குடும்பத்தோடு பார்க்கும்படி வரும் படங்கள் அரிதாகிவிட்டது. குடும்பத்தோடு அமர்ந்து முகம் சுழிக்காமல் பார்க்கும் கண்ணியமான படமாக அண்மையில் வந்திருக்கிறது கண்ணா. இதன் இயக்குநர் ஆனந்த்.
பார்த்திபனின் பள்ளிக்கூடத்திலிருந்து வெளிவந்திருக்கும் மாணவர் இவர். இனி ஆனந்திடம்.
இயக்குநராகும் முன் உங்கள் கதை?
நான் சபா சார். பார்த்திபன் சார் இருவரிடமும் உதவி இயக்குநரா ஒர்க் பண்ணியிருக்கேன். இரண்டு பேரிடமும் நான் கற்றவை ஏராளம். சபா சாரிடம் ஒரு பாடலை எப்படி விஷ¥வலா பண்றதுன்னு கத்துக்கிட்டேன்.
பார்த்திபன் சாரிடம் புள்ளக்குட்டிக்காரன் தயாரிப்பு பணிகளில் ஒரு டைரக்டர் எப்படி புரிஞ்சு அதுக்கேத்த மாதிரி திட்டமிடுறதுன்னு இவர்கிட்ட கத்துக்கிட்டேன்.
கே. ராஜேஷ் சாரிடமும் அமரன் படத்தில் ஒர்க் பண்ணியிருக்கேன். இந்த மூன்று பேரிடமும் கற்றுக் கொண்ட அனுபவங்களுமே ஒரு டைரக்டருக்கு முக்கியமா தேவை. இவை என் முதல் படமான கண்ணாவுக்கு மிகவும் பயன்பட்டதை உணர முடிஞ்சது.
இயக்குநராக அறிமுகமான பின்னணி பற்றி?
நான் ஒரு படம் டைரக்ட் பண்ணினாலும் நல்ல படமாக பண்ண வேண்டும். இதுதான் என் ஆசையா இருந்திச்சு. பட வாய்ப்பு வருதுன்னு ஏதோ ஒரு படம் பண்ண நானும் இயக்குநர்ன்னு அறிமுகம் ஆவதில் எனக்கு விருப்பமில்லை.
இதை என் நண்பர்களிடம் சொல்லிட்டு இருந்தேன். அப்போது அதே எண்ணணுத்துடன் வந்த காஸ்மிக் நிறுவனம் இணைந்தூ கண்ணா படம் முடிவாச்சு. நடிகர் ராஜாவையும், நடிகை ஷீலாவையும் தேர்வு செய்தோம். ஹீரோயின் அப்பா கேரக்டருக்கு பிரகாஷ்ராஜ் சாரை போடலாம் என்று எண்ணினோம். அவர் ரொம்ப பிசியாக இருந்ததால் 10 நிமிடம் கதை கேளுங்கள் பிடிச்சால் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டோம்.
கேட்டதுமே இதுல நான் பண்றேன்னார். யார் புரொட்யூசர்னு கேட்டார். காஸ்மிக் பிலிம்னு சொன்னேன். இது அவங்க பண்ணலன்னா நான் பண்ணியிருப்பேன்னார். எனக்கு தேசிய விருது கிடைச்ச மாதிரி இருந்திச்சு.
நாங்க சொன்ன சம்பளத்துக்கும் குறைவான தொகையையே வாங்கிக் கொண்டார். கேரக்டர் தேர்வே நிறைவாக இருந்தது. எதிர்பார்த்தபடி நல்லா அமைஞ்சது.
படத்தில் மறக்க முடியாதது?
webdunia photo
WD
எல்லாரும் சிறப்பாக நடிச்சதுதான். அந்த பள்ளி மாணவி வேடத்துக்கு ஷீலாவைத் தவிர வேற யாரையும் நினைச்சுப் பார்க்க முடியலை. பிரகாஷ்ராஜ் சார், சீதாவிற்கும் சொந்தப் பெண் மாதிரி ஷீலா இருப்பாங்க. அப்படி ஒரு பொருத்தமா அமைஞ்சிருந்தது படத்திற்கு படப்பிடிப்பு கோவை, ஊட்டி பகுதிகளில் நடந்திச்சு. பிரகாஷ்ராஜ் சார் பள்ளியில் படிக்கும் தன் மகளை காணவில்லை என்று பார்க்க அங்கே போவார். ஸ்கூல் எச்எம்மை பார்த்து பேசுவது போல் ஒரு காட்சி வரும். அவர் நடிப்பை பார்த்து கட் சொல்ல மறந்துவிட்டேன். இதில் என்ன விசேஷம்னா பிரகாஷ்ராஜ் சத்தம் போடாமல், பெரிதாகக் கோபப்படாமல், ஆர்ப்பாட்டம் பண்ணாமல் நடிச்சிருப்பார். ஓசையின்றி ஒரு நடிப்பு வேள்வி நடத்தியிருப்பார்.
படத்திற்கு கிடைத்த பாராட்டு?
படம் பார்த்துவிட்டு சுஹாசினி மேடம் பதினாறு வயசுப் பொண்ணுங்கறீங்க.. அவளை வழக்கமான அவளோட அழகு, இளமை, அவளைச்சுற்றி திரியற பசங்க இப்படித்தான் காட்டுவாங்க. நீங்க கண்ணியமா கதையை எடுத்துச் சொல்லியிருக்கீங்க. அதுக்கே உங்களைப் பாராட்டணும். படத்துக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. பத்திரிகைகள் கொடுத்த வரவேற்பு மறக்க முடியாதது.
நல்ல படத்தை எடுக்க வரும் இளைஞர்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்திருக்கு. ஸ்கூல் பிள்ளைகள் எல்லோரும் பார்க்க வேண்டிய படம்னு, ஸ்கூல் மொத்தமும் போய் படம் பார்த்துவிட்டு வர்ற நிகழ்ச்சிகள் நடக்கறதா எனக்கு கடிதம் வருது. அதுதான் மிகப்பெரிய சந்தோஷம்.
படத்துக்கு சரியான விளம்பரம் இல்லையே?
இது உண்மைதான். வருத்தமாத்தான் இருக்கு. பார்க்க முடியாத படங்களையெல்லாம் பரபரப்பாக விளம்பரப்படுத்துறாங்க. பெரிய கம்பெனிதான். இருந்தாலும் கண்ணாவுக்கு விளம்பரம் சொல்ல தயங்குறாங்க. படம் பார்த்தவங்க சொல்ற வாய் மொழியான விளம்பரம்தான் கிடைச்சிருக்கு. ஏன் விளம்பரம் இல்லைன்னு என்னிடமே கேட்கிறாங்க.