போராடியே சினிமாவில் நுழைந்தேன்- நடிகை பியா

webdunia photoWD
பொய் சொல்ல போறோம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பியா. ஏகன் இவருக்கு இரண்டாவது படம். குறுகிய காலத்தில், துள்ளல் வேடமா.. கூப்பிடு பியாவை என்று சொல்லும் அளவுக்கு பெயர் சம்பாதித்து வைத்துள்ளது, பியாவின் சாதனை. அவரது பேட்டியிலிருந்து..

உங்களை பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா?

நான் பிறந்தது உத்திரபிரதேசத்தில் உள்ள தாவா. அப்பாவுக்கு இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை. அம்மாவும் இரண்டு அக்காக்களும் அரசு பள்‌ளியில் ஆசிரியர்கள்.

நீங்களும் குழந்தைகளுக்கு பாடம் நடத்தியிருக்கிறீர்களாமே?

எனக்கு அரசு வேலையில் எல்லாம் விருப்பம் இருந்ததே இல்லை. பிளஸ் 2 முடித்த பிறகு குவாலியரில் கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்தேன். அம்மா, அப்பாவுக்கு நான் நிறைய படிக்க வேண்டும் என்று ஆசை. எனக்கு‌த்தான் விருப்பமில்லை. டெல்லியில் ஐடி கம்பெனி ஒன்றில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு வேலை பார்த்தபோது பள்ளி மாணவர்களுக்கு டியூசன் எடுத்தேன், அவ்வளவுதான். மற்றபடி டீச்சர் வேலையிலெல்லாம் எனக்கு விருப்பம் இல்லை.

ஐடி கம்பெனியில் வேலை பார்த்த நீங்கள் எப்படி சினிமாவுக்கு வந்தீர்கள்?

ஐடி கம்பெனி வேலை கொஞ்ச நாளில் அலுத்துவிட்டது. அதனால் அதிலிருந்து விலகி வேறொரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அது பேஷன் ஷோ-க்களை ஒருங்கிணைக்கும் நிறுவனம். நான் அதில் வேலைக்கு சேர்ந்தது அம்மா, அப்பாவுக்குப் பிடிக்கவில்லை.

இன்னும் நீங்கள் சினிமாவுக்கு வந்தது எப்படி என்று கூறவில்லை..

webdunia photoWD
அதைத்தான் சொல்ல வருகிறேன். அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த போது மாடலிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அப்படியே விளம்பர படங்களிலும் நடித்தேன். என்னுடைய விளம்பரங்களை பார்த்துதான் விஜய் சார் பொய் சொல்ல போறோம் படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.

பேஷ­ன் ஷோ ஒருங்கிணைக்கும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்ததையே ஒத்துக் கொள்ளாத உங்கள் பெற்றோர், எப்படி சினிமாவில் நடிக்க அனுமதித்தார்கள்?

மாடலிங்கில் என்னுடைய கவனத்தை திருப்பியதற்கே ஒரு வருடம் அவர்கள் என்னிடம் கோபமாக இருந்தார்கள். நிறைய போராட்டத்திற்குப் பிறகே அவர்களை சம்மதிக்க வைக்க முடிந்தது.

நீங்கள் நிறைய கவிதைகள் எழுதுவீர்களாமே?

கவிதை எழுதுவது என்னுடைய ஹாபி. இந்தியில் நிறைய கவிதைகள் எழுதிருக்கிறேன். இந்தி பத்திரிகைகளில் அவை வெளிவந்திருக்கின்றன. கவிதைகளை தொகுத்து புத்தகமாக போடும் எண்ணமும் இருக்கிறது.