காய்க்கிற மரம்தான் கல்லடிபடும் என்பார்கள். சிம்பு பற்றி வரும் வம்புச் செய்திகளே அவரை உயரே கொண்டு செல்கிறது எனலாம். எப்போதும் சிம்பு பற்றி ஏதாவது செய்திகள். அவற்றை சிம்பு எப்படி எதிர்கொள்கிறார்?
webdunia photo
WD
"சில நேரம் எல்லாத்துக்கும் பதில் சொல்லணும்னு தோணும். அது வேண்டாத வீண் வேலைங்கிற தெளிவும் பொறுமையும் நிதானமும் இப்போ வந்திருக்கு. நாம போக வேண்டிய இடம் வேறன்னு உள் மனசு எச்சரிக்கும். நான் சண்டை போட வந்தவனில்லை. ஏதாவது சாதிக்கணும்னு வந்தவன்" என்கிறார் தெளிவாக.
இந்த தெளிவுக்குப் பின்னால் இருப்பது எது? அறிவுரையா? அனுபவமா?
"அறிவுரையால கத்துக்கிட்டவங்க கம்மிதானே. அறிவுரை எல்லாரையும்போல எனக்கும் பிடிக்காதுதான். அடிபட்டு அனுபவப் பட்டால்தான் சரியாப் புரியுது. என் அப்பா சினிமாவுல இருந்தாலும் நான் அடிபட்டுக் கத்துக்கிட்டபிறகுதான் தெளிவு கிடைச்சிருக்கு. அதனால நான் அதிகம் பேசுறதில்லை. வெளி நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துக்க விரும்புறதில்லை. எல்லாமே பொய்யாத் தோணுது. ஒரு படம் பூஜைக்கு வர்றாங்கன்னு வையுங்க. அறுபது சதவீதம் பேர் இந்தப் படம் முழுசா எடுக்கக்கூடாது. எடுத்தாலும் ஓடக்கூடாதுன்னு நினைக்கிறாங்க. நாற்பது சதவீதம் பேர்தான் நிஜமா வாழ்த்த வர்றாங்க. இதனால்தான் நான் ஒதுங்கியே இருக்கேன்."
நெகடிவ்ரோல் சைக்கோ கேரக்டரில் நடிக்க ஆர்வமாக இருப்பது ஏன்?
"மத்த ஹீரோக்கள் அப்படி பண்றதில்லை. அதனால நான் பண்றேன். ஏதாவது வித்யாசம் வேணுமில்லையா? ஒரு நல்ல விஷயம். என்னன்னா நெகடிவ் மாதிரி தோன்றினாலும் அப்படி நான் நடிச்ச கேரக்டரை ஏத்துக்கறாங்க. என் படங்கள்ல பெண்களை மோசமா காட்றாங்கன்னு கூட கேட்கிறாங்க. அது தவறு. 'மன்மதன்' படத்துல நல்ல ஜோதிகாவை விட்டுட்டு வேற கெட்ட கேரக்டரை மட்டும் எடுத்துக்கிட்டாங்க. இங்கே எல்லாமே தப்பா புரிஞ்சுக்கப்படுது. அதுதான் எனக்கு வருத்தம்."
சிம்பு நடிக்கும் பாத்திரங்களில் காதல் தோல்வி இடம்பெறுவதாகக் கூறுவதை ஏற்பீர்களா?
"என்ன வயசு... என்ன அனுபவம்... இப்படி என்னைக் கேட்டால்... எனக்கு இப்போ வயசு இருபத்து மூணு. இப்போ இதுமாதிரி விஷயங்கதான் அதிகம் பாதிக்குது. ஏன்னா கேட்கிறது, பார்க்கிறது, கேள்விப்படறது, சந்திக்கிறது காதல் சம்பந்தப்பட்டதா இருக்கு. அது வெற்றியோ தோல்வியோ? ஒரு அஞ்சு வருஷம் ஆனா எனக்கு கல்யாணம் ஆகியிருக்கும். அப்போ இந்த விஷயங்கள் மாறியிருக்கும். திருமணத்துக்குப் பிறகு குடும்பம் கணவன், மனைவி, குழந்தைகள்னு கேள்விப்படற விஷயமே வேறாகி இருக்கும். அப்போ குடும்ப உறவுகள் பற்றிப் படம் எடுக்கலாம்."
