கேமராமேன் என்று சொல்லாதீர்கள் - டி.வி. ராமேஸ்வரன்

Webdunia

திங்கள், 29 அக்டோபர் 2007 (14:17 IST)
"ஓர் ஒளிப்பதிவாளர் வீட்டை விட்டு வெளியே வரலாம். ஆனால் படத்தை விட்டு, கதையை விட்டு வெளியே வரக்கூடாது. தனக்கு பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக அதிகப்பிரசங்கியாக கதை பயணத்தின்போது கரம், சிரம், புறம் நீட்டக்கூடாது" என்கிறார் ஒளிப்பதிவாளர் டி.வி. ராமேஸ்வரன்.

"அதுமட்டுமல்ல 'கேமராமேன்' என்கிற வார்த்தை தவறானது. 'சினிமாட்டோகிராபர்' என்பதே சரி. 'கேமராமேன்' என்றால் வெறும் கேமரா ஆபரேட்டர் என்கிற பொருளைத் தான் தரும். 'சினிமாடோகிராபர்' வெறும் ஆபரேட்டர் அல்ல. அவ‌ன் ஒரு கலைஞ‌ன்... இது பலருக்கு புரியவில்லை" என்றும் கூறுகிறார். இவ்வளவு தெளிவாகவும் துணிவாகவும் பேசுகிற இவர், "பிடிச்சிருக்கு" படத்திற்கு ஒளிப்ப‌திவு செய்துள்ளார்.

இவரது முன்கதை சுருக்கம் என்ன?

சொந்த ஊர் விருதுநகர். சினிமா பின்புலம் இல்லாத குடும்பப் பின்னணி. எப்படியோ இவருக்குள் நுழைந்த சினிமா ஆர்வம், ஏராளமான படங்களை பார்ப்பது, ரசிப்பது, கற்றுக் கொள்வது என்று, ரகசிய காதலாகி வளர்ந்து வந்துள்ளது. விளைவு? பிளஸ் 2வுடன் பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவராகி, 1998ல் ஒளிப்பதிவு பயிற்சியை முடிக்க வைத்துள்ளது.

ஆர்.டி. ராஜசேகரிடம் உதவியாளராக, இணை ஒளிப்பதிவாளராக 150க்கும் மேற்பட்ட விளம்பரப்படங்கள், மின்னலே, மன்மதன், தொட்டி ஜெயா, காக்க காக்க, கஜினி என்று வரிசையாக திரைப்பட அனுபவங்கள் இவருக்கு கிடைத்தன.

திரைப்படக் கல்லூரி படிப்பு, திரைத்துறையில் நடைமுறையில் உணர்ந்த பயிற்சிகள் இவற்றுடன் ஏராளமாக கற்று, முற்றியிருக்கும் ராமேஸ்வரன், இத்தனை நாள் படைகளை திரட்டி வந்தவர், இப்போது தானே போர் களத்தில் குதித்து இருக்கிறார்.

ஆம்! இணை ஒளிப்பதிவாளராக புடம் போட்டு வந்தவர், இப்போது தனி ஒளிப்பதிவாளராக தடம் போட்டு இருக்கிறார். 'பிடிச்சிருக்கு' இவருக்கு முதல் தமிழ் படம்.

திரை ஒளிப்பதிவு பற்றி ஏராளம் பேசுகிறார். எக்கச்சக்கமாய் தகவல்களை தருகிறார். அவரது உற்சாகம் நமக்குள்ளும் பற்றிக் கொள்கிறது. இனி அவருடன் பேசுவோம்.

ராமேஸ்வரன் பார்வையில் எது நல்ல ஒளிப்பதிவு?

ஒரு படத்தை பார்த்துவிட்டு இதில் ஒளிப்பதிவு நன்றாக இருந்தது என்று சொல்லப்பட்டால் அது சரியான ஒளிப்பதிவாக இருக்க முடியாது. ஒளிப்பதிவாளர் தனி ஆளுமை கொண்டவராக தன்னை காட்டிக் கொள்ளவே கூடாது. கதையை, இயக்குனர் விரும்புகிற போக்கில்.. விரும்புகிற திசையில்.. ஒளிப்பதிவு கொண்டு செல்ல வேண்டும். அதுதான் சிறந்த ஒளிப்பதிவு.

அப்படியானால் ஒளிப்பதிவில் தனித்துவம் இருக்கக்கூடாதா?

அதன் அர்த்தம் அப்படியல்ல. ஒரு கதை என்ன? அதன் தளம் என்ன? கதை சொல்லும் பாதை என்ன? என்பனவற்றை அறிந்து கொண்டு, படமாக்கும் முன்பே விவாதித்து, இதை இந்த முறையில் படமாக்குவது என்று பேசி முடிவெடுத்துக் கொண்டு படப்பிடிப்பில் இறங்க வேண்டும். அந்த பணியை சிறப்பாக செய்தாலே தனிப்பட்ட பெயர் கிடைத்துவிடும்.

ஓர் ஒளிப்பதிவாளரின் உழைப்பும், படைப்பாற்றலும், திறமையும் சாதாரண ரசிகனைவிட சினிமா சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரிந்தாலே போதும். அதுவே நல்லது. வெளியே பாமர ரசிகனுக்குத் தெரியாது என்றால் அவர் இயக்குனரைவிட மேலாதிக்கம் செலுத்தியவர் ஆகிறார்.

