இளைய தலைமுறை நடிகர்களில் ஓசைப்படாமல் முன்னேறி வருபவர் நரேன். 'சித்திரம் பேசுதடி'யின் வெற்றி இவரைப் பற்றி சிந்திக்க வைத்தது.
அண்மையில் வந்திருக்கும் 'பள்ளிக்கூடம்' பாராட்டுகளைத் தேடிக் கொடுத்திருக்கிறது. சமீபத்தில் நரேனுக்கும் பாடகி மஞ்சுவுக்கும் திருமணம் ஆகியிருக்கிறது. ஒரு மாலைப்பொழுதில் மகிழ்ச்சியலையடிக்கப் பேசினார் நரேன்.
படங்களுக்கிடையே உங்களுக்கு இடைவெளி வந்துவிடுவது ஏன்?
webdunia photo
WD
தமிழில் நடித்துக் கொண்டிருந்த போது மலையாளப் படமும் செய்தேன். அதனால் வந்த குறை இது. இனி தமிழில் கூடுதலாகக் கவனம் செலுத்த எண்ணியிருக்கிறேன். எனக்குத் தெரிந்தவர் என்று சினிமாவில் யாருமில்லை. தொழிலின் சாதக பாதகங்கள் எனக்கு அவ்வளவாகப் பிடிபடவில்லை. இப்போது ஓரளவுக்குத் தெளிவு வந்திருக்கிறது. இந்தப் புரிதல் வராததால்தான் இந்த மாதிரி பிரச்சினை. ஒரு நடிகனுக்கு சரியான கால இடைவெளியில் அடுத்தடுத்து படம் வரவேண்டும். அதிகமாக இடைவெளிவரக் கூடாது. இதை நான் ஒப்புக் கொள்கிறேன். இனியும் இதுபோன்று கேள்விக்கு இடம் இருக்காது. நான் 'பள்ளிக்கூடம்' முடித்து இரண்டு மலையாளப் படம் பண்ணினேன். அதனால் இடைவெளி போல் தெரிகிறது. ஒரு மொழியில் இப்படி இடைவெளி விழாமல் இனி பார்த்துக் கொள்வேன்.
படங்கள் தேர்ந்தெடுப்பதில் எது உங்கள் கொள்கை?
கதை மனசுக்குப் பிடிக்க வேண்டும். அதுதான் முக்கியம். சொல்கிறபடி எடுப்பார்கள் என்கிற நம்பிக்கை வரவேண்டும். மற்றவை எல்லாம் இதற்குப் பிறகுதான். கேரக்டர்கள் ரிபீட் ஆகக்கூடாது என்பது என் கொள்கை. 'சித்திரம் பேசுதடி'யில் அடிதடி ஆள். நல்லவனாக மாறுகிற கதை. 'நெஞ்சிருக்கும் வரை'யில் தன் காதலுக்காக எதையும் செய்யத் துணிகிற வாலிபன். 'பள்ளிக்கூடம்' படத்தில் பொறுப்பான கலெக்டர். ஐ.ஏ.எஸ். அதிகாரி. அவனுக்குள் புதைந்து கிடக்கும் மென்மையான காதல். இப்படி வித்தியாசம் இருக்கிறது. இது இனியும் தொடரும்.
மீண்டும் மிஷ்கினுடன் இணைந்துள்ளது பற்றி...?
சந்தோஷமான விஷயம். மிஷ்கின் என் லைஃப்பில் முக்கியமான மனிதர். 'சித்திரம் பேசுதடி' எனக்கு மறக்க முடியாத படம். ஒரு ஆர்ட்டிஸ்டுக்கு முதல் வெற்றி என்பது மிக முக்கியம். அப்படி எனக்கு முதல் வெற்றியைத் தேடிக் கொடுத்தவர் மிஷ்கின். மீண்டும் அவருடன் இணைவதில் சந்தோஷம். முதல் படத்தில் அடியாள் என்றாலும் இதில் போலீஸ் வேடம் கொடுத்திருக்கிறார். முன்பு 'சத்தியசோதனை' என்று இருந்த பெயர், இப்போது 'ஆறுவது சினம்' என்று மாற்றப்பட்டிருக்கிறது. இதில் என் கேரக்டர் பெயர் சத்யா.
