சிறந்த வில்லன்னு பேர் வாங்கணும் - கொடைக்கானல் பட வில்லன் காண்டீபன்!

புதன், 28 மே 2008 (12:53 IST)
webdunia photoWD
தமிழ் சினிமாவில் திறமை இருந்தால் சிகரத்தைத் தொடலாம் என்பது நூற்றுக்கு நூறு உண்மை. அப்படி பல இளைஞர்கள் இன்று சினிமாவில் காலடி எடுத்து வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாடு என்று மட்டும் இல்லாமல் பல்வேறு நாட்டிலிருந்தும் படை எடுகின்றனர். அந்த வகையில் கொடைக்கானல் படத்தில் அதிரடி வில்லனாக அறிமுகமா‌கிறார் காண்டீபன். மலேசியத் தமிழரான இவரை நமது வெப்.துனியாவுக்காக சந்தித்தோம்.

உங்களுடைய சொந்த ஊர் எது?

நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் மலேசியாவில்தான். என்னோட தாத்தா ஊர் அதாவது பூர்வீகம்னு பாத்திங்கன்னா தமிழ்நாடு திருச்சிதான். கிட்டத்தட்ட ஐம்பது வருஷத்துக்கு முன்னாடியே எங்கப்பா மலேசியாவுக்கு வந்துட்டார். அதனால நான் பிறந்தது, படிச்சது எல்லாமே மலேசியாதான்.

சினிமாவுக்கு வரவேண்டும் என்று சின்ன வயது முதல் ஆர்வம் இருந்ததா?

படிக்கிற வயசுல இல்லை. ஆனா பள்ளிக்கூடத்துல மாறுவேடப் போட்டி, டான்ஸ், நாடகம்னு மேடை ஏறியிருக்கேன். அப்படி ஆரம்பத்துல இருந்து மேடை ஏறின ஆர்வம்தான் கல்லூரி படிக்கிறப்போ நாமும் சினிமாவுல நடிக்கலாமேன்னு தோணுச்சி. அதுக்கப்புறம்தான் இந்த 'கொடைக்கானல்' படத்தோட வாய்ப்பு கெடைச்சது.

இந்த கொடைக்கானல் வாய்ப்பு உடனே கிடைத்ததா, பல தேடலுக்குப் பின் கிடைத்ததா?

இந்தப் படத்தோட வாய்ப்பே தேடாமத்தான் கெடைச்சது. 'கொடைக்கானல்' படத்தோட இயக்குனர் டி.கே. போஸ். என்னோட மாமா மலேசியா வாசுவுக்கு நெருங்கின நண்பர். ஒரு நாள் ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கும்போது ஒரு படம் ஆரம்பிக்கப் போறதாவும், அதுக்கு ஒரு வில்லன் தேவைப்படுவதாகவும் சொல்ல, உடனே என்னை சொல்லியிருக்கிறார். அப்படி கிடைச்சதுதான் இது. இதுக்குப் பின்னாடி இன்னும் தீவிரமா முயற்சி பண்ணி இருக்கேன்.

இனி நடிக்க அடிக்கடி இந்தியா வருவதால் உங்களின் மற்ற வேலைகள் பாதிக்கப்படாதா?

பாதிக்காத அளவுக்குத்தான் அங்கிருந்து வருவேன். படிச்சது இன்ஜினியரிங். அதனால எப்போ வேனாலும் அதைத் தொடர்ந்து செய்யலாம். ஆனா நடிப்பு அப்படியில்ல. அந்தந்த வயசுலதான் நடிச்சுப் பேர் வாங்க முடியும். அதுவுமில்லாம என்னோட அண்ணன்கள் எல்லாருமே சொந்தமா மலேசியாவுல பிஸினஸ் பண்ணிட்டு இருக்கிறதால என்னோட வருமானத்தை பெரிசா எடுத்துக்கிறதில்லை. அதனாலதான் சினிமாவுல அதிகம் முயற்சிக்கலாம்னு வந்திருக்கேன்.

அண்ணன்கள் சொந்த தொழில் செய்யும்போது உங்களையும் பிஸினஸ் செய்யச் சொல்லாமல் சினிமாவில் நடிக்க எப்படி அனுமதித்தார்கள்?

அதுக்கு காரணம் வீட்டில் நான்தான் கடைகுட்டி. கடைசிப் பையன்கிறதால எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து நீ என்ன ஆசைப்படறியோ செஞ்சுக்கோன்னு சொல்லிட்டாங்க. சொல்லப்போனா அவங்களோட முழு ஆதரவு எனக்கு இருக்கு. அப்பா கருப்பையா, அம்மா தவமணி அவங்க இருந்தா எந்த அளவுக்கு எனக்கு ஆதரவா இருப்பாங்களோ அந்த அளவுக்கு என்னோட அண்ணன்கள் இருக்காங்க.

முதன் முதலா கேமரா முன்னால் நிற்கும்போது எப்படி உணர்ந்தீர்கள்?

சினிமா கேமராவுக்கு முன்னாடி இப்பதான் நிக்கறேனே தவிர, டி.வி. கேமரா முன்னாடி நிறைய தடவை நின்னுட்டேன். மலேசிய கவர்மெண்ட் டி.வி.யில வந்த சீரியல்கள்ல கிட்டத்தட்ட 232 நாடகத்துல நடிச்சிட்டேன். அதுக்காக 2006 ஆம் வருஷத்துக்கான சிறந்த ஹீரோ விருது வாங்கியிருக்கேன். மலேசியக் கலைஞர்களோட பாராட்டும், வாழ்த்தும் பெரும் அளவுல கெடைச்சது. அந்த விழா என் வாழ்க்கைல மறக்க முடியாது.