இளைய தலைமுறை நடிகர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
"நிறைய பேர் வர்றாங்க. நல்ல விஷயம். எங்களுக்குள் போட்டி பொறாமை இல்லை. ஏன் போட்டி கூட இருக்கும் பொறாமை இருக்காது. ஆனால் மீடியாதான் எங்களுக்குள் சிண்டு முடியுற வேலையைச் செய்துக்கிட்டிருக்கு. எனக்கும் தனுஷுக்கும் இடையில் என்னென்னமோ கதை பண்ணினாங்க. எதைப் பேசினாலும் தப்பா அர்த்தம் கொடுத்தாங்க. ரெண்டு பேரும் சந்திச்சு பேசியபோது எல்லாம் முடிஞ்சு போச்சு. அதனால இந்த சலசலப்புக்கெல்லாம் மனசு தளரக்கூடாது. இப்ப நிறையபேர் வர்றாங்க. ஏன்... லேட்டஸ்ட்டா எஸ்வி சேகர் அங்கிள் சன் அஸ்வின்சேகர் வந்திருக்கார். என் கூட சாந்தோம் ஸ்கூல்ல படிச்சவர். இதுல எனக்கு சந்தோஷம். இப்ப `தொட்டால் பூ மலரும்' படத்துல பி.வாசு சார் மகன் ஷக்தி வந்திருக்கார். நல்லா பண்ணியிருக்கார். அவர் வசனம் பேசறப்போ கூட என்னை மாதிரி விரலைக்காட்டிப் பேசுறாராம். இதுபற்றி என்கிட்ட கேட்டாங்க. நான் மட்டுமா விரல்ல ஸ்டைல் பண்ணனும். அவர் விரல் அவர் காட்டட்டும்னு சொன்னேன். எப்படி வம்பு வருது பாருங்க. ஒருத்தரை ஒருத்தர் பாராட்ட கத்துக்கணும். நான் 'வல்லவன்' டைம்ல இந்த நல்ல விஷயத்தை கமல் சார்கிட்டே கத்துக்கிட்டேன். 'வல்லவன்' படத்துல 'லூசுப்பெண்ணே' பாட்டுல உங்களை மாதிரி - கல்யாணராமன் கெட்டப்புல பல் வச்சிட்டு நடிக்கிறேன்னு சொன்னேன். முதுகில் தட்டிக் கொடுத்துப் பாராட்டினார். அது கமல் சாரோட பெருந்தன்மை. அது எல்லார்கிட்டேயும் இருக்கா?
பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்து பட்டை தீட்டிக் கொள்ள ஆசை இல்லையா?
"வாய்ப்பு வரலை. அதுதான் நிஜம். நான் இப்போ என்னைத் தேடி 'இதுக்கு சிம்புதான் வேணும்'னு தேவையோட வர்றவங்க படத்துல மட்டும்தான் நடிக்கிறேன். யார்கிட்டேயும் என்னை வச்சிப் படம் பண்ணுங்கன்னு கேட்கிறதில்லை. இப்போ வர்ற புது டைரக்டர்களும் நல்லா பண்றாங்க. டெக்னிக்கல் சைடுல ரொம்ப தெரிஞ்சு வச்சிருக்காங்க. அதனால இப்போ வர்றவங்க நாளைக்குப் பெரியவங்கதான்னு சொல்வேன்."
இந்தியில் இரண்டு ஹீரோ - மல்டி ஹீரோஸ் சப்ஜெக்ட் சகஜமாக இருக்கிறது. இங்கு அப்படி செய்யத் தயங்குவது ஏன்?
"அங்கே அதை ஏத்துக்கறாங்க. அப்படி நடிச்ச பல படங்கள் சூப்பரா சக்சஸ் ஆகப்பட்டு இருக்கு. இங்கே அந்த மனநிலை இல்லை. கதை, கேரக்டர் பேலன்சிங்கா இருக்கணும். கடஅவுட் பெரிசு சின்னதா வச்சால் கூட பிரச்சினையாய்டுது. ரசிகர்கள் இப்படி ரெண்டு ஹீரோ படங்களை ஏத்துக்க முன் வந்தால் பண்ணலாம்."
காளை, கெட்டவன், சிலம்பாட்டம் என மூன்று படங்களில் ஒரே நேரத்தில் நடிப்பது எப்படி?
"முதலில் 'காளை' வரும். அதில் எனக்கு நல்ல கேரக்டர். பாட்டி-பேரன் பாசம். யாருக்கும் அடங்காதவன்கிறதால காளைன்னு படத்துக்குப் பெயர். என் கேரக்டர் பெயர் ஜீவா. 'கெட்டவன்' சைக்கோ கலந்த மாதிரியான கதையமைப்புள்ள படம். அதில் நான் கதைக்குத் தேவைப்பட்டதால் நாலைந்து கெட்டப்ல வருவேன். படம் பரபரப்பா பேசப்படும்படியா இருக்கும். 'சிலம்பாட்டம்' சரவணன் டைரக்ட் பண்றபடம். எல்லா அம்சங்களும் இதில் இருக்கும்னு சொல்லலாம். இதில் டபுள் ஆக்ட் பண்றேன்."
நடிக்கும் எல்லாப் படங்களிலும் பாடுவது தொடர்கிறதா?
"ஏத்தமாதிரி வாய்ப்பு வந்தால் மட்டும் பாடறேன். பாடியே ஆகணும்னு கேட்கிறதில்லை. தினா இசையில் சில பாடல்கள் பாடியிருக்கேன். எனக்கானபடி சரியா செட் ஆனா கூப்பிட்டுப் பாட வைப்பார் தினா. 'பொறுக்கி' படத்துல நான் ஒரு பாட்டுப் பாடியிருக்கேன். அதுல நான் நடிக்கலையே."
நடிப்பு டைரக்ஷன் எதற்கு இப்போது முக்கியத்துவம்?
"டைரக்ஷன் வேலைப் பளு, டென்ஷன் அதிகமுள்ள வேலை. அது இப்போ முடியாது. 'வல்லவனு'க்குப் பிறகு நடிப்புலதான் முழு கவனம் செலுத்துறதுன்னு முடிவு பண்ணிட்டேன். 'கெட்டவன்'ல கதையில் என் பங்கு இருக்கும். ஆனால் டைரக்ட் பண்றது நந்து. அதனால் இப்போ நடிப்புதான். டைரக்ஷன் எப்போ வேணும்னாலும் பண்ணிக்கலாம்.