இப்போது ஜீவாவின் ரத்தநாளங்களில் ஓடிக் கொண்டிருப்பது ரத்தம் மட்டுமல்ல 'கற்றது தமிழ்' படமும் கூட. எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் ஜீவாவின் ஜீவனுக்குள் நுழைந்து ஆக்கிரமிக்கும் சக்தி 'கற்றது தமிழ்' படத்துக்கு மட்டுமே இருப்பதை அவரது பேச்சின் மூலம் உணர முடிகிறது.
தான் நடித்த இந்த ஒரு படத்தின் மூலம் தான் கற்றது, பெற்றது, மகிழ்ந்தது, நெகிழ்ந்தது, வியந்தது, பயந்தது, தெரிந்தது, புரிந்தது, கரைந்தது, உறைந்தது என் ஏராளமான அனுபவங்கள்... என பரவசப்படுகிறார்.
`தமிழ் எம்.ஏ.' படம் இப்போது 'கற்றது தமிழ்' என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. இப்படம் பற்றிப் பேச ஆரம்பித்ததுமே ஜீவாவின் முகத்தில் உற்சாக ஊற்று பீறிடுகிறது.
"நான் இதுவரைக்கும் ஏழு படங்களில் நடிச்சிருக்கேன். அந்த ஏழு படங்களில் நடிச்ச மொத்த அனுபவமும் பரவசமும் இந்த `கற்றது தமிழ்' ஒரே படத்தின் மூலம் கிடைச்சிட்டுது. தமிழ் சினிமாவின் 75 ஆண்டு கால சரித்திரத்தில் குறிப்பிட்டுச் சொல்ற சில படங்களில் `கற்றது தமிழ்' ஒரு படமா இருக்கும். இந்தப் படத்துக்காக ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கோம். அந்த உழைப்புக்கு நிச்சயம் பலன் கிடைக்கும் என்று சிலிர்க்கிறார்.
இந்தப் படத்தில் ஜீவாவுக்கு மூன்று தோற்றங்கள் வருவது போலுள்ளதே...?
"மூன்று கெட்அப்னு சொல்றதை விட ஒரு கேரக்டரின் மூன்று விதமான ஸ்டேஜ். அதாவது ஒரே நபர் வெவ்வேறு காலங்களில் வரும் தோற்றம். ஸ்கூல் லைஃப், காலேஜ் லைஃப், கடைசியில் மனசு பாதிப்புக்குள்ளான ஒரு கட்டம் இப்படி, மூன்று ஸ்டேஜ் உண்டு. கடைசியில் வர்ற தாடி வச்சிருக்கிற கேரக்டர் பண்ணத்தான் மேக்கப் போட ரொம்ப நேரம் எடுத்துக்கிட்டோம். விடியற்காலை தாடி ஒட்ட ஆரம்பிச்சால் ரெண்டு மணி நேரத்துக்கும் மேல் ஆகும். இந்தப் படத்துக்காக நிறைய படிச்சேன். நிறைய உழைச்சேன்" என்கிறார்.
`கற்றது தமிழ்' இமேஜ் மற்ற சாதாரண படங்களில் நடிக்க இடையூறாக அமையுமா?
"அப்படி சொல்ல முடியாது. ஒரு நல்ல படத்தில் நடிக்கும்போது மரியாதை கிடைக்கும். பாராட்டு கிடைக்கும். கேரக்டரை நல்லா செலக்ட் பண்ணி நடிக்க ஊக்கம் கொடுக்கும். அதே நேரம் அதே மாதிரி எல்லாப் படங்களையும் எதிர்பார்க்கவும் முடியாது. கிடைக்கவும் கிடைக்காது. இதுமாதிரி படம் எப்போதாவதுதான் வரும்."
"அப்படியென்றால் மற்றவை சாதாரண படங்கள் என்கிறாரா ஜீவா?"
