"பாலி" அண்மையில் வெளியான படம். நட்சத்திர பலம், பிரம்மாண்டப் பின்னணி, விளம்பர வெளிச்சம் இவை எதுவும் இப்படத்துக்குக் கிடைக்கவில்லை என்றாலும் பல பெரிய படங்களில் இல்லாத செய்நேர்த்தி "பாலி"யில் இருந்தது நிஜம். "பாலி"யில் குறிப்பிட்டுச் சொல்லும் படி இருந்த இசையை யாரும் மறக்க முடியாது. அந்த இசைக்குச் சொந்தக்காரர் பகவத். இனிமையிலும் நவீன தொழில்நுட்பத்துடன் செய்திருந்த ஒலிப்பதிவிலும் பளிச்செனத் தெரிகிறார் பகவத்.
இனி பகவத் பேசுவார்!
உங்கள் இசைப் பின்புலம் என்ன?
எனக்கு சிறு வயதிலிருந்தே இசை ஆர்வம் இருந்தது. என் மாமா, அதாவது அக்கா கணவர் தான் சந்திரபோஸ். அவர்தான் எனக்கு கிடார் சொல்லிக் கொடுத்தார். பல இசையமைப்பாளர்களின் குழுவிலும் வாசித்தேன். கங்கை அமரன் குழுவில் பத்து ஆண்டுகள் மேடைக் கச்சேரியில் வாசித்து இருக்கிறேன். உலகில் பல நாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறேன். பல இசையமைப்பாளர்களுக்கு சினிமாவுக்கு கீபோர்டு வாசித்தேன். வித்யாசாகர், தேவா இப்படி வாசித்த நான், "பார்வை ஒன்றே போதுமே" படத்துக்குப் பரணிக்கு வாசித்தேன். என் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் பார்த்த பரணி நீங்களே தனியே இசையமைக்கலாம். அந்தத் தகுதி வந்துவிட்டது என்றார். எனக்குள் இருந்த ஆர்வம் ஆசையானது. முதலில் ஒப்பந்தமான படம் "கலக்குறே சந்துரு". இதே பெயரில் இப்போது ஒரு படம் வந்துவிட்டதால், "கலக்கப் போவது யாரு" என்று மாற்றப்பட்டுள்ளது. என்னை மிகவும் ஊக்குவித்தவர் "ஜாலி" இசையமைப்பாளர் கவி.
சினிமாவுக்கு இசையமைக்கும் தகுதி வந்துவிட்டதாக எப்போது உணர்ந்தீர்கள்?
நான் அடிப்படையில் ஓர் இசை ரசிகன். இசையின் உன்னதங்களை அழகாக ஆழமாக ரசிப்பவன். நல்ல இசையற்புதங்களை நான் ரசிப்பதை எடுத்துக் காட்டிப் பேசுவதைப் பார்க்கும் நண்பர்கள் இவவளவு ஆர்வமுள்ள நீயே ஏன் இசையமைக்கக் கூடாது என்பார்கள். பரணி எனக்கு அந்தத் தகுதி வந்துவிட்டதாக மனப்பூர்வமாகக் கூறினார். இவற்றை வைத்து எனக்கு நம்பிக்கை வந்தது.
ரசிகர்களின் ரசனையை எப்படி அறிய முடிகிறது?
நாங்கள் பல மேடைக் கச்சேரிகளில் ரசகிர்கள் முன் கச்சேரி நடத்ததியிருக்கிறோம். அவர்களை நேருக்கு நேர் சந்தித்து அவர்களின் எதிர்பார்ப்பு ஆர்வம் ரசிக்கும் இசை போன்றவற்றை அறிய முடிந்தது. ஒரு கச்சேரியில் எந்தப் பாடல் ரசிக்கப்படுகிறது எதனால் ரசிக்கப்படுகிறது என்பதை நேருக்கு நேர் அறிய முடிகிற வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. இது ஒரு பெரிய வாய்ப்பு. அதனால் ஆடியன்ஸ் மனநிலையை படிக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கும். எந்த மொழிப் பாடலாக இருந்தாலும் எதனால் அது ரசிக்கப்படுகிறது என்பதையும் அறிந்துகொள்ள முடிந்தது. என் ஆர்வத்தை புரிந்து கொண்ட லதா ரஜினி மேடம் எனக்கு ரஜினி 25 ஆல்பத்தில் பணியாற்ற வைத்தார்கள். 2001ல் வெளியான ரஜினி 25 ஆல்பம் உள்பட லதா மேடத்திற்கு ஆல்பங்களிலும் எனக்கு இசைப் பொறுப்பு கொடுத்தார்கள். இது என்னால் மறக்க முடியாத அனுபவம்.
"பாலி"க்கு முன் இசை அனுபவம்..?
