நல்ல நிலத்தில் விளைந்த எந்த பயிரும் பாழாகாது. அந்த வகையில் இயக்குனர் பாசில் என்னும் நல்ல நிலத்தில் உருவாகி இயக்குனராக களமிறங்கியுள்ளார் கே.பன்னீர் செல்வம். 'பூவே பூச்சூடவா', 'அரங்கேற்ற வேளை' உட்பட பல படங்களில் பாசிலிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இவர், "தொல்லைபேசி" படம் மூலம் இயக்குனராகியுள்ளார்.
`ப்ளூ வாட்டர்ஸ் மூவி மேக்கர்ஸ்' பட நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக விக்ரமாதித்யாவும், அவரது மனைவியாக 'வெயில' பிரியங்காவும் நடிக்கின்றனர்.
ஆர்த்தி, திவ்யா என இரண்டு மும்பை இறக்குமதிகளும் அறிமுகமாகின்றனர். நாயகனின் தந்தையாக வித்தியாசமான கெட்டப்பில் நிழல்கள் ரவி நடிக்கிறார். விக்ரமாதித்யாவின் நண்பராக வரும் கருணாஸின் காமெடி காக்டெயிலும் உண்டாம்.
படத்தின் டைட்டிலில் முக்கிய வேடம் என்ற இடத்தில் "செல்போன்" என்று போடப் போகிறாராம் இயக்குனர்.
அத்தியாவசிய தேவையாக இருந்த தொலைபேசி இன்று அநாவசிய தொல்லைகளுக்கும் மூலமாக ஆகி விட்டது. இப்படத்தில் நாயகனும், அவனது குடும்பமும் தொலைபேசியால் பாதிப்புக்கு உள்ளாவதுதான் கதையின் கரு என்கிறார். காதல், கல்யாணம், காமெடி, சென்டிமெண்ட் உட்பட அனைத்து அம்சங்களும் படத்தில் உண்டாம்.
இயக்குனர் மணிவண்ணனின் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள டி.ஷங்கர் ஒளிப்பதிவில் குற்றாலம், ஊட்டி, மூணாறு, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
தொழில்நுட்ப கலைஞர்கள்:
எடிட்டிங் - சதீஷ் கலை - மணிவர்மா நடனம் - செல்வி இசை - சாந்தகுமார் தயாரிப்பு மேற்பார்வை - வெங்கட் தயாரிப்பு நிர்வாகம் - எம்.சிவா, பி. மகேஷ் தயாரிப்பு - ப்ளூ வாட்டர்ஸ் மூவி மேக்கர்ஸ் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் - பன்னீர் செல்வம்