எல்லோரும் பார்க்கிற படங்களை எடுப்பேன் : இயக்குனர் விஜி!
சனி, 5 ஏப்ரல் 2008 (19:24 IST)
webdunia photo
WD
உதவி இயக்குனரின் கதையை திருடி சூப்பர் ஸ்டாராகும் நடிகர். அவர்முன் கைகட்டி நிற்கும் இயக்குனர், தயாரிப்பாளர். திரைக்குப் பின்னுள்ள இந்த நிஜங்களை வெள்ளித்திரையில் வெளிச்சமிட்டு காட்டியவர் இயக்குனர் விஜி. சின்ன விமர்சனத்துக்கே சிலிர்த்துக்கொண்டு தெருவில் இறங்கும் கோடம்பாக்கத்தில் விஜியின் வெள்ளித்திரை ஓர் ஆச்சரியம். தமிழ்.வெப்துனியா.காம் அவரை சந்தித்து உரையாடியதிலிருந்து...
அள்ளித்தந்த வானம் படத்திற்குப் பிறகு ஏன் இத்தனை வருட இடைவெளி?
அள்ளித்தந்த வானம் பரவலாக எல்லா சென்டர்களிலும் அறுபது நாள் ஓடிய படம். ஆனால் தயாரிப்பாளருக்கு நஷ்டம். ஒரு படத்தை எப்படி வியாபாரம் பண்ணணும்னு அவருக்கு தெரியலை. படத்தை இயக்குவதுடன் அதன் பிஸினஸ் பத்தியும் ஒரு இயக்குனர் தெரிஞ்சு வச்சிருக்கணும் என்று அள்ளித்தந்த வானம் அனுபவத்திலிருந்து தெரிஞ்சுகிட்டேன். அதுதான் கொஞ்ச நாள் படம் இயக்குவதிலிருநூது ஒதுங்கி இருந்தேன்.
படங்களுக்கு வசனம் எழுத ஆரம்பித்தது எப்படி?
நண்பர்களுக்காக எழுத ஆரம்பித்ததுதான் வசனம்.
இனிமேல் இயக்கம்தான், வசனம் எழுதமாட்டேன் என்று சொல்லியிருக்கீங்க...?
படம் இயக்க வாய்ப்பு வரும்போது ஏன் வசனம் மட்டும் எழுதணும்?
அப்படின்னா வசனம் எழுதுவதை இரண்டாம் பட்சமாக கருதுகிறீர்களா?
அப்படி இல்லை. அடுத்தவங்க கதைக்கு டயலாக் எழுதுறது சாதாரண விஷயமில்லை. ஆழமான சினிமா அறிவு இருந்தா மட்டும்தான் எழுத முடியும். ஆனா அறிவு இல்லாமலே படம் இயக்க முடியும்.
வெள்ளித்திரையில் நீங்கள் வசனம் மட்டும் எழுதுவதாக இருந்ததாகவும், பிறகுதான் அதனை இயக்கும் பொறுப்பு உங்களிடம் கொடுக்கப்பட்டதாகவும் பிரகாஷ்ராஜ் கூறியிருக்கிறாரே...?
வசனம் மட்டுமில்லை, திரைக்கதையும் நான்தான் எழுதினேன். அதை வைத்து யார் வேண்டுமானாலும் டைரக்ட் பண்ணலாம். நான் டைரக்ட் பண்ணலைனுதான் சொன்னேன். அது ரொம்ப ஆழமானதாக இருக்கு என்பதால், மற்றவர்களை வைத்து செய்தால் சரியாக வராது என்பதால் என்னையே இயக்குமாறு கூறினார்கள். உண்மையில் விருப்பமில்லாமல்தான் வெள்ளித்திரையை டைரக்ட் பண்ணினேன்.