"பாலி"க்கு முன்பு லதா ரஜினி மேடத்தின் ஆல்பங்கள். ரவீந்தர் கேமராமேன் இயக்கிய டெலிபிலிம் "நமக்குள் இருக்கட்டும்" படத்துக்கு இரண்டு பாடல்கள் இசையமைத்தேன். பிறகு "ஒடி வந்த மாப்பிள்ளை" அதன் தயாரிப்பாளர் குணாநிதி. பிறகு நிறைய தொடர்களுக்குப் பின்னணி இசையமைத்தேன். பதினைந்து தொடர்கள். சுமார் ஆயிரம் எபிசோட்ஸ். ஒரு கட்டத்தில் தொலைக் காட்சித் தொடர்களுக்குப் பின்னணி இசை என்பது எனக்குச் சலிப்பூட்டியது. புதிது புதிதாக செய்ய விரும்பியதால்தான் சினிமாப் பக்கம் வந்தேன்.
இப்போதைய சினிமா இசை குத்துப் பாட்டு பாணிக்குப் போய்விட்டதே..?
இந்தக் குத்துப் பாட்டுக்கள் நீண்டகாலம் ரசிக்கப்படாது. என்றைக்கும் மெலடிககுத் தான் மரியாதை. காலத்தைக் கடந்து நிற்பது மெலடிதான். அதிலும் வரிகள் புரிகிற மாதிரி இருக்கிற மெலடிதான் என்றும் நிலைக்கும். இன்றைக்கும் அன்றைய எம்.எஸ்.வி, கே.வி.மகாதேவன் இசை நிலைத்து நிற்கக் காரணம் இனிய இசையும் புரிகிற வரிகளும் இருப்பதால் தான்.
இசையில் யாரை உங்கள் முன்னோடியாக நினைக்கிறீர்கள்?
இசையில் நிறைய ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒரு வகையில் என்னைக் கவர்ந்திருக்கிறார்கள். என்னை என் மாமா சந்திரபோஸ் மிகவும் இம்ப்ரஸ் செய்திருக்கிறார். அருகிலிருந்து பார்த்ததால் இதைச் சொல்கிறேன். இளையராஜா பரபரப்பாக இருந்த காலகட்டத்தில் 1986ல் ராஜா சார் 13 படங்கள் இசையமைத்தார். என் மாமா சந்திரபோஸ் 22 படங்கள் இசையமைத்தார். அந்த அளவுக்கு கமர்ஷியலாக வெற்றி பெற்றார். ராஜா சார் மீது எனக்கு தனி மதிப்பு உண்டு. இசைக்கு தனி மரியாதையைத் தேடிக் கொடுத்தவர் அவர். "பாலி" படத்துக்குக் கூட அவரை மனதில் வைத்துக் கொண்டுதான் இசையமைத்தேன். யார் பாணியும் சாயலும் இல்லாத இசை தரவே நான் விரும்புகிறேன்.
"பாலி" அனுபவம் எப்படி?
"பாலி" என்கிற வாத்தியத்தைப பற்றி இயக்குநர் ஏசுதாஸ் சொன்ன போது எனக்கு ஆர்வமாக இருந்தது. அதைக் கொண்டு வந்து காட்டிய போது அதுமாதிரி ஒன்று செய்து அதன் இசையைப் பயன்படுத்தினோம். அது ஏறக்குறைய ஷெனாய் போல இருந்தது. "பாலி" படத்தைப் பொறுத்த வரை இசை முக்கியம் என்பதில் இயக்குநர் தெளிவாக இருந்தார். அதனால் இசை நன்கு வர வேண்டுமென்பதற்காக செலவைப் பற்றி கவலைப்படாமல் நான் கேட்ட வசதிகளைச் செய்து கொடுத்தார்கள். டி.டி.எஸ்.முறையில் ஒலிப்பதிவு என்பதற்கெல்லாம் சம்மதித்தார்கள். லைவ் ஆர்க்கெஸ்ட்ரா பண்ணினேன். இதற்கு செலவு ஆகும். தரம் வேண்டும் என்பதற்காக தயாரிப்பாளர் ஏற்றுக் கொண்டார். முதல் படம் ஒரு மியூசிக்கல் சப்ஜெக்டாக அமைந்ததில் எனக்கு மகிழ்ச்சி. எல்லா பத்திரிகைகளும் பாராட்டி உள்ளது பெருமைப்பட வைக்கிறது.
இப்போது இசையமைத்து வரும் படங்கள்?
"கலக்கப் போவது யாரு", "அகதி", "யோகி" ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறேன். மேலும் மூன்று புதிய பட வாய்ப்புகள் வந்துள்ளன. சாயல் இல்லாத புதிய இசை தர நல்ல வாய்ப்புக்காகக் காத்திருப்பதில் தவறில்லை. காத்திருக்கிறேன்.