அண்மையில் வெளி வந்திருக்கும் படம் 'எவனோ ஒருவன்'. அனைத்து தரப்பினரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ள படம். இப்படத்தின் நாயகன், வசனகர்த்தா, தயாரிப்பில் பங்கு என்று தன் ஆளுமையை நிறுவியிருக்கிறார் மாதவன். அவருக்கு இந்தப் புது அவதாரம் எப்படி இருக்கிறது? அண்மையில் சந்தித்தபோது கேட்டோம்...
இனி மாதவன் தொடர்கிறார்...
எனக்கு தயாரிப்பாளராகணும்னு லட்சியம் இருந்ததில்லை. ஆனா 'எவனோ ஒருவன்' படத்து மேல எனக்கு அவ்வளவு ஆர்வம். அந்தப் படம் மராத்தியில வந்து கலக்கினது. அது மேல அவ்வளவு மோகம் வந்திச்சுன்னே சொல்லலாம். அதனால் உணர்ச்சி வசப்பட்டு இந்த முடிவெடுத்தேன். எல்லாரும் நல்லா கோவாப்ரேட் பண்ணினாங்க. இருந்தாலும் தயாரிப்பு வேலைங்கிறது ரொம்பக் கஷ்டமான வேலைன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.
தயாரிப்பு தொடருமா?
எல்லாமே மளமளன்னு முடிஞ்சு போச்சு. லூக்காஸ் பிலிம்ஸ்னு ஒரு படக்கம்பெனி ஆரம்பிச்சது. படம் ஷுட்டிங் போனது, 27 நாளில் ஒரு முழுப்படம் முடிச்சது, எல்லாமே நம்ப முடியாத அனுபவமாய்... பரபரன்னு நடந்திச்சு.
நாமும் படக்கம்பெனி ஆரம்பிச்சுட்டோம்னு சந்தோஷமா இருந்திச்சு ஆரம்பத்துல. நாமும் கமல் சார் பிரகாஷ்ராஜ் சார் வரிசையில வந்துட்டோம்னு பெருமையா இருந்திச்சு. ஆனால் அதுல காலடியெடுத்து வச்ச பிறகுதான் அதுல எவ்வளவு கஷ்டம் நஷ்டம் இருக்கும்னு தெரிஞ்சுது.
நான் என்னைக்கும் தயாரிப்பாளருக்கு கஷ்டம் கொடுத்ததில்லை. நான் தயாரிப்பு அனுபவத்துல இறங்கின பிறகு தயாரிப்பாளர் மேல ரொம்ப மரியாதையும் அனுதாபமும் வந்திருக்கு.
என்ன கேட்டீங்க? மறுபடியும் தயாரிப்பாளரா படங்கள் எடுப்பேனான்னு... சந்தேகம்தான்... 'எவனோ ஒருவன்' படத்துக்கு ரிசல்ட் நல்லபடி வரட்டும். புதிய புதிய திறமைசாலிகளை ஊக்கப்படுத்த நான் பக்கபலமா இருக்கலாம்னு நினைக்கிறேன்.
'எவனோ ஒருவன்' பட அனுபவம் எப்படி இருந்தது?
படம் நல்லா வந்திருக்கு. ரிலீசும் ஆகியிருக்கு. இந்தப் படத்தை முன்னோட்டம் மாதிரி உலகம் முழுக்க போட்டுக் காட்டியபோது எல்லாரும் ரசிச்சாங்க. கை தட்டினாங்க. அது வழக்கமான ரசிப்பு இல்லை. வழக்கமான கை தட்டல் இல்லை. தியேட்டரை விட்டு வெளியே வந்து அவங்கவங்க புறப்பட்டு போய்டலை. நீண்ட நேரம் பேசிக்கிட்டு அந்தப் பாதிப்பிலிருந்து மீள முடியலைன்னு சொன்னாங்க. இது என் எந்த படத்துக்கும் கிடைக்காத அனுபவம். அதனால இந்தப் படம் எனக்கு திருப்தியும் பெருமையும் கொடுத்திருக்கு.
பாத்திரத் தேர்வு பற்றி?
நாங்க ரொம்ப டைம் எடுத்துக்கிட்டதே ஆர்ட்டிஸ்ட் செலக்ஷனுக்குத்தான். அந்த மிடில்க்ளாஸ் குடும்பத்தலைவியா சங்கீதா எவ்வளவு அச்சுஅசலா பொருத்தமா இருக்காங்கன்னு பார்த்தீங்களா...
அந்தப் படம் வரையற பையனை எங்கே பிடிச்சீங்கன்னு கேட்டாங்க. அது பையன் இல்லை. 42 வயசு மனுஷன். அந்த ஆளை ரொம்ப கஷ்டப்பட்டுப் பிடிச்சோம்.
