அரவாணியா நடி‌ப்ப‌தி‌ல் ம‌க‌ி‌ழ்‌ச்‌சியே - மனோரமா

திங்கள், 7 ஜனவரி 2008 (16:50 IST)
யாரும் தொட முடியாத கின்னஸ் சாதனையை செய்தவர் மனோரமா. அவர் ஆயிரம் படங்களில் நடித்து இந்தப் பெருமையைப் பெற்றார். அதன் பின்னரும் நடித்துக் கொண்டே அவரது சாதனையை விசாலப்படுத்திக் கொண்டே போகிறார்.

அண்மையில் அவரை `ஜான்' படப்பிடிப்பில் சந்தித்தபோது... மகிழ்ச்சியாகக் காணப்பட்டார். இதில் அவர் அரவாணியாக நடிக்கிறார். இதுதான் அவரது உற்சாகத்துக்குக் காரணம். இனி ஆச்சியுடன் பேசலாம்...

ஆயிரம் படத்தில் நடித்ததை விட மகிழ்ச்சியாக உணர்வது போல் தெரிகிறதே...?

webdunia photoWD
நான் நிஜமா சந்தோஷமா இருக்கேன். நான் ஆயிரம் படத்துக்கு மேல நடிச்சிருந்தபோதும் அரவாணி கேரக்டர்ல இதுவரைக்கும் நடிச்சது இல்லை. ஆயிரம் வேஷம் போட்டாலும் இதுமாதிரி ஒண்ணு வரலை. எத்தனையோ கதாபாத்திரங்கள் பண்ணிட்டேன். இதுமாதிரி ஒண்ணு ஏன் நமக்கு வரலைன்னு நினைச்சதுண்டு.

அவ்வளவு ஆர்வமா இருந்தீர்களா?

ஆமாம். நான் பத்திரிகைகளில் பலமுறை இதை சொல்லி என் ஆசையை வெளிப்படுத்தியிருக்கேன். எதுக்கு ஆசைப்படறீங்க... என்ன மாதிரி பாத்திரத்தில் நடிக்க ஆசைன்னு கேட்டால் நான் இதைச் சொல்வேன். அப்படி பல காலம் மனசுக்குள் இருந்த ஆசை இப்போ நிறைவேறியிருக்கு. இந்த 'ஜான்' படத்தை இந்திரன் டைரக்ட் பண்றார். எஸ்.என்.எஸ். மீடியாங்கிற கம்பெனி தயாரிக்கிறாங்க. கதை சொன்னப்போ எனக்குப் பிடிச்சுப் போச்சு.

கதையில் உங்களுக்கு எந்த அளவில் முக்கியத்துவம் உள்ளது..? நகைச்சுவைக்காகவா... அல்லது...?

இதுவரை நிஜவாழ்க்கையிலும் சரி சினிமாவிலும் சரி அரவாணிகளை ஒரு கேலிப் பொருளா வேடிக்கைப் பொருளாத்தான் பார்க்கிறாங்க. அவங்களைக் கிண்டல் பண்ணி எத்தனை படங்கள் வந்திருக்கு. ஆனா இந்தப் படத்தில் அவங்களை ஒரு தாயைப் போல தாய்மை ஸ்தானம் தந்து டைரக்டர் காட்டியிருக்கார். அதுதான் எனக்குப் பிடிச்சி நடிக்கச் சம்மதிச்சேன்.

தனிப்பட்ட முறையில் அரவாணிகள் மேல் உங்களுக்கு அனுதாபம் உண்டா?

நிச்சயமா அவங்க மேல எனக்கு அனுதாபம் உண்டு. அவங்க இந்த சமுதாயத்துல கேலிப் பொருளா பார்க்கப்படறது மட்டுமல்ல இந்தப் பிறவிக்காக பல விஷயங்களில் கஷ்டங்களை அனுபவிக்கிறாங்க. அதை அவங்க யார்கிட்டே சொல்றது. எங்கே போனாலும் பிரச்சினை. பாத்ரூம் போவதில் கூட பிரச்சினை எந்தப் பக்கம் போவதுன்னு. இப்படி பல மனக் கஷ்டங்களை அனுபவிக்கிறாங்க.