வெள்ளித்திரையில் மிகை நடிப்பைப் பற்றிய வசனம் வரும். பிருத்விராஜ், மார்லன் பிராண்டோ போன்ற நடிகர்களின் பெயரைச் சொல்வார். பதிலுக்கு பிரகாஷ்ராஜ், வெளிநாட்டுக்காரன் அம்மா இறந்தாலும் வேடிக்கைதான் பார்ப்பான். ஆனால், இங்கு நெஞ்சில் அடித்து அழுவான் என மிகை நடிப்புக்கு ஆதரவாக பேசுவார். உண்மையில் நீங்கள் யார் தரப்பை ஆதரிக்கிறீர்கள்?
நாடக நடிப்புங்கிறது வேறு, சினிமா நடிப்புங்கிறது வேறு. இங்க வசனம்னா வீரபாண்டிய கட்டபொம்மன் அல்லது திருவிளையாடல். நடிப்புன்னா, ரத்தக்கண்ணீர் எம்.ஆர். ராதா. ஆனா, சினிமா நடிப்பு வேறுபட்டது. கல்லூரி மாணவன் கேரக்டர்னு சொன்னதும் பிரகாஷ்ராஜ், பதினைஞ்சு கிலோ எடையைக் குறைச்சிட்டு வர்றேன்னு சொல்வார். பதிலுக்கு பிருத்விராஜ், அப்படின்னா இன்னும் பதினைஞ்சு கிலோவை குறைச்சா குழந்தை நட்சத்திரமா நடிப்பியானு கேட்பார். இன்னைக்கு சினிமாவுல இதுதானே நடந்துகிட்டிருக்கு. பிரதிவிராஜ் தேடுவது ஒரு சினிமா நடிகனை. இங்கு நாடக நடிகர்கள் அதிகம், சினிமா நடிகர்கள் மிகக் குறைவு.
உதயனானு தாரம் படத்தில் வரும் மீனா கேரக்டருடன் ஒப்பிடும்போது, கோபிகாவின் கதாபாத்திரம் அத்தனை போல்ட் ஆக சித்தரிக்கப்டவில்லையே?
webdunia photo
WD
வெள்ளித் திரை கேரக்டரைசேஷன் முற்றிலும் மாறுபட்டது. ரோஷன் ஆண்ட்ரு மலையாளத்தில் செய்தது உதயனானு தாரம். நான் அதை அப்படியே தமிழ்ல எடுக்கலை. அதோட கண்டென்டை மட்டும்தான் எடுத்துக்கிட்டேன். காட்சிகள், கேமரா கோணம், வசனங்கள் எல்லாமே வேறு.
மீனா கேரக்டர் மலையாளத்திற்கு சரியாக இருக்கலாம். இந்தப் படத்தில் கதாநாயகியை ஒரு சராசரி நடுத்தரக் குடும்பத்துப் பெண். எனவே இது மீனாவின் பாத்திரத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது.
மலையாளப் படத்தில் ஒரு வசனம். நடிகை என்பவள் பொது சொத்து, அது எல்லாரும் பகிர்ந்து சாப்பிடவேண்டும், நீ தனியே கொண்டுசேன்று சாப்பிட்டு கழிச்சிட்டியே என்கிறான். இப்பொழுது கூட அவள் மீது எனக்கு மோகம் உள்ளது, நீ அவளை கூட்டிக்கொண்டு வா, நான் உன்னை டைரக்டர் ஆக்குகிறேன் என்கிறேன். உன் பெண்டாட்டியை கூட்டிக் கொண்டுவந்து கொடு என்கிறான், எல்லோரும் அனுபவிக்க வேண்டும் என்கிறான். அது ரொம்ப போல்டான டயலாக், அதனை இங்கு (தமிழில்) செய்ய முடியாது, நான் செய்ய மாட்டேன். எனக்கு அதில் உடன்பாடும் இல்லை.
மலையாளப் படத்தில் சீனிவாசன் நடிக்க முடியாதுன்னு சொல்லும்போது மோகன் லால் அவர் சட்டையைப் பிடிப்பார். இங்கே அதுமாதிரி எடுக்க முடியுமா? அறிமுக நடிகர்கள் முன்னாடியே சீட் நுனியில உட்கார்ந்து தான் இங்குள்ள டைரக்டர்கள் டயலாக் சொல்லிக் கொடுக்கிறாங்க. மலையாளப் படத்தில், தயாரிப்பாளர் மோகன்லாலுடன் பாரில் உட்கார்ந்து தண்ணி அடிப்பார். இங்க அது சாத்தியம் இல்லை. தமிழ் சினிமா யதார்த்தப்படிதான் நான் கேரக்டர்களை அமைச்சிருக்கேன்.
