ரீமேக்கைத் துவக்கி வைத்த பெருமை எனக்குண்டு - செல்வா!
வெள்ளி, 1 பிப்ரவரி 2008 (11:24 IST)
webdunia photo
WD
தமிழ்ப் படங்களை ரீமேக் செய்யும் பாணியைத் தொடங்கி வெற்றியும் பெற்றிருப்பவர் செல்வா. அன்று ஜெமினி நடித்து பாலசந்தர் இயக்கிய நான் அவனில்லை படத்தை ஜீவன் நடிக்க செல்வா இயகினார். இப்போது தோட்டா இயக்குகிறார்.
இயக்குநர் செல்வாவுடன் ஒரு சந்திப்பு.
தமிழ்ப் படத்தையே ரீமேக் செய்யும் அனுபவம் தந்த தெளிவு என்ன?
என்னைப் பொறுத்தவரை நான் அவனில்லை படம் தந்த அனுபவம் மகிழ்ச்சி. வெற்றி. திருப்தி. தமிழ்ப் படங்களை ரீமேக் செய்து முதலில் வெற்றியைத் தொடங்கி வைத்தது நான்தான் என்பதில் எனக்குப் பெருமை உண்டு. திருப்தி உண்டு. அதன்பிறகு சில படங்கள் உருவாகி இருக்கின்றன. அண்மையிலி பில்லா வெளியாகி நல்ல வெற்றி பெற்றுள்ளது.
இந்த ரீமேக் இனியும் தொடர்ந்து செய்வீர்களா?
நிச்சயமாகச் செய்வேன். அடுத்து நூற்றுக்கு நூறு படம் செய்யலாம் என்று ஆசை. ஆனால் சற்று தாமதமாகும் என்று நினைக்கிறேன். ஆனால் என்னைத் தொடர்ந்து சில படங்கள் எடுக்கத் துணிவு வர நான் இயக்கிய நான் அவனில்லை நல்ல தொடக்கமாக அமைந்தது என்றால் அதில் தவறில்லை.
உங்கள் நான் அவனில்லை பார்த்து பாலசந்தர் என்ன கூறினார்?
அவரது அனுமதியோடுதான் அதை எடுத்தேன். புதுப் படத்தில் என்னென்ன மாற்றங்கள் செய்யப் போகிறேன் என்று அவரிடம் சொல்லிவிட்டுத்தான் செய்தேன். ஒவ்வொரு காட்சியும் அவருக்குத் தெரிந்ததுதான். எனவே படம் பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாகவும் சொன்னதை எடுத்திருப்பதாகவும் பாராட்டினார். அதுவே எனக்குப் பெரிய மகிழ்ச்சியான திருப்தியான அனுபவம்தான்.
வெறும் மசாலாப் படங்கள்தான் உங்கள் இலக்கா?
யாரை வைத்து இயக்கினாலும் கதையில் முக்கியத்துவம் இருக்கும்படிதான் என் படம் இருக்கும். ஒன்றுமே கதை இல்லாமல் ஒரு கேரக்டர் கூட பேசப்படும்படி அமையாமல், நாலு பாட்டு, நாலு ஃபைட்டு ஃபார்முலாவில் எனக்கு விருப்பமில்லை. அப்படிப்பட்ட படங்கள் செய்வதில் எனக்கு என்றும் ஆர்வமில்லை. என்னுடைய எந்தப் படத்தை எடுத்துக் கொண்டாலும் இந்த ஃபார்முலாவில் அடங்காது. ஏதாவது ஒரு விஷயம் பேசும்படி இருக்கும். சாதாரண நடிகர் நடித்தாலும் சரி, நட்சத்திர நடிகர் நடித்தாலும் சரி அதன் அடியில் ஒரு கதை நிச்சயம் இருக்கும்.
நான் அவனில்லை படத்தில் கவர்ச்சியை நம்பியது போல் தெரிகிறதே...?
பெண்களை ஏமாற்றுகிகறவன் கதை. நாலைந்து பெண்கள் வருகிறார்கள் என்கிறபோது, அதுவும் இந்தக் காலக் கட்டத்தில் வருகிறபோது இந்த கிளாமர் தேவைதான். அதை கலர்ஃபுல் என்றுதான் பலரும் சொன்னார்கள். இக்காலத்தில் காட்டும்போது அது தேவைப்பட்டது. படத்தில் கிளாமர் இருக்கலாம். ஆனால் வல்காரிட்டி இல்லை என்பது பலரும் சொன்ன கருத்து.
ஒரு காலத்தில் கதையில் ஆர்வம் காட்டினீர்கள். இப்போது நட்சத்திரங்களைத் தேட ஆரம்பித்து விட்டீர்களோ...?
நான் ஒரு டைரக்டர். எனக்குத் தொழில் டைரக்ஷன். இதில் நான் இப்படிப்பட்ட ரகம், இந்த வட்டம் என்று எந்த வரையறைக்குள்ளும் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. அப்படி ஒரு படம். இப்படி ஒரு படம் பிறகு எப்படியும் ஒரு படம் என்று பல வகையாக எடுக்கவே ஆசை. யாரை வைத்து எடுப்பது என்று கதையும், அமையும் தயாரிப்பாளரும்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர என் தனிப்பட்ட விருப்பமல்ல.
இப்போது இயக்கிவரும் தோட்டா படத்தில் ஜீவனை எந்த அடிப்படையில் தேர்வு செய்தீர்கள்?
நான் அவனில்லை வெற்றியை வைத்து என்று கூட சிலர் கேட்டார்கள். அது அல்ல. நான் ஜீவனை இந்தப் படத்துக்காக காக்க காக்க சமயத்தில் முடிவு செய்தேன். அதன்பிறகு வந்த படங்கள் அவருக்கு வெற்றி பெற்று இப்படத்துக்கு பலமாக அமைந்துள்ளது.
தோட்டா இடையில் நின்றுபோனது ஏன்?
ஏன் என்று கேட்டால் நல்லதுக்கே என்பேன். முதலில் தொடங்கி 12 நாள் படப்பிடிப்பு நடந்தது. பிறகு ஜீவனும் சரி, ப்ரியாமணியும் சரி சில வெற்றிகளைச் சந்தித்த நட்சத்திரங்கள் ஆகிவிட்டார்கள். அது இப்படத்துக்கு மிகவும் சாதகமாக அமைந்துவிட்டது. எனவே அந்த 12 நாள் படப்பிடிப்பு செய்த காட்சிகளை நீக்கிவிட்டு வேறு புதிதாக எடுத்து சேர்த்துள்ளோம். இப்போது படத்தில் மொத்த நிறமே பெரிய அளவில் மாறிவிட்டது.
இதுவும் ரவுடி கதைதானா?
அப்படி அலட்சியமாகச் சொல்லிவிட முடியாது. இது ஒரு காதல் கதை. கதை திரைக்கதை விஷயத்தில் புதிய முறை ஒன்றை கடைப்பிடித்து புகுத்தியிருக்கிறேன். அது பேசப்படும் என்று நம்புகிறேன். இதில் கத்தியுண்டு, துப்பாக்கியுண்டு ஆனால் ரத்தமில்லை. இது ஒரு புதுமைதானே?