அவர்களின் பிரச்சினை படத்தில் சொல்லப்படுகிறதா?

இதுவரைக்கும் அரவாணி இனத்தை சினிமா பார்த்தது... சொன்னது... காட்டியிருக்கிறது வேற. இந்தப் படத்துல காட்டியிருக்கிறது வேற. அவங்களுக்குள்ள பிரச்சினைகள் அதிகம். அவங்களுக்கு கோரிக்கைகள் நிறைய இருக்கு. அதுக்கு அரசாங்கம் தான் ஏதாவது செய்யணும். 'ஜான்' படம் வரட்டும். பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்னு நம்பறேன்.

இதற்காக எந்த வகையில் முன் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டீர்கள்...?

இது தெரியாத விஷயமில்லை. நாம அன்றாடம் தினம் தினம் சந்திக்கிற கேரக்டர்தான். நான் அவங்களை உன்னிப்பா கவனிச்சு அவங்களோட நடை, உடை, பாவனைகளை தெரிஞ்சு வச்சிருக்கேன். இந்த `ஜான்' பட பூஜையன்னைக்கு நிறைய அரவாணிகள் கலந்துக்கிட்டாங்க. அவங்க என்னைச் சுற்றி நின்னு என்னை விடவே இல்லை. அவ்வளவு பிரியமா - பாசமா நடந்துக்கிட்டது மறக்க முடியாது. ஒவ்வொருத்தரும் என் மேல அவ்வளவு பாசம், மரியாதை வச்சிருக்காங்க.

இப்படி ஆயிரம் படங்களில் நடிப்போம் என்று நினைத்துப் பார்த்ததுண்டா?

நிச்சயமா நினைச்சதில்லை. நான் கதாநாயகியா நடிக்கத்தான் சினிமாவுக்கு வந்தேன். ஆனால் ஒரு நகைச்சுவை நடிகையா என் பாதை மாறிடுச்சு. காமெ‌டி ஆர்ட்டிஸ்ட் ஆயிட்டோமேன்னு வருத்தம் இருந்திச்சு. பிறகு ஒரு தெளிவு வந்திச்சு. கதாநாயகியா நடிச்சிருந்தா இத்தனை வருஷம் சினிமாவுல நிலைச்சிருக்க முடியுமா... இதுபோல விதம்விதமா வேஷங்கள் போட்டிருக்க முடியுமா... இப்போ சந்தோஷப்படறேன். நகைச்சுவை நடிகைங்கிறதில் பெருமைப்படறேன். ஆயிரம் படங்களில் நடிச்சது பற்றி கேட்டப்போ, இந்த சினிமாவுல ரெண்டாயிரம் மூவாயிரம் படங்களில் முகம் காட்டி சிறுசிறு வேடங்களில் நடிச்சவங்க கூட இருக்காங்கன்னு சொல்லியிருக்கேன். எண்ணிக்கையில பார்த்தால் அவங்க என்னை முந்திட்டாங்கன்னு சொல்வேன்.

உங்களுக்குப் பிறகு நகைச்சுவை நடிகை இடத்தைப் பிடிக்க யாரும் வரவில்லையா...?

நகைச்சுவை நடிகைங்கிறதை பெருமையா நினைக்கணும். எல்லாருக்கும் கதாநாயகி ஆசைதான் இருக்கு. எனக்குப் பிறகு கோவை சரளா நிறைய படங்களில் நடிச்சாங்க. நடிக்கிறாங்க. அவங்களுக்குப் பிறகு... யாரும் பெரிய அளவுல நீடிச்சு நிலைக்கலை. யாராவது வருவாங்க... பார்ப்போம்.