மீண்டும் ஜெயிப்பேன் - ஆர்.கே. செல்வமணி

செவ்வாய், 22 ஜனவரி 2008 (13:04 IST)
இன்று பல கோடி ரூபாய் பட்ஜெட் படங்கள் எல்லாம் சகஜமாகிவிட்டது. இந்த மெகா பட்ஜெட் கலாச்சாரத்தின் முன்னோடி என்று ஆர்.கே. செல்வமணியைக் கூறலாம்.

நீண்ட இடைவெளிக்குப் பின் ஓசைப்படாமல் ஒரு படத்தை இயக்கி முடித்துள்ளார். அதுதான் புலன் விசாரணை-2. ஜனவரிக்குள் வெளியிட்டு விடும் மும்முரத்தில் பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கிறார்.

இனி ஆர்.கே. செல்வமணியிடம்....

ஏன் இந்த இடைவெளி?

என் வா‌ழ்க்கையில் ஒரு கட்டத்துக்கு மேல் எல்லா சம்பவங்களும் அனுபவங்களும் பகிரங்கமாகிவிட்டன. என் வாழ்க்கைப் போராட்டம் எல்லாரும் அறிந்ததே. அப்படிப்பட்ட சூழலில் என்னால் படம் இயக்க முடியும் என்று நான் நம்பவே இல்லை. இனி நாம் படமே இயக்கக் கூடாது என்றிருந்தேன். அப்படிப்பட்ட சூழலில்தான் புலன் விசாரணை-2 படம் அமைந்தது. என் முன்னேற்றத்தில் எப்போதும் பின்னணியில் இருக்கும் தயாரிப்பாளர் ராவுத்தர்தான் இதன் பின்னணியிலும் இருக்கிறார்.

சினிமா மீது வெறுப்பு வர குற்றப்பத்திரிக்கை அனுபவம்தான் காரணமா?

நிச்சயம். குற்றப்பத்திரிக்கை அனுபவும் மிகவும் கசப்பானது. நம் நாட்டுக் கருத்து சுதந்திரம் மீது பல கேள்விகள் எழும்படியான கசப்பான அனுபவம். அந்தப் பட விஷயத்தில் சென்சார் செய்தது நிஜத்தில் அநீதி. அந்தக் காயம் என்னை வெகுவாகப் பாதித்தது. அதுபற்றி இனிப் பேசிப்பயன் இல்லை.

அந்த வெறுப்பு இப்போது போய்விட்டதா?

சினிமா என்றும் அழியாது. சினிமாவுக்கு மக்களுக்கு உள்ள அபிமானமும் என்றும் மாறாதது. குறையாதது. ஆனால் சினிமாவை நேசிப்பவர்கள் போராட்டங்களைச் சந்திக்கும் நிலை துரதிருஷ்டமானது. இன்று இது இயல்பாகிவிட்டது. எனவே இதுபற்றி வருத்தப்பட்டு பயனில்லை என்றாகிவிட்டது. காயங்கள் பல இருக்கலாம். ஆனால் எல்லாக் காயங்களுக்கும் காலம்தான் மருந்து. இந்த கால மாற்றம் எனக்கும் பல பாடங்களையும் பொறுமையையும் கற்றுக் கொடுத்திருக்கிறது. அதனால் எனக்குள்ளும் மனமாற்றம். எனவே தான் புலன்விசாரணை-2க்கு இறங்க முடிந்தது. நான் என்றும் என் வேலையில் சின்சியராக இருந்திருக்கிறேன். அது இப்படத்திலும் தெரியும்.

பிரம்மாண்டப் படங்களை முதலில் ஆரம்பித்தது நீங்கள்தான். இப்போது பலரும் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். அதுபற்றி?

பெரிய படங்கள் என்றால் பெரிய ஹீரோக்கள் நடித்ததுதான் என்றிருந்தது ஒரு காலம். ஒரு சாதாரண கதை, காதல் கதை அதில் புதுமுகங்களை நடிக்க வைத்துக் கூட அதை மெகா பட்ஜெட்டில் உருவாக்க முடியும் என்பதை நான்தான் ஆரம்பித்து வைத்தேன். அதுதான் செம்பருத்தி. அந்தக் காலத்தில் அப்படிப்பட்ட பெரிய பட்ஜெட்டில் யாரும் எடுக்கவில்லை. இந்த நிஜம் சில நேரம் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. இப்போது தன் உதவி இயக்குநர்களுக்கு தன் பட நிறுவனத்தி‌ல் படம் இயக்க வாய்ப்பு தந்து வருகிறார்கள் சில இயக்குநர்கள். இந்த நல்ல முயற்சியை ஆரம்பித்து வைத்தது நான்தான் என்று நம்புகிறேன். ஆனால் இன்றுள்ள சிலர் இதுபற்றி அறியாமல் பேசுகின்றனர். சினிமா பற்றி அதன் வரலாறு பற்றி தெரியாமல் சிலர் ஏதேதோ பேசி வருவது கேள்விப்படும்போது வருத்தமாக இருக்கும். பிறகு எப்போதாவது உண்மை தெரியும் என்று மெளனமாக இருந்து விடுவேன்.

உங்களது அடுத்த முயற்சிகள் எப்படி உள்ளன?

சினிமா நான் நேசிக்கும் தொழில். காலம் பூராவும் இதில் ஈடுபடவே எனக்கு ஆசையும் கனவும். ஆனால் சூழ்நிலை என் வாழ்வில் நிறையவே விளையாடிவிட்டது. அதனால் விலகியிருக்க வேண்டியதாகி விட்டது. நான் மீண்டும் களத்துக்கு வந்திருக்கிறேன். அப்போது புலன் விசாரணை என்ன மாதிரியான பாதிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியதோ அதற்குக் கொஞ்சமும் குறையாமல் புலன் விசாரணை 2 படமும் ஏற்படுத்தும். இதில் பிரசாந்தை வித்தியாசமாகக் காட்டியுள்ளேன். பிரசாந்தை வில்லனாகக் கூட காட்டி என்னால் வெற்றி பெற வைக்க முடியும். வில்லனிலும் ஸ்டைலாக அவரைக் காட்ட முடியும்.

குடும்பம் வாழ்க்கை எப்படி உள்ளது?

இந்த சினிமா தந்த மாபெரும் பரிசு என் மனைவி ரோஜாதான். எங்களுக்குள் அன்பைத் தவிர வேறில்லை. எங்களுக்குள் நடக்கும் எல்லா பிரச்சினைக்கும் காரணமாக இருப்பது மட்டுமல்ல மருந்தாக இருப்பதும் இந்த அன்பு மட்டும்தான். மகள் அன்ஷுமாலிகா நாலு வயது ஆகிறது. மகன் கிருஷ்ண கெளசிக் ஒன்றரை வயது. இந்தக் குழந்தைகள் பரவசத்தின் - உற்சாகத்தின் பிறவிகள். அவர்கள் என் மாபெரும் சந்தோஷம். வாழ்க்கை நகர்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்