"நான் சொல்ல வர்றது அது அல்ல. ஒரு நடிகனின் வாழ்க்கைல ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ரகம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு அனுபவத்தைக் கொடுக்கும். நல்லது, கெட்டதுன்னு பிரிச்சுப் பார்க்கிறதை விட அனுபவமா ஏத்துக்கணும். கமர்ஷியலா சக்சஸ் ஆன படம்னா கெட்டப்படமல்ல. அது மட்டமான படமுமல்ல. அதுக்கும் உழைச்சிருக்கோம். ஆனா `கற்றது தமிழ்' மாதிரி மூர்க்கமா உழைக்கிற - வேலை வாங்குகிற அனுபவம் எல்லாப் படங்களிலும் கிடைக்கிறது இல்லை. அந்த சப்ஜெக்டும் டைரக்டரும் கேட்டால்தான் இப்படி வாய்ப்பு கிடைக்கும்" என்று சமாளிக்கிறார்.
எல்லாரும் கிசுகிசுவில் மாட்டிக் கொள்ளும் போது ஜீவா மட்டும் எப்படி தப்பித்துக் கொண்டிருக்கிறார்? ஒரு தயாரிப்பாளரின் மகனாக இருந்து கொண்டு எப்படி தப்பிக்கிறார்? யாரும் இவருக்கு காதல் வலை வீசவில்லையா?
"என்னைப் பற்றி கிசுகிசு வரலை. நிஜம்தான். நான் அந்த அளவுக்கு வளரலையோ என்னமோ? என்னுடன் நடிக்கும் நடிகைகள் கெஸ்ட்ரோல் போல வந்து போறாங்க. அதனால ரொம்பப் பழக வாய்ப்பில்லை. இந்த `கற்றது தமிழ்' படம் பாருங்க. எங்க ரெண்டு பேருக்கும் நெருக்கமான காம்பினேஷனுக்கே வழியில்லை. இந்த நிலையில் பழகவே வாய்ப்பில்லை" கவலைப்பட்டார்.
ஜீவாவுக்கு பெண் பார்ப்பதாகவும் பேச்சு உள்ளது. நிச்சயதார்த்தம் என்று கூட ஒரு தகவல்...
"அப்படியெல்லாம் எதுவுமில்லை. இருந்தால் உங்களிடம் சொல்லாமலா?" என்று ஏகத்துக்கும் வெட்கப்பட்டார்.
இந்த அளவுக்கு எதிர்பார்ப்புள்ள `கற்றது தமிழ்' படத்துக்கு ஆடியோ ரிலீஸ் அதாவது பாடல்கள் வெளியிட கோரி போராட்டம் நடத்தும் அளவுக்குப் போய்விட்டதே? ஜீவா என்ன நினைக்கிறார்?
"ஒரு படத்துக்கு வெள்ளோட்டம் போல அறிமுகமா அமையுறது பாடல்கள். படம் பற்றிய பேச்சை ஆரம்பிச்சு வைக்கிறது ஆடியோ. ரேடியோ, டிவி, இண்டர்நெட்டுன்னு அது இன்னைக்கு பெரிய விரிவான தாக்கத்தை கொண்டதா இருக்கு. அப்படி இருக்கும்போது அது தாமதமானது. அதனால போராட வேண்டியிருந்திச்சு. அதுல எக்கச்சக்க பார்மாலிட்டிஸ் இருக்கும் போலிருக்கு. டெக்னிக்கல் காரணங்கள் சொன்னாங்க... இப்போ நிலைமை சரியாய்டுச்சு" என்றார்.
"நண்பர் ஜீவாவுக்காக தனுஷ் போராட்டத்தில் கலந்து கொண்டாரே...?"
"ரொம்ப சந்தோஷமா இருக்கு. பெருமையா இருக்கு. நான் வெளியூர் ஷுட்டிங்கில் இருந்தேன். என்னால கலந்துக்க முடியலை. எனக்காக வந்த தனுஷுக்கு என் நன்றி. இந்தப் படத்துக்காக இளையராஜா சார் முழுக்க முழுக்க இலவசமா... எந்தத் தொகையும் வாங்காம ஒரு பாட்டு பாடிக் கொடுத்திருக்கார். அதெல்லாம் எவ்வளவு பெரிய விஷயம். அப்படி இருக்கும்போது பாட்டே ரிலீஸ் ஆகலைன்னா... மனசுக்கு கஷ்டமாத்தானே இருக்கும். சரி... எல்லாம் நல்லபடியா முடிஞ்சாச்சு" என்று முடித்துக் கொண்டார் ஜீவா.