காதல் திருமணம் செய்து கொண்டிருக்கிறீர்கள் உங்களுக்கு காதல் மலர்ந்த கதை எப்படி?
நான் முதலில் அவங்களைப் பார்த்தது இரண்டு வருஷத்துக்கு முன் கேரளாவில் கைரளி சேனல் நடத்திய ஹலோ குட் ஈவ்னிங் நிகழ்ச்சிக்கு வந்திருந்தபோது சந்திச்சேன். சொன்னால் நம்ப முடியாது. முதல் பார்வையிலேயே ஒரு ஈர்ப்பு வந்தது. உடனே எனக்கு ஒரு பயம் - சந்தேகம். அது காதலா இல்லை வெறும் பருவக் கவர்ச்சியா... புரியலை. சந்தேகம் தொடர்ந்தது. மறுபடியும் ஒரு சந்திப்பு. மிஸ் கேரளா போட்டிக்கு வந்தாங்க. அதில் அவங்களுக்கு மிஸ் டேலண்ட் பரிசு கிடைத்தது. பிறகுதான் பேசினோம்.
வீட்டில் எதிர்ப்பு இல்லையா?
இரண்டாவது சந்திப்புக்குப் பின் மிகவும் நெருங்கிவிட்ட உணர்வு வந்துவிட்டது. எங்கள் வீட்டுக்கு கூப்பிட்டேன். வீட்டுக்கு வந்த பிறகு அரைமணி நேரம் பேசினேன். நான், என் தொழில், சினிமா பற்றி தெளிவாக எடுத்துச் சொன்னேன். அதில் என் விருப்பத்தை வெளியிட்டேன். மஞ்சுவின் பதிலை எதிர்பார்த்தேன். சற்றுநேரம் மெளனம். போகும்போது எங்கப்பா அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கிட்டு போனாங்க. அதுவே அவங்களின் சம்மதமாக இருந்தது. எனக்கு சந்தோஷம். அவங்க மூன்று படங்களில் பாடிய பாடகி என்று தான் நினைத்தேன். மெளனத்திலேயே பேசத் தெரிந்த பெண் என்று அன்றுதான் தெரிந்து கொண்டேன்.
நீங்கள் இப்படி நடிக்கவேண்டும் இப்படிக் கூடாது என்று எதுவும் மனைவி கண்டிஷன் போடுவதுண்டா?
webdunia photo
WD
அப்படி எதுவுமில்லை. நான் என் தொழில்பற்றி அதன் யதார்த்தம் பற்றி இதிலுள்ள கஷ்ட நஷ்டங்கள் பற்றி விரிவாகப் பேசியதுண்டு. அதனால் சினிமாத் தொழில் பற்றிய முழுமையான புரிதல் உண்டு. 'பள்ளிக்கூடம்' படத்தில் நான் சினேகாவுடன் நெருக்கமாக நடிக்கும்போது பயந்தேன். தயங்கினேன். ஆனால் தங்கர் சார் 'சீன் நல்லா வரலைன்னா செயற்கையா தெரியும்'னு அப்படி நடிக்கச் சொன்னார். நடிக்கும் போது கூட அவ்வளவு தெரியவில்லை. படம் பார்த்தபோது ரொம்ப நெருக்கமான சீனாத் தெரியவே - ரொம்ப பயந்தேன். ஆனால் மஞ்சு புரிஞ்சுக்கிட்டாங்க.
மனைவி வந்த பிறகு உங்களுக்குப் பிடித்த நடிகை யார் என்று சொல்வீர்களா?
எனக்கு அஸினை ரொம்பவே பிடிக்கும். ஆனால் அஸினுடன் நான் இன்னமும் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. இது என் மனைவி மஞ்சுவுக்கும் தெரியும். என் மனைவியை என்னுடன் வாழ்க்கையில் எப்போதும் கூட வருகிற லைஃப் பார்ட்னராகவே பார்க்கிறேன். ஒரு நல்ல தோழியா எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளும் ப்ரண்டாகவே நினைக்கிறேன். அந்த வகையில் ஐ யம் லக்கி!