விமர்சனம் தனிப்பட்டவர்களின் கருத்து- விஜி!
சனி, 15 மார்ச் 2008 (13:16 IST)
நேற்று வெள்ளித்திரை படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு. இயக்குநர் விஜி சகதிம் கலந்து கொண்டார் பிரகாஷ் ராஜ். சந்திப்பின் போது அவர் கூறியதாவது...
எனது டூயட் மூவிஸ் சார்பில் ஆபாசமில்லாத தரமான படங்களை மட்டுமே எடுப்பேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அந்த வகையில் மொழிக்குப் பிறகு முக்கியமான படம் வெள்ளித்திரை.
சினிமா உலகைப் பற்றிப் படமெடுத்தால் புரியுமா என்று பயமுறுத்தினார்கள். விஞ்ஞானி பற்றிப் படமெடுத்தால் பார்ப்பவர்களும் விஞ்ஞானியாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்றார் பிரகாஷ் ராஜ்.
வெள்ளித்திரையில் தளபதி, கேப்டன் பட்டங்கள் குறித்து வசனங்கள் வருகிறது. இது குறித்துக் கேட்டதற்கு, யாரையும் கிண்டல் செய்வதற்காக அந்த வசனங்களை வைக்கவில்லை. பட்டம் என்பது மக்கள் கொடுப்பது. அதைவிட்டு, நேற்று வந்தவர்கள் எல்லாம் பட்டம் வைத்துக் கொள்வதைத்தான் சுட்டிக் காட்டியிருக்கிறோம். இதை நாங்கள் கிண்டல் செய்யாமல் வேறு யார் செய்வார் என்றார்.
நான்கு மொழிகளில் நடித்தாலும் தமிழில் மட்டும் படம் தயாரிக்கிறார் பிரகாஷ் ராஜ். இந்திய சினிமாவில் காசி மாதிரிப் புனிதமானது தமிழ்த் திரையுலகம். அதனால்தான் வேறு மொழிகளில் நடித்தாலும், தமிழில் மட்டுமே படங்களைத் தயாரிக்கிறேன் என இதற்கு விளக்கமளித்தார்.
பேட்டியின் போது, காலமும் நேரமும் கூடி வந்தால், படம் இயக்குவேன் என தனது இயக்குநர் ஆசையையும் வெளிப்படுத்தினார் பிரகாஷ் ராஜ்.
இயக்குநர் விஜி அதிகம் பேசவில்லை. கிளைமாக்ஸ் நம்புகிற மாதிரி இல்லையே என்ற கேள்விக்கு, விமர்சனம் என்பது தனிப்பட்டவர்களின் கருத்து. அது சரியாக இருக்க வேண்டும் என்பதில்லை என்றார்.