தொழில்நுட்பங்கள் நாள்தோறும் வளரும் நிலையில் இன்றைய ஒளிப்பதிவாளருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்?

"கற்பனை திறன், ரசிப்புத் தன்மை வேண்டும். இயக்குனரின் கதை சொல்பவராக ஓர் ஒளிப்பதிவாளர் இருந்தாலும், அவருக்கு மற்ற துறை கலைலைஜ்னர்களுக்கு நல்ல புரிதல் வேண்டும்.

ஒளிப்பதிவாளருக்கு கதாசிரியரின் பார்வை மட்டுமல்ல, நடன இயக்குனர், ஸ்டண்ட் இயக்குனர், கலை இயக்குனர், நடிப்பவர்கள், படத் தொகுப்பாளர், இவ்வளவு ஏன்?.. மேக்கப்மேன், காஸ்டியூமர் பார்வையும் தேவைப்படுகிறது.

இப்படி எல்லோரது எண்ணங்களுடன் நல்ல புரிதல் வேண்டும். அதுமட்டுமல்ல; தினந்தோறும் வளர்ந்து வரும் தொழிநுட்பத்தை அறிந்து கொள்ளும் ஆர்வமும் ஈடுபாடும் மிக மிக தேவை. லேட்டஸ்ட் டெக்னாலஜி தெரியாமல் யாரும் இனிமேல் பிரகாசிக்க முடியாது என்கிற நிலை உள்ளது" என்று கூறும் ரமேஸ்வரன், நவீன தொழில்நுட்பம் குறித்த தேடலில் தீராத மோகம் கொண்டுள்ளவர்.

பல விளம்பரப் படங்களுக்கு ராமேஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் செய்தவற்றுள் பிரபலமானதற்கு உதராணமாக 'ஆச்சி மசாலா'வை குறிப்பிடலாம்.

"விளம்பரங்களில் சில நொடிகளில் கருத்தை சொல்ல வேண்டும். சினிமாவில் சில மணி நேரத்தில் கதை சொல்ல வேண்டும் இது தான் வேறுபாடு" என்ற்கிறார் ராமேஸ்வரன்.

'பிடிச்சிருக்கு' பட அனுபவத்தில் என்ன இவருக்கு பிடிச்சிருகு?

காலம் இப்போது மாறிவிட்டது. ஒளிப்பதிவாளரை வெறும் கேமராவை கையாள்பவராக இப்போது எவரும் பார்ப்பதில்லை. அவரையும் ஒரு படைப்பாளியாகவே பார்க்கிறார்கள். ஒரு படம் தொடங்கும் முன்பே இப்போதெல்லாம் எப்படி எடுக்கப் போகிறோம் என்று ஒளிப்பதிவாளருடன் விவாதம் நடக்கிறது.

'பிடிச்சிருக்கு' படத்தின் பாத்திரங்களுக்கு காஸ்ட்யூம்ஸ் அதாவது உடைகள் தேர்வில் கூட எனக்கு பொறுப்பு அளிக்கப்பட்டது. என்னென்ன நிறங்கள் தேவை என்று என்னை முடிவெடுக்கச் சொன்னார்கள்.

வெகு எதார்த்தமான படமாக 'பிடிச்சிருக்கு' வந்துள்ளது. அதற்கு காரணம் இயக்குனர் கனகு எனக்கு அளித்த சுதந்திரம். அதுவே எனக்கு பொறுப்பாக மாறிவிட்டது.

இவர் கையாண்ட, கையாள இருக்கிற தொழில் நுட்பம் பற்றி கூறுவாரா?

இன்று எல்லாத்துறையிலும் கம்ப்யூட்டர் எய்டெட் டெக்னாலஜி வந்துவிட்டது. அதாவது கணினி மயமாக்கும் வேலைகளை துரிதமாகவும் துல்லியமாகவும் செய்கிற தொழில்நுட்பம். எல்லாத் துறைகளையும் போல சினிமாவில் இது இன்னமும் வரவில்லை. Computer Aided Cinimatography தமிழ் சினிமாவில் சரியாக பிரபலமாகவில்லை.

அதை செய்ய நான் ஆர்வமாக இருக்கிறேன். கேமராவை வெறும் மேனுவல் ஆக இயக்கும் நிலையே இங்கு உள்ளது. அதை கம்ப்யூட்டர் மயமாக்கினால் நல்ல பலனை தரும்.

அதுமட்டுமல்ல. எனக்கு விஷுவல் எபெக்ட்ஸ் செய்வதிலும் ஆர்வமுண்டு. இதன்படி, நடைமுறையில் சாத்தியமில்லாத விஷயங்களை ஒளிப்பதிவு செய்ய முடியும். இதற்கு உதாரணம் 'ஸ்பைடர்மேன்' படம்.

பிலிம் கிரேடிங் என்ற பழைய முறை உள்ளது. இப்போது டிஜிட்டல் இன்டெர்மீடியட் என்று வந்துள்ளது. 'மன்மதன்' படத்தில் இம்முறையில் பணியாற்றிய அனுபவம் எனக்குண்டு.

இன்னும் ஹாலிவுட்டுக்கு இணையாக நம்மால் செய்ய முடியும், அதற்குரிய செலவுகளை செய்யத் தயாராக இருந்தால்..." என்கிற ராமேஸ்வரன், தனது உதாரண ஒளிப்பதிவாளர்களாக பி.சி. ஸ்ரீரமையும், ஆர்.டி. ராஜசேகரையும் குறிப்பிடுகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்