிரிஷ்பாலா, அனுஷா, நாராயணன், சுரேன், ராணி ஆகியோர் நடிப்பதற்கு தேர்வானார்கள். இவர்கள் அமெரிக்காவில் டாக்டர்களாக, என்ஜினியர்களாக பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிக் கொண்டிருக்கும் கிரிஷ் எல்ட்ரிஜ் என்பவரை ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்தனர். நம்ம ஊர் பரத்வாஜ் இசையமைக்க சம்மதித்தார்.
படப்பிடிப்பு துவங்கி விறுவிறுவென வளர்ந்தது. முக்கால் பகுதி வளர்ந்துவிட்ட இந்தப் படத்திற்கு இனி பாடல்கள் மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது.
தமிழில் ஒரு ஆங்கிலப் படம் என ரசிகர்கள் சொல்ல வேண்டும் என்று கடுமையாக உழைத்து வருகிறார்கள் இந்த படக்குழுவினர்.
கதை, வசனத்தை ஜெ. நட்டிகுமார் தீட்ட, பரத்வாஜ் இசை மீட்ட கிரிஷ் எல்ட்ரிஜ் ஒளியூட்ட மிகுந்த பொருட் செலவில் தயாரித்து டைரக்டு செய்கிறனர். ஜெ. நட்டிகுமார் - கிரிஷ்பாலா இரட்யைர். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் கிரிஷ் பாலாதான் மெய்ப்பொருள் படத்தின் கதாநாயகன்.