`சித்திரம் பேசுதடி'யில் அறிமுகமான பாவனா, ரசிகர்கள் இதயங்களில் அழியாத சித்திரமாகியிருக்கிறார். கதாநாயகி என்றாலே கவர்ச்சி நாயகி என்பது எழுதப்படாத சட்டமாக இருக்கிறது. ஆனால் இதில் விதிவிலக்காக இருப்பவர் பாவனா. தேர்ந்தெடுத்த படங்களில் நடிக்கிறார். குடும்பப் பாங்கான பாத்திரங்களில் மின்னுகிறார். இனி பாவனா...!
படங்களைத் தேர்வு செய்வதில் எது உங்கள் பாலிசி...?
முதலில் என் கேரக்டர் பிடிக்கணும். அப்புறம் கதை. டைரக்டர் எப்படிங்கிறது கதை சொல்றபோதே கண்டுபிடிச்சிட முடியும். இதுதான் என் பாலிசி. நடிக்கிறபோது கதை சொன்னபடி இருக்குதா படம் முடிஞ்ச பிறகு நாம நடிச்சது எல்லாம் படத்தில் வருதாங்கிறது வேற விஷயம். சிலர் மட்டும்தான் சொன்னதை கொஞ்சமும் மாறாம எடுப்பாங்க. நம்பிக்கை வச்சித்தான் நடிக்கச் சம்மதிக்கிறோம். சில நேரங்களில் சீன்ஸை கட் பண்ணிடறாங்க. அப்போ நம்மால ஒண்ணும் பண்ண முடியறதில்லை.
கிளாமராக நடிப்பது தவிர்க்க முடியாதது அல்லவா...?
என்னிடம் இந்தக் கேள்வியை கேட்பது நியாயமா? நான் கிளாமரா பண்றது இல்லை. இந்த முடிவில் தெளிவா தீர்மானமா இருக்கேன். இதனால எனக்கு வர்ற படங்கள் வந்துகிட்டுத்தான் இருக்கு. என் பாலிசி இதுதான்னு தெரியுது. அதனால கிளாமர் பண்ணுங்கன்னு யாரும் கேட்கிறதில்லை. அதனால எனக்கும் பிரச்சினையில்லை. பாவனான்னா இப்படிப்பட்ட ரோல்தான் பண்ணுவாங்கன்னு அவங்களுக்கே தெரியுது. அதனால நோ ப்ராப்ளம்.
இன்றைக்கு முன்னணியில் இருக்கிறவங்க எல்லாருமே கிளாமராக நடிக்கிறார்களே...?
எல்லாரையும் அப்படிச் சொல்ல முடியாது. இப்ப அசின் இருக்காங்களே அவங்க கிளாமர் ஆர்ட்டிஸ்ட்டா... அவங்க கிளாமர் பண்ணாமலேயே டாப்ல வரலையா... நானும் அப்படி ஒரு ஆர்ட்டிஸ்ட்டா வரவே விரும்பறேன்.
நம்பர் ஒன் ஆசை உண்டா?
முன்னுக்கு வர ஆசை உண்டு. அதை நம்பர் ஒன்னுண்ணு நினைக்க வேண்டாம். நல்ல ஆர்ட்டிஸ்ட்னு பெயர் எடுக்கணும். ஏன்னா யார் நம்பர் ஒன்னுங்கிற ஸ்கேல் இங்கே வேற வேற விதமா பேசப்படுது. நான் அதுக்குள் போக விருமலை. ஏன்னா நம்பர் ஒன் யார்னா நிறைய படங்கள் வச்சிருக்கிறவங்க, ஹிட் படங்களில் நடிக்கிறவங்க, சில படம் நடிச்சாலும் அது சூப்பர் ஹிட் ஆகிற மாதிரி படங்களில் நடிக்கிறவங்க... பெரிய ஹீரோ கூட மட்டும் நடிக்கிறவங்க... இப்படி ஒவ்வொருத்தரும் வேற வேற விளக்கம் தர்றாங்க. அதனால நான் அதுக்குள் போக விருமபலை.
'நான் கடவுள்' படத்தில் நடிக்காமல் போனது ஏன்?