'தம்பி' ஒர்க்கிங் ஸ்டில்ஸ் - வீடியோவுல இருந்த சீமானைப் பார்த்து அவரோட ஃபேஸ் ரியாக்ஷனைப் பார்த்து இதுல நடிக்க வைக்க டைரக்டர் விரும்பினார். திடீர்னு அவரை நடிக்க வச்சிட்டோம். போலீஸ் இன்ஸ்பெக்டரா அவர் நல்லா பண்ணியிருக்கார் இல்லையா?
அந்த கூல்டிரிங்க்ஸ் கடைக்காரரை நாங்க நடிக்க வைக்க படாதபாடுபட்டோம்.
யதார்த்தமா நடிக்க வைக்க அவ்வளவு கஷ்டப்பட்டோம். ரொம்பக் கஷ்டமான விஷயம் யதார்த்தமாக நடிக்கிறதுதான். அதைத்தான் நாங்க செஞ்சோம்.
மொழி தெரியாத இயக்குனருடன் பணிபுரிந்து அனுபவம் எப்படி இருந்தது?
எனக்கு மராத்தி ஓரளவு தெரியும்கிறதால பிரச்சினை இல்லை. நிஷிகாந்துக்கு தமிழே தெரியாது. ஆனாலும் எந்தவித பிரச்சினையும் எங்களுக்கு வரலை. டைரக்டர் நிஷிகாந்த் டைரக்ட் பண்ற ஸ்டைலே தனி. கொஞ்சம் கூட டென்ஷன் ஆகாம அவ்வளவு நிதானமா பொறுமையா இருப்பார். சரியா அவர் எதிர்பார்ப்பது கிடைக்கும் வரை விடவேமாட்டார். அப்படி ஒரு பர்பக்ஷனிஸ்ட் அவர்.
வசனகர்த்தா அனுபவம் எப்படி இருந்தது?
எனக்கு மராத்தி தெரிஞ்சதால.. நிஷிகாந்த் சொல்றதை தமிழ்ல மாற்றுவது சுலபமா இருந்திச்சு. நான் இதுல துணிச்சலா இறங்க அண்ணன் சீமான் உடன் இருக்கிற நம்பிக்கைதான் காரணம். அவர் வசனங்களை மேற்பார்வை செஞ்சு சரிபண்ணிக் கொடுத்தார். இதுல என்னால சுலபமா எப்படி பண்ண முடிஞ்சுதுன்னா இதுல வர்ற ஹீரோ சாதாரணமானவன். எல்லா கேரக்டர்ஸும் ரொம்ப சாதாரணமானவங்க. அவங்க பேசுறதை எழுதுறது சுலபம்தானே... அதனால் என்னால இதுல கஷ்டமில்லாம செய்ய முடிஞ்சுது.
சரி...'அலைபாயுதே' காலத்தை இப்போது நினைக்க முடிகிறதா?
நான் தமிழ் சினிமாவுக்கு வந்தபோது எனக்கு யாரையும் தெரியாது. 'அலைபாயுதே' படம் வந்தபிறகு என்னை எல்லாருக்கும் தெரியும். ஒரே படத்துல எல்லாருக்கும் தெரிஞ்சவனாயிட்டேன். நான் ஸ்டார் ஆனது சுலபமா நடந்திச்சு. காரணம் மணிரத்னம் சார். ஆனா அதை தக்கவச்சுக்கிறது ரொம்ப கஷ்டமா இருந்திச்சு. எப்படியோ முட்டி மோதி அடிபட்டு கத்துக்கிடேன். அப்படியே நின்னுட்டேன்.
உங்களை சுற்றி பெண் ரசிகைகள் மொய்ப்பதன் காரணம் என்ன?
உண்மையைச் சொல்றேன். இதுவரைக்கும் அந்த ரகசியம் எனக்குப் புரியலை. இருந்துட்டுப் போகட்டுமே விட்டுடுங்களேன். இதைப் பற்றி அடிக்கடி கேட்கிறாங்க. இது ஒரு சந்தோஷமான விஷயம்தானே விட்டுடுங்க.
இப்போது நடித்து வரும் படங்கள்?
தமிழில் 'வாழ்த்துக்கள்' பொங்கலுக்கு ரிலீஸ் ப்ளான் இருக்கு. அப்புறம் 'எவனோ ஒருவன்' இப்ப வந்திருக்கு. இந்தியில் ரெண்டு படம் பண்றேன்.
பெருமைப்படும் விஷயம்?
2000-ல் 'அலைபாயுதே'வில் அறிமுகமானேன். இப்போ... 2007. இதுவரை 38 படம் முடிச்சிருக்கேன். ஒவ்வொரு நாளும் கத்துக்கிறேன். எனக்கு மீடியா பல விஷயங்களைக் கத்துக் கொடுத்திருக்கு. நல்லது கெட்டதை சொல்லிக் கொடுத்திருக்கு. இன்னும் நடிச்சிட்டு இருக்கேன். இதுதான் பெருமையான விஷயம்.