பிருத்விராஜ், கோபிகா கேரக்டர்களில் அன்யோன்யம் இல்லைனு ஒரு கருத்து இருக்கு...
கோபிகா துணி துவைக்கும் போது, பிருத்விராஜின் சட்டையோடு சேர்ந்து அவங்க பிராவும் வருது. ஒரு கணம் பார்த்துட்டு, இரண்டையும் சேர்த்துப் பிழியுறாங்க. இதைவிட ஒரு கணவன் மனைவிக்குள்ள நெருக்கத்தை எப்படி காட்டுறது? படுக்கையறை காட்சியை வைத்தா? அது எனக்கு எடுக்க வராது.
பிரகாஷ் ராஜின் (கதாநாயகன்) பாத்திர அமைப்பு பற்றி?
பிரகாஷ் ராஜை முதலில் இருந்தே பிருத்வி ராஜ் (துணை இயக்குனர்) மட்டம் தட்டி வந்தார். இதனால் பிரகாஷ் ராஜிற்கு எதிரியாகவே பிருத்வி ராஜ் தெரிகிறார். அதனால்தான் பிருத்வி ராஜ் தனது வாழ்க்கையில் முன்னேறும்போது பிரகாஷ் ராஜ் அதனை தடுக்கிறார்.
ஒருவரை அவரது தொழிலில் மட்டம் தட்டிப்பேசிவிட்டால் அவரால் அதனை ஏற்றுக் கொள்ளவே முடியாது. திட்டியவரை ஜென்மத்திற்கும் பகையாகவே எண்ணுவார். இந்த இயல்பான பாத்திரம் தான் பிரகாஷ் ராஜிற்கு அமைந்தது.
பிரகாஷ்ராஜிற்கு அதிக முக்கியத்துவம் தந்துள்ளதாக ரசிகர்கள் எண்ணுகிறார்கள்?
தமிழ் சினிமாவில் நடிகன்தான் முக்கிய நபராக இருக்கிறான். இது சினிமாவைப் பற்றியக் கதை. எனவே நிஜ சினிமாத்தனம் இந்த சினிமாவில் பிரதிபலித்துவிட்டது. அதாவது ஒரு செய்தியாளர் சந்திப்பிற்கு போனால் கூட நீங்கள்தான் படத்தின் கேப்டன் என்று நம்மை சொல்லுவார்கள். ஆனால் ஒரு புகைப்படம் கூட நம்மை எடுக்க மாட்டார்கள். நம்மை கொஞ்சம் ஒதுங்கச் சொல்லிவிட்டு அவர்களை எடுப்பார்கள். நம்மை வைத்து எடுத்தாலும் வெட்டிவிட்டு அதனை பிரசுரிப்பார்கள். அந்த நிலையைத்தான் வெள்ளித்திரை சினிமா சொல்கிறது. எனவே இதில் வில்லனுக்கு முக்கியத்துவம் என்பதை விட சினிமாவில் நடிகனுக்குத்தான் முக்கியத்துவம் என்று சொல்லியிருக்கிறேன். அவ்வளவே.
இந்தப் படத்தில் சில இடங்களில் பிரகாஷ் ராஜ் சொல்வது நியாயமாகத் தெரிகிறது. பொதுவாக கதாநாயகன் மூலம்தான் சரியான விஷயங்கள் சொல்லப்படும் அல்லவா?
இதில் நான் யாருக்கும் முக்கியத்துவம் அளித்துச் செய்யவில்லை. இன்றைக்குத் தமிழ் திரையுலகின் யதார்தம் என்னவோ அதனை பதிவு செய்துள்ளேன் அவ்வளவுதான்.
இந்த திரைப்படத்தில் நீங்கள் சொல்ல வந்தது என்ன? எதை சரியென்று கூறியுள்ளீர்கள்?
