இந்தியில் வம்புச்சண்ட ரீ-மேக் - சத்யராஜ்!

செவ்வாய், 11 மார்ச் 2008 (13:55 IST)
webdunia photoFILE
வில்லங்கமான கேள்விகளுக்கும் தயக்கமில்லாமல் பதில் சொல்வது சத்யராஜின் ஸ்டைல். ரீ-மிக்ஸ் பாடல்கள், எம்.ஜி.ஆர். வாரிசு குறித்து அவரிடம் வம்பாக கேட்ட கேள்விகளும் தெம்பாக அவர் அளித்த பதில்களும்...


பழைய பாடல்களை ரீ-மிக்ஸ் செய்வது தவறு இல்லையா?

தப்பே இல்லை. இது பழைய தலைமுறையின் பெருமையை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சி. மாமன் மகள் படத்தில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு பாடலை பயன்படுத்தினேன். வெற்றிவேல் சக்திவேலில் தங்கப் பதக்கத்தின் மேலே பாடல். தங்கம் படத்தில் பூ மழை தூவி பாடல். இப்போது வம்புச்சண்டயில் எம்.ஜி.ஆரின் நான் யார் நீ யார் பாடலை பயன்படுத்தியிருக்கேன்.

தொடர்ந்து எம்.ஜி.ஆர். பாடல்களையே பயன்படுத்துகிறீர்களே?

எம்.ஜி.ஆர். பாடல்களை பயன்படுத்துவதில் தப்பு இல்லை. எம்.ஜி.ஆரின் ரசிகன் என்ற முறையில் அதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. நான் அக்மார்க் முத்திரை குத்தப்பட்ட எம்.ஜி.ஆர். ரசிகன்.

பழைய படங்களை ரீ-மேக் செய்யும் போக்கு அதிகரித்திருக்கிறதே?

பழைய படங்களைத் திரும்ப எடுப்பதில் தப்பு இல்லை. நான் பி.யு. சின்னப்பாவின் உத்தமபுத்திரன் பார்க்கவில்லை. சிவாஜி நடித்த உத்தமபுத்திரன் படத்தைத்தான் பார்த்திருக்கிறேன். எம்.கே. ராதா நடித்த அபூர்வ சகோதரர்கள் பார்க்காத குறை, அதே படத்தை மீண்டும் தயாரித்து, எம்.ஜி.ஆர். நடித்த நீரும் நெருப்பும் படத்தைப் பார்த்து தீர்ந்தது.

உங்கள் படத்தை ரீ-மேக் செய்வதென்றால் எந்தெந்தப் படங்களை சிபாரிசு செய்வீர்கள்?

வேதம் புதிது, கடலோரக் கவிதைகள் இரண்டையும் இப்போதும் திரும்ப எடுக்கலாம்.

எம்.ஜி.ஆரின் வாரிசு யார் என்றொரு சர்ச்சை கிளம்பியிருக்கிறதே...?

சில பேருக்கு வாரிசு கிடையாது. எம்.ஜி.ஆருக்கும் வாரிசு கிடையாது. வாத்தியாருக்கு மாணவர்கள்தான் இருக்க முடியுமே தவிர, வாரிசு இருக்க முடியாது.

வம்புச்சண்டயில் உதய் கிரணுக்குதானே முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது?

பாதி படத்திற்கு மேல் நான் வருவதாக சிலர் குறைபட்டுக் கொள்கிறார்கள். இதுக்கு காரணம் என்னுடைய மனப்பக்குவம்தான்.

உம்மா... உம்மம்மா பாடலெல்லாம் சும்மா காமெடிக்காக, என்றைக்கும் அந்த நினைப்பாவே இருக்கக் கூடாது. இளம் ஹீரோவுடன் அனுபவப்பட்ட நடிகர் சேர்ந்து நடிப்பது இந்தியில் ரொம்ப சகஜம். அது மாதிரியான சூழல் இங்கேயும் உருவானால்தான் வித்தியாசமான கதைகள் கிடைக்கும். விரைவில் வம்புச்சண்ட இந்தியில் ரீ-மேக் செய்யப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்