அங்க சீரியல் நாடகத்துல நடிக்கிறது மட்டுமில்லாம 'குருப் சுப்ரீம்'கிற பேர்ல ரேஷ்-ங்கிற நண்பரும் நானும் சேர்ந்து நான்கு வீடியோ ஆல்பங்கள் தயாரிச்சு வெளியிட்டோம் நல்ல வரவேற்பு இருந்தது. அதுல பாடல்களும் எழுதி, பாடியும் இருக்கேன். 'சுப்ரீம் தங்கம்', சுப்ரீம் Chup', 'மை ஃப்ரண்ட்ஸ்', 'ரிபீட்'ன்னு தமிழ், மலாய், இந்தி, ஆங்கிலம்னு நாலு மொழியிலயும் வெளியிட்டோம். இப்போ ஐந்தாவதா 'செல்லம்' அப்படிங்கிற ஆல்பம் ரெடி பண்ணிட்டு இருக்கோம்.

'கொடைக்கானல்' படத்தின் அனுபவங்கள் பற்றி சொல்லுங்கள்?

webdunia photoWD
'கொடைக்கானல்' படம் காதல், ஆக்சன் ரெண்டும் கலந்த படம். ரொம்ப அருமையான கதை. இயக்குனர் டி.கே. போஸ். 'பொங்கி வரும் காவேரி', 'என்னை விட்டுப் போகாதே' போன்ற பல படங்களை இயக்கிய அனுபவசாலி. அவர்தான் எனக்கு தைரியம் கொடுத்து நடிக்க வெச்சார். முதல் நாள் கேமரா முன்னாடி நின்னதும் ஒரு சின்ன பயம் இருந்தது. போஸ் சார் இயக்குனர் மாதிரியில்லாம ஒரு சகோதரனா எனக்குப் பொறுமையா சொல்லிக் கொடுத்தார். அதுக்கப்புறம் அவரே பாராட்டும்படி நடிச்சேன்.

அதுமட்டும் இல்லாம எனக்கு பின்னணி வாய்ஸ் வேற ஒருத்தரை போடலாம்னு எல்லாரும் சொன்னப்பவும் டி.கே. போஸ் சாரும், ஸ்டண்ட் மாஸ்டர் ஹார்ஸ் பாபுவும்தான், இவரே பேசட்டும் வித்தியாசமா இருக்கும்னு சொன்னாங்க. அதுக்கப்புறம்தான் நானே பேசியிருக்கேன். க்ளைமாக்ஸ் இந்தப் படத்துல ரொம்ப வித்தியாசமாவும், புதுசாவும் இருக்கும்.

இந்தப் படத்தில் நீங்கள் நடித்து, உங்களுக்குப் பிடித்த விஷயம் என்னென்ன?

பொதுவா நான் நடிச்சதுல க்ளைமாக்ஸ் சண்டை. கொடைக்கானல்லதான் எடுத்தாங்க. கோவில் பட்டிங்கிற மலை உச்சி மேல சண்டை போடுற மாதிரி. ரொம்ப உயரமான இடம். எல்லோருமே எதாச்சும் ஆயிடுமேன்னு பயந்துட்டோம். ஸ்டண்ட் மாஸ்டர் 'ஹார்ஸ்' பாபு சார்தான் தைரியம் கொடுத்து நடிக்க வெச்சார். அதேமாதிரி க்ளைமாக்ஸ் காட்சியல பேப்பர்ல எழுதிவெச்சி டயலாக் மாதிரி இல்லாம உன் மனசுக்கு இந்தக் காட்சியில எப்படி பேசுனும்னு தோணுதோ அதே மாதிரி பேசு என்று இயக்குனர் சொன்னார். அதே மாதிரி என்னோட சில டயலாக்கை அந்த இடத்துல பேசினேன். எல்லோருமே பராட்டினாங்க. அப்புறம் மலாய் மொழியில 'சையான்... சையான்'ன்னு படம் முழுக்க பேசியிருக்கேன். சையான்னு சொன்னா தமிழ்ல செல்லம்னு அர்த்தம். இப்படி நான் நடிச்சதுல இந்த காட்சிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

கொடைக்கானலுக்குப் பிறகு வேறு என்னென்ன படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறீர்கள்?

இந்தக் கொடைக்கானல் படத்தோட கம்பெனியான சுவர்ணலட்சுமி மூவிஸ் அடுத்த படமும் டி.கே. போஸ் சார்தான் இயக்கப் போறார். அந்தப் படத்திலயும் நடிக்க இருக்கேன். அதேபோல 'தாவணி போட்ட தீபாவளி' படம் ஆரம்பிச்சி ஷூட்டிங் போகப் போறாங்க. அந்தப் படத்துலயும் நடிக்க இருக்கேன். அப்புறம் இன்னொரு படத்துலயும் நடிக்க கேட்டிருக்காங்க.

சினிமாவில் என்னவாக பெயர் எடுக்க விரும்புகிறீர்கள்?

ஒரு வில்லன் நடிகனாப் பேர் வாங்கணும். அதுதான் எனக்கு விருப்பம். தமிழ்ல ஏகப்பட்ட ஹீரோக்கள் இருக்காங்க. அதனால எனக்குன்னு ஒரு ஸ்டைல் உருவாக்கி மக்கள் மத்தியில ஒரு தனியிடத்தைப் பிடிக்கணும். அதுதான் என்னோட லட்சியம். இந்த மாசம் படம் ரிலீஸ் ஆகப் போவுது. படத்தைப் பாருங்க. உங்க ஆதரவை காட்டுங்க. என்னோட வளர்ச்சிக்கு நீங்க எல்லோரும் ஒத்துழைப்பு கொடுங்க. நன்றி.