அதனை நான் கிளைமாக்சில் தெளிவாக கூறியுள்ளேன். எந்த நடிகனும் சிந்தித்து வளர்வதில்லை, ஒரு இயக்குனரின் சிந்தனையில்தான் நடிகன் வளர்கிறான். எந்த நடிகனும் சிந்தித்து வளர்வதில்லை, மாறாக, எல்லொருடைய சிந்தனையில்தான் வளர்கிறான்.
“தான் சிந்தித்ததனால் தன்னை வளர்த்துக்கொண்டு, என்னை மாதிரி நடிகர்களையும் வளர்த்து, சினிமாவை வளர்த்து, மக்களுடைய ரசனையை வளர்த்து, இந்த சமூகம் வளரனும் நினைக்கிறவன் ஸ்டார்” என்று கூறியுள்ளேன். அதனை நடிகனைக் கொண்டே சொல்ல வைத்துள்ளோம்.
மக்களுக்காக சிந்திப்பவன் ஸ்டார் என்று சொல்லியுள்ளோம்.
இன்றைய சினிமாவில் ஒன்றை நீங்கள் பார்க்கலாம். இரண்டு பேருக்கு இடையில் சண்டை வந்தால் ஒருவன் தோற்பான், மற்றொருவன் ஜெயிப்பான் என்று கூறுவார்கள். ஆனால் இந்தப் படத்தின் இறுதியில், “என்னை பெரிதாக ஜெயிக்க வைத்துவிட்டு என்னை ஜெயித்துவிட்டாயே” என்று நடிகன் கூறுகிறான்.
வெள்ளித்திரை கதையோட்டத்தில் பாடல்கள் இடைஞ்சலாக இருப்பதை உணர்ந்தீர்களா?
இரண்டு பாடல்தான் வைக்கணுன்னு விரும்பினேன். வேற வழியில்லாம வச்சதுதான் மீதி மூணு பாடல்கள். தவறான விஷயம்தான். காம்ப்ரமைஸ் பண்ணிட்டு வச்சதுதான் மூணு பாடல்களும்.
எங்க காம்பரமைஸ் பன்னிக்கிறோம் என்பது முக்கியம். தரமான, எல்லோரும் பார்க்கிற படத்தை எடுக்காம, கவர்ச்சி என்ற பெயரில் நிச்சயமா விபச்சாரம் செய்ய மாட்டேன். ஆனால் படத்தை எடுக்கும்போது சில காம்பரமைஸ் பண்ணித்தான் ஆகவேண்டும். அது தயாரிப்பை பொறுத்த விஷயமாகவோ மற்றதாகவோ இருக்கும்.
மாஸ் ஹீரோக்களை வைத்து படம் பண்ணும் எண்ணமிருக்கா?
சில கதைக்கு ரஜினி, விஜய் மாதிரி பெரிய ஹீரோக்கள் தேவைப்படுவாங்க. அந்த மாதிரி சந்தர்ப்பங்களில் அவங்களை வச்சும் படம் பண்ணலாம். 'மொழி'யில ஜோதிகா நடிச்சதால்தான் அந்த கேரக்டர் பெரிய அளவில் ரீச் ஆனது.
எந்த மாதிரி படம் எடுக்க ஆசைப்படுறீங்க?
எதை எடுத்தாலும், அப்பா, அம்மா, அண்ணன், தங்கைனு குடும்பமா உட்கார்ந்து பார்க்கும் போது முகும் சுளிக்காத மாதிரி இருக்கணும். அப்படிபட்ட படங்கள் எடுப்பேன்.
தமிழ் திரைப்படங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. இதற்கு மேல் சிறந்த படங்களை எடுக்கும் வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். காரணம், திரைத்துறைக்குள் அடியெடுத்து வைத்துள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள்.
இந்த நிறுவனங்கள் ஒரிரு கோடிகளை லாபமாகப் பார்க்க வரவில்லை, கெளரவமாக தங்களை நிலைநாட்ட வந்துள்ளார்கள். அதனால் தரமான படங்கள் எடுக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.