அமீர்கான் தயாரிப்பில் நடிக்கிறேன் - ஜெனிலியா!

சனி, 10 மே 2008 (15:26 IST)
webdunia photoWD
பாய்ஸ், சச்சின் படங்களின் தோல்வியால் ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்டவர் நடிகை ஜெனிலியா. அந்த முத்திரையை உடைக்கும் விதமாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது ஜெனிலியா நடித்திருக்கும் சந்தோஷ் சுப்ரமணியம். படப்பெயரின் முதல் பாதியை முகத்தில் கொண்டிருக்கும் ஜெனிலியாவின் பதில்களில் நம்பிக்கை பளீரிடுகிறது.

சந்தோஷ் சுப்பிரமணிம் படத்தில் எதற்கும் கவலைப்படாத கலகல பெண்ணாக நடித்திருந்தீர்கள். உண்மையில் நீங்கள் எப்படிப்பட்ட பெண்?

எனக்கு ரொம்பப் பிடித்த கேரக்டர்களில் ஒன்று சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் வரும் ஹாசினி கதாபாத்திரம். நிஜத்தில் நான் ஹாசினி கேரக்டரில் பாதி என்று சொல்லலாம்.

இந்தப் படத்தின் வெற்றியின் மூலம் ராசியில்லாத நடிகை என்ற முத்திரையை உடைத்திருக்கிறீர்கள்...

என்னை ஏன் ராசியில்லாத நடிகை என்று சொல்கிறார்களோ தெரியவில்லை. நான் இதற்குமுன் நடித்தப் படங்கள் சரியாகப் போகாததற்கு பல காரணங்கள் உண்டு. இப்போது சந்தோஷ் சுப்ரமணியம் வெற்றிகரமாக ஓடுகிறது. இப்போது என்ன சொல்வார்கள்?

சந்தோஷ் சுப்ரமணியத்தின் ஒரிஜினல் தெலுங்கு பொம்மரிலுவிலும் நீங்கள்தான் நடித்திருந்தீர்கள். இரண்டு அனுபவங்களையும் ஒப்பிட முடியுமா?

என்னிடம் பேசுகிறவர்கள், பொம்மரிலு சித்தார்த்தா, சந்தோஷ் சுப்ரமணியம் ஜெயம் ரவியா யார் சிறந்தவர்கள் என்று கேட்கிறார்கள். இரண்டு பேருமே அவர்கள் ரோலை சிறப்பாக செய்தார்கள். இருவரையும் ஒப்பிடக்கூடாது.

நீங்கள் அதிக சம்பளம் வாங்குவதாகவும், இந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே...

என்னுடைய தகுதிக்கேற்ற சம்பளம்தான் வாங்குகிறேன். அதற்குமேல் கேட்டால் தயாரிப்பாளர்கள் என்னை படங்களில் ஒப்பந்தம் செய்வார்களா? இந்தியில் மூன்று படங்களில் நடித்தாலும் தெலுங்கு, கன்னடத்திலும் ஒவ்வொரு படம் நடிக்கிறேன்.

இந்திப் படவுலகில் போட்டி அதிகமிருக்குமே?

எனக்கு நான் மட்டுமே போட்டி என்று நினைப்பவள் நான். விரைவில் அமீர் கான் தயாரிப்பிலும் ஒரு படம் நடிக்க உள்ளேன்.

இந்தியில் கவர்ச்சி அதிகம். அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கவர்ச்சியாக நடிப்பதில் என்ன தவறு இருக்கிறது. அது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. ஆனால், எதற்கும் ஒரு எல்லை இருக்கிறது.

ஒரு படத்தை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?

கதை கேட்கும்போது, கதாநாயகிக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறதா என்றெல்லாம் பார்க்க மாட்டேன். அதேநேரம் கதாநாயகிக்கும் ஓரளவு முக்கியத்துவம் இருக்கிறதா என்று மட்டும் பார்ப்பேன்.

இறுதியாக ஒரு கேள்வி. உங்கள் திருமணம் காதல் திருமணமாக இருக்குமா அல்லது பெற்றோர்கள் ஏற்பாடு செய்யும் திருமணமாக இருக்குமா?

திருமணத்தைப் பற்றி நாள் இன்னும் யோசிக்கவே இல்லை. அதுபற்றி யோசிக்கும் போது காதல் திருமணமா இல்லையா என்பதை முடிவு செய்து கொள்ளலாம்!

வெப்துனியாவைப் படிக்கவும்