அது மறக்க முடியாத நல்ல படமா இருக்கும்கிற நம்பிக்கை எனக்கு இருந்திச்சு. இன்னைக்கும் இருக்கு. ஆனாலும் படம் டிலே ஆய்ட்டே போச்சு. நான் கொடுத்த தேதிகளை அவங்க பயன்படுத்திக்கலை. வீணாய்டுச்சு. இது பாலா சார் யூனிட்டுக்கே தெரியும். இதனால என் மற்ற படங்களும் பாதிக்கிற நிலைமை. என்னால வெயிட் பண்ண முடியலை.
நல்ல படத்துக்காக ஹீரோக்கள் காத்திருப்பதில்லையா?
அவங்க நிலைமை வேற. ஒரு படம் ஒரு ஹீரோவோட கேரியரை மாற்றிடும். அதுக்குப் பிறகு அவங்க மார்க்கெட், சம்பளம் எல்லாமே தலைகீழா மாற வாய்ப்பு இருக்கு. ஆனா ஹீரோயின் நிலைமை வேற. என்னதான் கஷ்டப்பட்டு நடிச்சு நல்ல பெயர் வாங்கினாலும் பிரமாதமான கேரக்டர் அமைஞ்சாதான் பாராட்டு கிடைக்கும். அவங்க கேரியர்ல ஒரு நல்ல படம். ஹிட் படம் அப்படிங்கிற நிலைமை மட்டும்தான். உடனே மளமளன்னு பத்து படங்கள் வந்திடாது. உடனே சம்பளம் தாறுமாறா உயர்த்திக் கொடுத்திட மாட்டாங்க. இதுதான் யதார்த்தம். அதனால ஒரு நல்ல படத்துக்காக நாலு படங்களை இழக்கிற சூழ்நிலை எனக்கு வேண்டாம்னுதான் 'நான் கடவுள்' படத்திலிருந்து விலக வேண்டியதாச்சு.
உங்களுக்கு விலங்குகள் அபிமானம் உண்டா?
நான் ப்ளூகிராஸ் மெம்பர். எனக்கு விலங்குகள் மீது அபிமானம் - அனுதாபம் உண்டு. `வாழ்த்துகள்' படத்துல மூணு நாய் நடிக்கும். என் கூட ரொம்ப பாசமா பழகியது... அதுங்களுக்குன்னு சில தர்ம நியாயங்கள் இருக்கு. மனுஷங்க கிட்டே அது கிடையாது. சாப்பாடு போட்டவங்களை நாய் என்னைக்கும் மறக்காது. மறுபடி அவங்களைப் பார்க்கும்போது நிச்சயமா வாலாட்டும். அந்த நன்றியுணர்ச்சி மனுஷனிடம் இருக்கா? இப்படி ஒவ்வொரு விலங்கிடமும் குணம் இருக்கு. நான் நடிப்பில் பிஸியா இருக்கிறதால ப்ளூகிராஸ் ஆக்டிவிடிஸ்ல ஈடுபட முடியலை. வெறும் அனுதாபியா மட்டும் இருக்கேன்.
அண்மையில் எதை எண்ணி சந்தோஷப்பட்டீர்கள்?
ஒரு நிகழ்ச்சின்னு சொல்ல முடியாது. என் கேரியர் பற்றி நினைச்சா திருப்தியா இருக்கு. 'கிழக்கு கடற்கரை சாலை', 'கூடல் நகர்' நிறைய எதிர்பார்த்தேன். ஏமாற்றம். ஆனாலும் `தீபாவளி' ஹிட் ஆனதில் சந்தோஷம். அதிலும் ஜெயம் ரவி-பாவனா ஜோடி லக்கி ஜோடின்னு கூட பத்திரிகைல எழுதியிருந்தாங்க. இப்ப நடிக்கிற `ராமேஸ்வரம்' படத்துல எனக்கு நல்ல கேரக்டர். திருப்தியா இருக்கு. இலங்கையிலிருந்து அகதியா வர்ற ஒருத்தரை விரும்புற பெண்ணா நடிக்கிறேன். `வாழ்த்துகள்' சீமான் சார் டைரக்ட் பண்ற படம். கதை, டயலாக் எல்லாமே நல்லா இருக்கு. நல்ல தமிழ்ல டயலாக் பேசப்படும். அதுல பேசி நடிச்ச பிறகு தமிழ் பேச நிறைய கத்துக்கிட்டேன். தெலுங்கில் 'ஒண்டரி'ன்னு ஒரு படம். தனிமைன்னு அர்த்தம். இதிலும் சொல்லிக்கிற மாதிரி கேரக்டர் இப்படி என் கேரியர் திருப்தியா போய்க்கிட்டிருக்கு.